2025 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, பீகாரில் “மக்கானா வாரியம்” அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். பெரும்பாலும் “கருப்பு வைரம்” என்று அழைக்கப்படும் மக்கானாவை இவ்வளவு சிறப்புறச் செய்வது எது? சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலைகள் முதல் மக்கானா வாரியத்தின் முக்கியத்துவம் வரை அனைத்தையும் உள்ளடக்கியது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசின் வரவு அறிக்கையை தாக்கல் செய்த போது, பீகாரில் தாமரை விதைகள் வளர்ப்பதையும் விற்பனை செய்வதையும் ஊக்குவிப்பதற்காக மக்கானா வாரியம் (Makhana Board) உருவாக்கப்படும் என்று அறிவித்தார். மக்கானா சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளாக தொகுக்கப்படுவார்கள்.
மக்கானாவின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துவதற்காக பீகாரில் ஒரு மக்கானா வாரியம் நிறுவப்படும். இந்த வாரியம் மக்கானா விவசாயிகளுக்கு கைகோர்த்து பயிற்சி அளிக்கும். மேலும், அவர்கள் அனைத்து தொடர்புடைய அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதை உறுதிசெய்யவும் செயல்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
முக்கிய அம்சங்கள்:
1. மக்கானா, தாமரை விதைகள் (ஆங்கிலத்தில் fox nut) என்றும் அழைக்கப்படுகிறது. இது முட்கள் நிறைந்த நீர் லில்லி அல்லது கோர்கன் தாவரத்தின் (யூரியால் ஃபெராக்ஸ்) உலர்ந்த விதையாகும். இந்த தாவரம் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா முழுவதும் நன்னீர் குளங்களில் வளரும். இது ஊதா மற்றும் வெள்ளை பூக்கள் மற்றும் ஒரு மீட்டர் விட்டதிற்கு மேல் வளரக்கூடிய பெரிய, வட்டமான, முட்கள் நிறைந்த இலைகளுக்கு பெயர் பெற்றது.
2. மக்கானா செடியின் உண்ணத்தக்க பகுதி சிறிய, வட்டமான விதை ஆகும். விதையின் வெளிப்புற அடுக்கு கருப்பு முதல் பழுப்பு வரை இருக்கும். அதனால் தான் இது கருப்பு வைரம் என்று அழைக்கப்படுகிறது.
3. பதப்படுத்திய பிறகு, விதைகள் பெரும்பாலும் பாப் செய்யப்பட்ட சிற்றுண்டிகளாக உண்ணப்படுகின்றன. அவை லாவா என்று அழைக்கப்படுகின்றன. மக்கானா மிகவும் சத்து நிறைந்தது மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் புரதம் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது மருத்துவம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
4. மிதிலா மக்கானாவிற்கு புவிசார் குறியீடு: 2022ஆம் ஆண்டில், “மிதிலா மக்கானாவிற்கு” (Mithila Makhana) புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. குறிப்பாக, புவிசார் குறியீடு (Geographical Indication (GI)) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து வரும் மற்றும் அந்த பிராந்தியத்துடன் தொடர்புடைய குணங்கள் அல்லது நற்பெயரைக் கொண்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு குறிச்சொல் ஆகும். புவிசார் குறியீடு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு அதைப் புதுப்பிக்கலாம்.
5. இந்தியாவின் மக்கானா உற்பத்தியில் 90% பீகாரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி முதன்மையாக வடக்கு மற்றும் கிழக்கு பீகாரில் அமைந்துள்ள ஒன்பது மாவட்டங்களில் குவிந்துள்ளது: தர்பங்கா, மதுபனி, பூர்னியா, கதிஹார், சஹர்சா, சுபால், அராரியா, கிஷன்கஞ்ச் மற்றும் சீதாமர்ஹி, இவை மிதிலாஞ்சல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இந்த மாவட்டங்களில், முதல் நான்கு மாவட்டங்கள் பீகாரின் மொத்த மக்கானா உற்பத்தியில் 80% பங்களிக்கின்றன. பீகாரில் 15,000 ஹெக்டேர் பரப்பளவில் மக்கானா பயிர் பயிரிடப்படுகிறது. இது 10,000 டன் பாப் செய்யப்பட்ட மக்கானாவை உற்பத்தி செய்கிறது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையத்தின் 2020ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. பீகாரைத் தவிர, அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற அண்டை நாடுகளிலும் மக்கானா சிறிய அளவில் பயிரிடப்படுகிறது.
மக்கானா சாகுபடிக்கான காலநிலை:
மக்கானா (கோர்கன் நட் அல்லது ஃபாக்ஸ்நட்) என்பது ஒரு நீர்வாழ் பயிர் மற்றும் முக்கியமாக இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக 4-6 அடி வரை ஆழமற்ற நீர் ஆழம் கொண்ட குளங்கள், நில பள்ளங்கள், ஏரிகள், பள்ளங்கள் அல்லது ஈரநிலங்கள் போன்ற தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் இது பயிரிடப்படுகிறது.
2. உகந்த வளர்ச்சி, மக்கானாவிற்கு 20-35°C வெப்பநிலை வரம்பு, 50-90% ஈரப்பதம் மற்றும் 100-250 செ.மீ.க்கு இடையில் ஆண்டு மழைப்பொழிவு தேவைப்படுகிறது.
“மக்கானா வாரியம்” உருவாக்கத்தின் முக்கியத்துவம்
1. பீகாரில் “மக்கானா வாரியம்” நிறுவுவது தொடர்பான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்தி மக்கானா சாகுபடியில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. மக்கானா சாகுபடியை ஊக்குவிக்க பீகார் அரசு ஒன்றிய அரசிடம் நடவடிக்கைகளை கோரி வருகிறது. மக்கானாவின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசு கோரியது.
2. மக்கானாவின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்தபோதிலும், இந்த தயாரிப்புக்கான விரிவடைந்து வரும் சந்தையைப் பயன்படுத்துவதில் பீகார் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் மக்கானா உற்பத்தியில் 90% உற்பத்தி பீகாரில் செய்யப்பட்டாலும், இந்தியாவில் மக்கானாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்கள் பஞ்சாப் மற்றும் அசாம் ஆகும். பஞ்சாப் அந்தப் பயிரை உற்பத்திகூட செய்யவில்லை.
3. பீகாரில் வளர்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் இல்லாததாலும், போதுமான ஏற்றுமதி உட்கட்டமைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, பீகாரின் எந்த விமான நிலையங்களிலும் சரக்கு வசதிகள் இல்லை. இது ஏற்றுமதி திறன்களை மேலும் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, மக்கானா சாகுபடியில் குறைந்த உற்பத்தித்திறன் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். தற்போது, சாகுபடி செயல்முறை மிகவும் உழைப்பு மிகுந்ததாகவும் சவாலானதாகவும் உள்ளது. இது ஒட்டுமொத்த உள்ளீட்டு செலவுகளை அதிகரிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
மக்கானா என்பது ஒன்றிய அரசின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One District One Product scheme) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் உணவு பதப்படுத்துபவர்களுக்கு அடையாளக் குறியிடுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மானியங்களை வழங்குகிறது.
4. கூடுதலாக, விவசாயிகள் ஸ்வர்ண வைதேஹி மற்றும் சபூர் மக்கானா-1 போன்ற விவசாய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அதிக மகசூல் தரும் தாமரை விதை வகைகளை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக உள்ளனர்.
5. ரூ.100 கோடி நிதியில் அமைக்கப்படவுள்ள மக்கானா வாரியம், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை ஏற்றுமதி சார்ந்தவர்களாக மாற்றும். உணவு பதப்படுத்தும் துறையில் முதலீடுகளைக் கொண்டுவரும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும். மேலும், தேவையான ஏற்றுமதி உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One District One Product (ODOP))
1. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு தயாரிப்பை அடையாளம் காண்பது, சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.
2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அடிப்படையில் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றன. மேலும் மாவட்டங்கள் ஏற்றுமதி மையங்கள் (Districts as Export Hubs (DEH)) மற்றும் புவியியல் குறியீடு குறிச்சொற்களின்கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளையும் தேர்வு செய்கின்றன. தயாரிப்புகளின் இறுதிப் பட்டியல் தொடர்புடைய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் துறைகளால் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறைக்கு (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) அனுப்பப்படுகிறது.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் (One Station One Product scheme)
1. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம், உள்ளூர் கைவினைஞர்கள், குயவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பிறர் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் வாழ்க்கையை நடத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனித்துவமான உள்ளூர் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஊக்குவிப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.