மார்ச் 2025-இல் முடிவடையும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5% முதல் 7.0% வரை வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பான 7.2%-க்கு குறைவாக உள்ளது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எந்த முக்கிய காரணிகள் வடிவமைக்கின்றன?
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் பணவியல் அல்லது சந்தை மதிப்பாகும். இது ஒரு நாட்டின் பொருளாதார நிலையினை வெளிப்படுத்துகிறது. மேலும், அதன் பொருளாதாரத்தின் அளவு மற்றும் வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது "தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புள்ளியியல் குறிகாட்டியாக" கருதப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. அவை, பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி.
பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி: இது பணவீக்கம் அல்லது பணவாட்டத்தை காரணியாக்காமல் தற்போதைய சந்தை விலையில் மதிப்பிடப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பைக் குறிக்கிறது. இது தற்போதைய உள்நாட்டு உற்பத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி: ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பொருளாதாரத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் அளவு இரண்டையும் பிரதிபலிக்கும் பணவீக்க-சரிசெய்யப்பட்ட அளவீடு ஆகும்.
இறுதி GDP மதிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு GDP மதிப்பீடுகள் மூன்று முறை திருத்தப்படுகின்றன:
முன்கூட்டிய மதிப்பீடுகள் (Advance Estimates (AE)): இது நிதியாண்டின் முதல் 7-8 மாதங்களுக்கான உயர் அதிர்வெண் குறிகாட்டிகளை (விற்பனைத் தரவு அல்லது தொழில்துறை வெளியீடு போன்றவை) அடிப்படையாகக் கொண்டது. இவை ஒவ்வொரு துறையிலும் பொருளாதார நடவடிக்கைகளின் அளவை கண்காணிக்கப் பயன்படுகிறது.
திருத்தப்பட்ட மதிப்பீடு (Revised Estimate (RE)): முதல் திருத்தப்பட்ட மதிப்பீடானது, நிதியாண்டின் இறுதிக்குள் குறிப்பிட்ட துறைகளுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய உண்மையான நிதியை அடிப்படையாகக் கொண்டது. RE என்பது பட்ஜெட் மதிப்பீடுகளுக்கு ஒரு எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுகிறது மற்றும் நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இறுதி மதிப்பீடுகள்: அனைத்துத் துறைகளிலும் விரிவான தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு
2023-24 பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, மார்ச் 2025-இல் நிதியாண்டு முடிவடையும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5% முதல் 7.0% வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கணிப்பு 7.2% மற்றும் கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வு கணிப்பு 8.2% GDP வளர்ச்சியை விட குறைவாக உள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான உண்மையான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7.6% இருந்தது.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன், கணிக்க முடியாத வானிலை முறைகள், வளர்ந்த பொருளாதாரங்களில் உள்ள நிதிச் சந்தை நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களின் வளர்ச்சி விகிதங்களை மோசமாகப் பாதிக்கும் புவிசார் அரசியல் குழப்பங்கள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பல ஆபத்து காரணிகளை எடுத்துரைத்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் 3.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியாவின் பொருளாதார வலிமை உலகத்தால் உன்னிப்பாக ஆராயப்பட்டது. தெற்காசிய நிறுவனமானது இப்போது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 8.0% எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
இருப்பினும், ஆசியாவின் மற்ற முக்கியப் பொருளாதார சக்தியான சீனாவுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து "வளர்ந்து வரும் பொருளாதாரம்" (“emerging economy”) என்று வகைப்படுத்தப்படுகிறது. அதன் பெரிய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது குறைந்த தனிநபர் வருமானம் போன்ற காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம். இது விரைவான பொருளாதார விரிவாக்கம் இருந்தபோதிலும் சவாலாக உள்ளது.
காலாண்டு மற்றும் வருடாந்திர அறிக்கைகளின் முக்கியத்துவம்
இந்தியப் பொருளாதாரத்திற்கான காலாண்டுத் தரவு பின்வருமாறு வெளியிடப்படுகிறது.
1வது காலாண்டு (Q1): ஜனவரி-மார்ச்
2வது காலாண்டு (Q2): ஏப்ரல்-ஜூன்
3வது காலாண்டு (Q3): ஜூலை-செப்டம்பர்
4வது காலாண்டு (Q4): அக்டோபர்-டிசம்பர்
காலாண்டு தரவுகளை வெளியிடுவதில் சில மாதங்கள் தாமதமாகிறது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), GDPயின் ஆண்டு மற்றும் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள் குறுகிய இடைவெளியில் பொருளாதாரத்தின் இயக்கத்தை அளவிட பயனுள்ளதாக இருக்கும். பேரியல் பொருளாதார சூழ்நிலையில் அடிக்கடி புதுப்பிப்புகளை வழங்குவதற்கு இது உதவுகிறது, இதனால் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்புடைய கொள்கை நடவடிக்கைகளுக்கு சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்யலாம்.
காலாண்டு மதிப்பீடுகளின் முக்கிய நன்மை, பொருளாதார வீழ்ச்சியின் ஆரம்ப குறிகாட்டியாக செயல்படும் திறன் ஆகும். உதாரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு தொடர்ச்சியான காலாண்டு சரிவுகள் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என்பதைக் குறிக்கிறது. காலாண்டு மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பற்றிய வழக்கமான நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் தரவின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்துகின்றன.
அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்கள் பொருளாதாரத்தின் மந்தநிலையை சுட்டிக்காட்டுகின்றன. NSO-ன் இரண்டாவது காலாண்டின் 2024-25 (ஜூலை-செப்டம்பர் 2024) புள்ளிவிவரங்கள், உண்மையான GDP வளர்ச்சியானது, முதலாவது காலாண்டின் 2024-25 (ஏப்ரல்-ஜூன் 2024) மற்றும் 8.1% இருந்து இரண்டாவது காலாண்டின் 2023-24 (ஜூலை-செப்டம்பர் 2023) 6.7% குறைந்தது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் 5.4% ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பண்டிகைக் கால தேவை (பண்டிகைகளின் போது நுகர்வு அதிகரிப்பு), மற்றும் விவசாயத் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியால் தூண்டப்பட்ட கிராமப்புற செயல்பாடுகள் போன்ற பல காரணிகளால் பொருளாதாரம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) அதன் சமீபத்திய கூட்டத்தில் 2024-25 நிதியாண்டுக்கான இந்தியாவின் GDP கணிப்பு 7.2%-லிருந்து 6.6% ஆக திருத்தப்பட்டுள்ளது. இந்த தரமிறக்கம் இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க பல சாதகமான காரணிகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவை:
ஆரோக்கியமான காரீஃப் பயிர் மற்றும் சிறந்த ராபி விதைப்பு, விவசாயத் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
தொழில்துறையின் எதிர்பார்க்கப்படும் இயல்புநிலை.
தேர்தலுக்குப் பிந்தைய அரசாங்க மூலதனச் செலவு அதிகரிக்கப்பட்டது.
சேவைத் துறையின் தொடர்ச்சியான மற்றும் வலுவான வளர்ச்சி.
மேலே உள்ள அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ரிசர்வ் வங்கியின் 2024-25 நிதியாண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சியை 6.6% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 6.8% ஆகவும், நான்காவது காலாண்டில் 7.3% ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் சேவைத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக மூன்றாவது காலாண்டின் தரவு இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது. அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக தொழில்துறை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில பொருளாதார வல்லுநர்கள் ரெப்போ விகிதத்தை 6.5%-லிருந்து குறைப்பதன் மூலம் உதவியிருக்கலாம் என்று கருதுகின்றனர். இது ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவால் மாற்றப்படவில்லை. இருப்பினும், அதன் டிசம்பர் 2024 கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரொக்க கையிருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படை புள்ளிகளால் (bp) 4% ஆக குறைத்து, வங்கி அமைப்பில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது.
மீரா மல்ஹான் மற்றும் அருணா ராவ் ஆகியோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்கள்.