சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுடன், அரசாங்கத்தின் உயர்மட்ட நிலைகளிலிருந்து, வங்காளதேசத்திற்கான செய்தி தெளிவாக இருக்க வேண்டும். இந்தியா எந்த குறிப்பிட்ட அரசாங்கத்தையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.
வங்கதேசத்தில் நீண்ட காலம் பதவி வகித்த ஷேக் ஹசீனா, அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு நாளையோடு ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. தற்போது அரசாங்கம் தயாராக இல்லை. மேலும், உளவுத்துறை அமைப்புகள் அரசியல் மாற்றங்களைக் கண்டறியவோ அல்லது புரிந்து கொள்ளவோ தவறிவிட்டன. எதிர்பார்த்தபடி, இன்று ஹசீனா இந்தியாவில் இருக்கிறார். அதே நேரத்தில், இந்தியா தனது பொது நடவடிக்கையில் தேவைக்கேற்ப எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இருப்பினும், வங்காளதேசத்தின் மாறிவரும் தலைமையுடன் ஈடுபடுவதற்கும் எதிர்காலத்திற்கான திட்டத்திற்கும், அதன் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
முகமது யூனுஸின் கீழ் தற்போதைய வங்காளதேச ஆட்சி ஹசீனாவை நாடு கடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதை இந்த சூழல் விளக்க உதவுகிறது. இந்த நிலைமை இந்தியா-வங்கதேச உறவுகளுக்கு அப்பாற்பட்டது. வங்கதேசத்தில் நிலவும் நிலையற்றத் தன்மை இந்தியாவைப் பாதிக்கலாம். "சட்டவிரோத குடியேறிகள்" (illegal immigrants) (வங்கதேசியர்களைக் குறிப்பிடுவது) பற்றிய அரசியல் விவாதம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம். வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்தியாவின் வடகிழக்கில், குறிப்பாக மணிப்பூரில், நிலையற்றதாக உள்ள பகுதியில் பதட்டங்களை அதிகமாக வைத்திருக்கிறது. கூடுதலாக, வங்காளதேச இந்துக்களுக்கு எதிரான வன்முறை கவனம் செலுத்த வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.
ஆயினும்கூட, தற்போதைய நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம் ஹசீனாவின் "சர்வாதிகார மற்றும் திமிர்பிடித்த" தலைமைத்துவ பாணி என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். அதே நேரத்தில், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், முகமது யூனுஸ் ஆட்சியானது நாட்டை நிலைநிறுத்தத் திறன் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, சுதந்திரமான மற்றும் மதச்சார்பற்ற வங்காளதேசத்தை எதிர்க்கும் சக்திகள் மீண்டும் பலம் பெற்றுள்ளன. சிறுபான்மை இந்து மக்களிடையே மோசமடைந்துவரும் வகுப்புவாத நிலைமை மற்றும் வளர்ந்துவரும் பதட்டம் முக்கியமாக இன்றைய அரசியல் சூழலால் ஏற்படுகிறது. வங்காளதேசத்தின் சமூக-கலாச்சார மதிப்புகளால் அல்ல.
இது முக்கியத்துவமான நிலையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா வங்காளதேசத்தின் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது அதில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாவது இஸ்லாமிய உலகில் ஒரு தனித்துவமான நிகழ்வு ஆகும். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான், ஒரே மதத்தைப் பகிர்ந்து கொண்டாலும், பொதுவான அம்சம் என்பது மிகக் குறைவு. வங்காளதேச விடுதலைக்குப் பிறகு, 1947-ம் ஆண்டு மத அடிப்படையில் இந்திய துணைக் கண்டத்தைப் பிரிப்பதற்காக வரையப்பட்ட ராட்க்ளிஃப் கோடு (Radcliffe Line), இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான 4,000 கி.மீ எல்லையாக மாறியது. இதில் 2,200 கி.மீ.க்கும் அதிகமான பகுதி மேற்கு வங்காளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு வலுவான வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்பு உள்ளது. இது இரண்டு முக்கிய உண்மைகளில் தெளிவாகிறது. வங்காளதேசத்தின் தேசியக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். அதன் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் எழுதியது. இந்த உண்மைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இருவரும் ஆதரிக்கும் மனிதநேயத்தின் மதிப்புகள் வங்கதேசத்தின் நெறிமுறைகளுடன் ஒருங்கிணைந்தவையாக உள்ளன.
இந்த தொடர்புகள் காரணமாக 1947 முதல் இந்தியா-வங்காளதேச எல்லை தெளிவற்றதாகவே உள்ளது. இன்றும்கூட, வங்காளதேசத்தில் காலை உணவு சாப்பிடுவது, மதிய உணவிற்கு இந்தியாவிற்குள் செல்வது மற்றும் இரவு உணவிற்கு வங்காளதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமான சூழ்நிலையாக உள்ளது. நான் எல்லை மாவட்டமான முர்ஷிதாபாத்தில் வளர்ந்தேன். இந்த அனுபவத்தை, நேரடியாக அனுபவித்தேன். வங்காளதேசத்தில் உள்ள ராஜ்ஷாஹி நகரம் எனது மாவட்டத்தில் இருந்து தெரியும். மேற்கு வங்காள மக்களுக்கும் 1971ம் ஆண்டில் வங்காளதேச விடுதலைக்கு வழிவகுத்த இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பால் எனது பொது வாழ்க்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
1971 சுதந்திரப் போர் மதத்தைப் பற்றியது அல்ல, மாறாக பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பற்றியது. கிழக்கு பாகிஸ்தானின் மீதான மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கம், கிழக்குப் பகுதி மக்களின் நல்வாழ்வைவிட விரிவாக்கம் முக்கியமானது என்ற ஜெர்மன் கருத்துருவான லெபன்ஸ்ராம் போன்றது. மில்லியன் கணக்கான வங்காளமொழி பேசும் மக்கள் மீது உருது மொழியைத் திணித்தது வங்காள மொழி இயக்கத்திற்கு வழிவகுத்தது. கிழக்குப் பகுதிக்கு மிகக் குறைந்த வளங்களை ஒதுக்கியது பரவலான கோபத்தை ஏற்படுத்தியது.
1971 போருக்கு வழிவகுத்த முக்கிய நிகழ்வுகள் : போலா சூறாவளியால் (Cyclone Bhola) பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறியது, ஆபரேஷன் சர்ச்லைட் (Operation Searchlight) (யாஹ்யா கானின் கீழ் பாகிஸ்தான் இராணுவத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலை ஒடுக்குமுறை), மற்றும் மில்லியன் கணக்கான அகதிகள் இந்தியாவிற்கு வெளியேற்றப்பட்டது.
வங்காளதேச வங்காளி மக்கள் மீது இந்தியர்கள், குறிப்பாக வங்காளிகள் கொண்டிருந்த ஆழ்ந்த ஒன்றிணைதலை நான் தெளிவாக நினைவில் கொள்கிறேன். அவர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடி, அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இந்த வலுவான ஆதரவு நாட்டை ஒன்றிணைத்தது மற்றும் வங்காளதேசம் சுதந்திரம் பெற உதவ பாகிஸ்தானுக்கு எதிராகப் போருக்குச் செல்லும் இந்தியாவின் முடிவில் முக்கிய பங்கு வகித்தது.
இந்திரா காந்தியின் துணிச்சலான தலைமையின் கீழ் 13 நாள் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும், இந்தியா-வங்காளதேச உறவுகளில் ஏற்பட்ட ஒத்துழைப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும், இரு நாடுகளும் முக்கியமான சாதனைகளைச் செய்துள்ளன. டின் பிகா காரிடார் ஒப்பந்தம் (Tin Bigha Corridor agreement) வங்கதேசம் அதன் தஹாகிராம்-அங்கர்போட்டா பகுதியை (Dahagram-Angarpota enclave) பிரதான நிலப்பகுதியிலிருந்து அணுக அனுமதித்தது. வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகள் காரணமாக கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தமும் (Ganga River water-sharing agreement) சாத்தியமானது. இரு நாடுகளுக்கும் இடையே 54 ஆறுகள் பாய்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு இது ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.
BIMSTEC மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக, நான் இரண்டு முறை வங்காளதேசத்திற்குச் சென்றேன். பின்னர் 2013ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் இந்திய இரயில்வே துறை அமைச்சராகவும் நான் வங்காளதேசத்திற்குச் சென்றேன். இந்த பயணத்தின்போது, இந்தியா இரண்டு டீசல் இரயில் என்ஜின்களை வங்காளதேசத்திற்கு பரிசளித்தது. முகர்ஜியின் மனைவி நரைல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், வங்காளதேச ஊடகங்கள் அவரை "இந்தியாவின் முதல் வங்காள குடியரசுத் தலைவர்" (India’s first Bengali President) என்றும் வங்காளதேசத்தின் "மருமகன்" (son-in-law) என்றும் குறிப்பிட்டன. இந்த தருணங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள்-மக்கள் தொடர்புகளைக் காட்டுகின்றன.
பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும், வங்காளதேசமும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. துணைக் கண்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக வங்காளதேசம் உள்ளது. இதனுடன், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளில் வலுவான ஒத்துழைப்பு உள்ளது. சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பல வங்காளதேசத்தினர் இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்கள்.
சமீபத்திய பதட்டங்கள் இருந்தபோதிலும், வங்காளதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். வரலாற்றை வடிவமைத்த அதே காரணிகள் நேர்மறையான இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்க உதவும். இதற்கு, பொறுமை, இராஜதந்திரம் மற்றும் கூர்மையான உத்தி தேவை.
ஷேக் ஹசீனா மீது இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருப்பினும், புதிய ஆட்சியின் உள் பிரச்சினைகளையும் அது வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அவாமி லீக் "இந்தியாவுக்கு ஆதரவானதாக" (pro-India) பார்க்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றி தற்காப்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், வங்காளதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இயல்பாகவே "இந்தியாவுக்கு ஆதரவானவர்கள்" ஆவர்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா தொடர்ந்து கவலைகளை எழுப்ப வேண்டும். இருப்பினும், வங்காளதேசத்திற்குச் சொல்லும் செய்தி தெளிவாக இருக்க வேண்டும். இது, இந்தியா எந்த குறிப்பிட்ட அரசாங்கத்திற்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லை. இந்தியா அனைத்து உயிர்கள், நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு அக்கறை கொண்டுள்ளது. அது உரிய நடைமுறை மற்றும் ஜனநாயகத்தை மதிக்கிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் வங்காளதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்துடனும் இந்தியா ஈடுபடும். 1971-ம் ஆண்டின் உணர்வு நமது உறவை வரையறுக்கிறது மற்றும் தொடர்ந்து அதை வழிநடத்தும். ஆகஸ்ட் 5-ல் நடைபெற்ற நிகழ்வுகள் இதை மாற்றக்கூடாது. இது இரு நாடுகளின் தேசிய நலனுக்கானது.
எழுத்தாளர் தொடர்ந்து ஐந்து முறை மக்களவை எம்.பி.யாகவும், முன்னாள் ரயில்வே இணை அமைச்சராகவும் இருந்தார்.