போபால் யூனியன் கார்பைடு கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிக்கல் - பிரியலி பிரகாஷ், வாசுதேவன் முகுந்த்

 பிதாம்பூரில் உள்ள மக்களுக்கு, உமிழ்வுகள் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலையை நிவர்த்தி செய்வதற்காக மத்தியப் பிரதேச அரசானது கழிவுகளை எரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 


ஜனவரி 2-ம் தேதி அன்று, மத்தியப் பிரதேச அரசாங்க அதிகாரிகள் போபாலில் செயல்படாமல் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் (Union Carbide) இருந்து தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழில்துறை நிலையத்துக்கு 358 டன் அபாயகரமான கழிவுகளை மாற்றினர். 4,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற மற்றும் ஆயிரக்கணக்கானோரைக் காயப்படுத்திய அல்லது சுகவீனப்படுத்திய எரிவாயுவின் பேரழிவு நிகழ்வானது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அன்று, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு நான்கு வார காலக்கெடுவை நிர்ணயித்தது. 


கழிவுகளின் நிலை என்ன? 


1984 டிசம்பர் 2-3 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் ஏற்பட்ட பேரழிவானது, உரங்களை உற்பத்தி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து கசிந்த நச்சு வாயுக்களின் விளைவாகும். ஆலையில் உள்ள கழிவுகளில் இந்த உரங்களை தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் இருந்தன.


பல வருடங்களாக போபாலில் வைக்கப்பட்டதால், சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து பல மனுக்கள் வந்த பிறகு, மத்தியப் பிரதேச அரசு கழிவுகளை எரிக்க முடிவு செய்தது. இது, கிட்டத்தட்ட 200 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூரில் உள்ள ஒரு சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியுள்ள கிடங்கில் (treatment, storage, and disposal facility (TSDF)) இதைச் செய்ய அவர்கள் திட்டமிட்டனர். அபாயகரமான கழிவு மேலாண்மை விதிகளின்படி (Hazardous Waste Management Rules) கழிவுகளை பேக் செய்து லேபிளிட (packaged and labelled) அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர்கள் அதை பாதுகாப்பான நீண்ட தூர கொள்கலன்களில் கொண்டு சென்றனர்.


ஆனால், இந்தக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளுக்குப் பயந்து, தொழில்துறை நகரத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்கள் அரசின் திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. 


ஜனவரி 6, 2025 அன்று, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதில், கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நீதிமன்றம் அரசுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்தது. இதற்கு அரசு தரப்பில், கழிவுகளை அகற்றும் செயல்முறை குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் மாநில அரசு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்டனர். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதே அவர்களின் நோக்கமாகும்.


ஒன்றிய அரசு மாநிலத்திற்கு ₹126 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கழிவுகளை எரிக்கப் பயன்படுத்தப்படும். இந்தச் செயல்முறையிலிருந்து கிடைக்கும் எச்சங்கள் சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியுள்ள (treatment, storage, and disposal facility (TSDF)) குப்பைக் கிடங்கில் வைக்கப்படும்.


பீதாம்பூர் எதற்கு? 


2007-ம் ஆண்டில், மத்தியப் பிரதேச அரசு குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு TSDF-ல் சில கழிவுகளை அப்புறப்படுத்த முயன்றது. இந்த வசதி ஒரு எரிப்பு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த வசதி கழிவுகளை ஏற்க மறுத்துவிட்டது.


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் பிதாம்பூர் இடமானது கிடங்கில் கழிவுகளை பாதுகாக்க மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்தது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரே சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி கிடங்கு (TSDF) இதுதான் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) கூறியது. இங்கு ஒரு குப்பைக் கிடங்கு (landfill) மற்றும் ஓர் எரிசிதைப்பு உலையும் (an incinerator) உள்ளது.

2013-ம் ஆண்டில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை (affidavit) சமர்ப்பித்தது. இதில், யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வரும் கழிவுகளை பிதாம்பூர் TSDF கையாள முடியும் என்பதை பிரமாணப் பத்திரம் உறுதிப்படுத்தியது.


அதற்கு அடுத்த ஆண்டு, இப்போது ஒரு பத்தாண்டிற்கு முன்பு மத்தியப் பிரதேசம் ஒரு 'சோதனை ஓட்டத்தை' (trial run) ஏற்பாடு செய்தது. இதன் போது ராம்கி குழுமத்தால் (Ramky Group) இயக்கப்பட்ட சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி கிடங்கில் (TSDF) 10,157 கிலோ கழிவுகளை எரித்தது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களின் நிபுணர்களின் உதவியுடன் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த செயல்முறையை கண்காணித்தது. உள்ளூர் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக அரசு இரகசியமாக எரிக்கும் தேதியை சில நாட்களுக்கு முன்கூட்டியே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை (Bhopal Gas Tragedy Relief and Rehabilitation Department) இயக்குநர் சுதந்திர குமார் சிங், சோதனையிலிருந்து வெளியேற்றப்படும் உமிழ்வுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதாகக் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் அல்லது பொது சுகாதாரத்தில் எந்த எதிர்மறையான விளைவுகளும் இல்லை என்று மாநில மக்கள் தொடர்பு அலுவலகமும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள கழிவுகளை அதே முறையில் எரித்து அப்புறப்படுத்தலாம் என்று இது பரிந்துரைத்தது.


கழிவுகள் தீங்கு விளைவிப்பதா? 


'சோதனை' கழிவுகள் பல்வேறு வகைகளைக் கொண்டிருந்தன. 4.8 டன் தோண்டியெடுக்கப்பட்ட கழிவுகள், 1.6 டன் மிதப்பதப்படுத்தப்பட்ட எச்சங்கள், 1.3 டன் நாப்தால் கழிவுகள், 1.3 டன் கார்பரில் எச்சங்கள் மற்றும் 0.8 டன் உலை எச்சங்கள் இருந்தன. ஆலையில் அவற்றின் மிகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு கழிவு வகையின் நிறை ஒதுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. நாப்தால் என்பது நாப்தால்-1 ஆகும். இது கார்பரைல் (carbaryl) உற்பத்தியில் ஒரு முன்னோடியாகும். இது ஆலை தயாரிக்க வடிவமைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியாகும்.


டிசம்பர் 2024-ம் ஆண்டில், CPCB போபாலின் பிராந்திய இயக்குநர் (மத்திய) பிதம்பூர் TSDF-ஐச் சுற்றியுள்ள ஐந்து நீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதித்ததாக மாநில மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பு பகிர்ந்து கொண்டது. இந்த அறிக்கை (WW24.25-188.189) குப்பைக் கிடங்கிற்கு அருகிலுள்ள இரண்டு திறந்தவெளி கிணறுகளில் உள்ள நீர் நிறம், குளோரைடு, சல்பேட், ஃப்ளோரைடின் செறிவுகள், கடினத்தன்மை மற்றும் மொத்த கரைந்த திடப்பொருட்களின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியது என்பதைக் காட்டுகிறது. இந்த மதிப்புகள் IS 10500-ல் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளை மீறியது.


இருப்பினும், பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அதிக மதிப்புகள் நிலத்தடி நீரின் பொதுவான தரத்தை பிரதிபலிப்பதை நம்புவதாக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்புகள் TSDF செயல்பாடுகளுடன் இணைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.


குறிப்பிடப்படாத ஊடக அறிக்கைக்கும் இந்த வெளியீட்டால் பதிலளித்தது. TSDF-ஐச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு தோல் நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறியது. போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்கள் (Indian Council of Medical Research surveyed) 12 கிராமங்களை ஆய்வு செய்தனர். இந்த கிராமங்களில் தோல் மற்றும் சுவாச நோய்கள் பரவுவது தேசிய சராசரியை விட குறைவாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


2015-ம் ஆண்டில் நம்பகமான ஊடக அறிக்கைகள், எரிக்கப்பட்ட கழிவுகளைவிட நான்கு மடங்கு சாம்பல் மற்றும் எச்சங்கள் உருவாகியுள்ளதாகக் கூறின. இந்தக் கழிவுகளை குப்பைக் கிடங்கில் அப்புறப்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) குறிப்பிட்டது. சாயக்கழிவுகள் மண்ணில் வெளியேறுவதைத் தடுக்க பாதுகாப்புகளையும் இது செயல்படுத்தும்.


அபாயகரமான கழிவுகளைக் கொண்ட குப்பைக் கிடங்குகளில் உள்ள கலவையான லைனர்கள் (composite liners) சிதைவடையும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency (EPA)) கூறியுள்ளது. இந்த லைனர்களை வழக்கமான இடைவெளியில் மீண்டும் நிறுவ வேண்டும்.


அடுத்து என்ன? 


மத்தியப் பிரதேச அரசு, கழிவுகளை எரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இரண்டு முறை தற்கொலை முயற்சிகள் உட்பட உள்ளூர் ஆர்ப்பாட்டங்கள், அகற்றும் செயல்முறையின் பாதுகாப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜனவரி 4-ம் தேதி, போராட்டக்காரர்கள் TSDF மீது கற்களை வீசினர். கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி காணாமல் போனதாக வதந்திகள் பரவின. பின்னர் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.


சுமார் 50 முதன்மை பயிற்சியாளர்களை தயார் செய்துவரும் நிலையில் உள்ளது. இவர்களில் அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர். கழிவுகளின் சரியான நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். பின்னர், எந்தவொரு தவறான தகவலையும் சரிசெய்ய அவர்கள் மக்களைத் தொடர்புகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்னொரு சோதனை ஓட்டம் இருக்கும். 90 கிலோ எடையுள்ள ஒரு தொகுதி 1,200ºC வெப்பநிலையில் எரிக்கப்படும் என்று சிங் கூறினார். நாப்தால்-1 போன்ற பெரும்பாலான கரிம சேர்மங்கள் 590-650ºC வெப்பநிலையில் அழிக்கப்படுகின்றன என்று EPA கூறுகிறது. 980-1,200ºC-ல் அபாயகரமான கழிவு எரியூட்டிகளை இயக்குவதன் மூலம் கழிவுகளிலிருந்து கரிமப் பொருட்களை அகற்ற முடியும்.


இதன் விளைவாக ஏற்படும் உமிழ்வுகள் சட்ட வரம்புகளை மீறவில்லை என்றால், மீதமுள்ளவை மூன்று மாதங்களுக்கு தலா 270 கிலோ தொகுதிகளாக எரிக்கப்படும். உமிழ்வுகள் வரம்பை மீறினால், தொகுதி அளவு குறைக்கப்படும் என்று சிங் தி இந்துவிடம் தெரிவித்தார். கால அளவு ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். உயர் நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை பிப்ரவரி 18-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.




Original article:

Share: