பல ஆண்டுகளாக ‘ராமன் விளைவு’ வேதியியல், உயிரியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி இயற்பியலாளர் சி.வி. ராமன் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ராமன் விளைவைக் கண்டுபிடித்ததை நினைவுகூர்ந்து, நாட்டில் அறிவியலை ஊக்குவிப்பதற்காக தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருகிறது.
தேசிய அறிவியல் தினம் அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. இது மனிதகுலத்திற்கு பயனளிக்கும் அறிவியல் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
சந்திரசேகர வெங்கட ராமன் 1888-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். 1921-ஆம் ஆண்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, சர்வதேச பல்கலைக்கழக காங்கிரஸ் பிரதிநிதியாக லண்டனுக்கு அனுப்பப்பட்டார்.
SS நர்குண்டா கப்பலில் இந்தியாவிற்கு 15 நாள் திரும்பும் பயணத்தில், சி.வி. ராமன் மத்தியதரைக் கடலின் அடர் நீல நிறத்தால் கவரப்பட்டார். வானம் நீல நிறத்தில் தோன்றிய அதே காரணத்திற்காகவே கடல் நீல நிறத்தில் தோன்றியது, ஏனென்றால் நீல ஒளி மற்ற வண்ணங்களைவிட அதிகமாக சிதறும் (scatter) என்பதை அவர் உணர்ந்தார்.
இந்தியா திரும்பியதும், ராமன் ஒளி சிதறலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வெவ்வேறு பொருட்கள் வழியாக ஒளி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அவரது கடின உழைப்பு இறுதியில் பிப்ரவரி 28, 1928 அன்று ராமன் விளைவு என்றும் அழைக்கப்படும் ராமன் சிதறலைக் (Raman Effect) கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது. அவர் 1929-ல் நைட் பட்டம் பெற்றார். 1930-ல், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ராமன் விளைவு என்றால் என்ன?
ராமன் விளைவு என்பது ஒரு பொருளைத் தாக்கி அதன் அலைநீளத்தை மாற்றும் வகையில் சிதறடிக்கும்போது நிகழ்கிறது. எளிதாகச் சொன்னால், ஒரு ஒளிக்கற்றை ஒரு பொருளின் வழியாகச் செல்லும்போது, மூலக்கூறுகள் ஆற்றலை உறிஞ்சுவதால் அல்லது வெளியிடுவதால் சில ஒளியின் நிறம் மாறுகிறது. இந்த செயல்முறை ஒளியின் மீள் சிதறல் என்று அழைக்கப்படுகிறது.
ராமன் விளைவு ராமன் நிறமாலையியல் (Spectroscopy) ஆய்வுக்கு அடிப்படையாக அமைகிறது. இது வேதியியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்களால் பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெறப் பயன்படுகிறது. நிறமாலையியல் (Spectroscopy) என்பது பொருள் மற்றும் மின்காந்த கதிர்வீச்சுக்கு (electromagnetic radiation) இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வு ஆகும்.
ராமன் விளைவு பல ஆண்டுகளாக வேதியியல், உயிரியல், மருத்துவம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஏதேனும் சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்டறிய காவல்துறையினரும் இந்தக் கொள்கையின் அடிப்படையில் ராமன் ஸ்கேனர் எனப்படும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம் என்ன?
தேசிய அறிவியல் தினத்தைக் கடைப்பிடிப்பதன் அடிப்படை நோக்கம், அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்த செய்தியை மக்களிடையே பரப்புவதாகும்.
மக்களின் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்த செய்தியை பரவலாகப் பரப்புதல்.
மனிதர்களின் நலனுக்காக அறிவியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்துதல்
அறிவியல் வளர்ச்சிக்கான அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதித்து புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல்
மக்களை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல்.
இது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய அறிவியல் விழாக்களில் ஒன்றாக பின்வரும் நோக்கங்களுடன் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் என்ன?
2025-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்திற்கான கருப்பொருள் "வளர்ந்த இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்" என்பதாகும். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் இளம் மனங்களின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்ததாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட வளர்ந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையை இந்த கருப்பொருள் ஆதரிக்கிறது.