தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் குறித்து ஏன் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் மோதிக்கொள்கின்றன -அபிநயா ஹரிகோவிந்த், ரித்திகா சோப்ரா

 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது.


2020-ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையை (New Education Policy (NEP)) அமல்படுத்த மாநிலம் மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமருக்கு தமிழ்நாட்டின் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


பாஜக தலைமையிலான ஒன்றிய அரக்கும் தமிழ்நாட்டின் திமுக அரசிற்கும் இடையிலான மோதல், புதிய கல்விக் கொள்கை 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட "மும்மொழிக் கொள்கையை" சுற்றி உள்ளது. இந்தக் கொள்கை பல்வேறு பிராந்தியங்களில் இளைஞர்கள் வேலை தேட உதவும் என்று ஒன்றிய அரசு வாதிடுகிறது. இருப்பினும், தமிழ்நாடு இதை மாநிலத்தின் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியாகவே பார்க்கிறது.


கல்வியில் மொழி விவாதம்


கல்வியில் மொழிக் கொள்கை குறித்த விவாதம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இருந்து வருகிறது. இதில் பயிற்றுவிக்கும் மொழி மற்றும் மொழிகள் கற்பித்தல் ஆகிய இரண்டும் பற்றிய விவாதங்களும் அடங்கும். இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான 1948-49 பல்கலைக்கழக கல்வி ஆணையம், இந்த தலைப்பை விரிவாக ஆராய்ந்தது.


அப்போதும் இது ஒரு அரசியல் விவாதமாக இருந்தது. ஆணையத்தின் அறிக்கை "வேறு எந்தப் பிரச்சினையும் கல்வியாளர்களிடையே இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியதில்லை, மேலும் நாங்கள் அறிய இவ்வளவு முரண்பாடான கருத்துக்களைத் தூண்டியதில்லை. மேலும், இந்தக் கேள்வி உணர்ச்சிவசமானது ஆகையால், அதை அமைதியாகவும், தனிமையாகவும் பரிசீலிப்பது கடினம்." என்று குறிப்பிட்டது.


அந்த நேரத்தில் கூட மொழிக் கொள்கை பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. வேறு எந்தப் பிரச்சினையும் கல்வியாளர்களிடையே இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தவில்லை என்பதை ராதாகிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கை எடுத்துக்காட்டியது. சாட்சிகள் கடுமையாக எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது. 


மொழிப் பிரச்சினை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததால், அது பற்றி விவாதிப்பது கடினமாக இருந்தது. ராதாகிருஷ்ணன் ஆணையம் இந்தியாவின் கூட்டாட்சி மொழியாக இந்தி இந்துஸ்தானியை ஆதரித்தது. தேசிய அளவில் நிர்வாகம், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கு இந்தியைப் பயன்படுத்துவதை அது பரிந்துரைத்தது. அதே நேரத்தில் வெவ்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அது கூறியது.


ஆங்கிலப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை ஆணையம் புரிந்துகொண்டது. அனைத்து மாநிலங்களும் இந்திக்கு மாற முழுமையாகத் தயாராகும் வரை கூட்டாட்சிப் பணிகளுக்கான மொழியாக ஆங்கிலம் தொடர வேண்டும் என்று அது கூறியது.


மும்மொழிக் கொள்கை


இந்த ஆணையம் முதலில் பள்ளிக் கல்விக்கான மும்மொழி சூத்திரமாக மாறுவதை முதலில் முன்மொழிந்தது.


ஒவ்வொரு பிராந்தியமும் கூட்டாட்சி நடவடிக்கைகளில் தேவையான பங்கை பெறவும், மாகாணங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கவும், படித்தவர்கள் இந்தியாவில் இருமொழி பேசுபவராக இருக்க வேண்டும், மேலும் உயர்நிலை மற்றும் பல்கலைக்கழக நிலைகளில் உள்ள மாணவர்கள் மூன்று மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் ஆணையம் கூறியது.


இதன் பொருள், ஒருவரின் பிராந்திய மொழியைத் தாண்டி, ஒவ்வொரு நபரும் "கூட்டாட்சி மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்" மற்றும் "ஆங்கிலத்தில் புத்தகங்களைப் படிக்கும் திறன்" கொண்டிருக்க வேண்டும்.


இந்த முன்மொழிவை 1964-66ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணையம் (கோத்தாரி ஆணையம்) ஏற்றுக்கொண்டது. மேலும் இந்திரா காந்தி அரசாங்கத்தால் 1968-ல் நிறைவேற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் இணைக்கப்பட்டது.


இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்கள் "இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, தென்னிந்திய மொழிகளில் ஒன்றான நவீன இந்திய மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது" என்றும், "இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியையும் கற்றுக்கொள்வது நல்லது" என்றும் இந்த கொள்கை முன்மொழிந்தது.


ராஜீவ் காந்தி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையும், 2020-ஆம் ஆண்டின் சமீபத்திய தேசிய கல்விக் கொள்கையும் இந்த கொள்கையத் தக்க வைத்துக் கொண்டன. இருப்பினும் பிந்தையது அதன் செயல்படுத்தலில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. முந்தைய கல்விக் கொள்கைகளைப் போல் இல்லாமல், 2020 தேசிய கல்விக் கொள்கையில் இந்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


"குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மூன்று மொழிகள் மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் நிச்சயமாக மாணவர்களின் விருப்பங்களாக இருக்கும். மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளாவது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்" என்று கொள்கை கூறுகிறது.


இதன் பொருள், NEP 2020-ன் படி, ஒவ்வொரு மாநிலமும் கல்விக்கான மொழிகளைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளது. ஒரு மாநிலம் ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

இந்த இரண்டு மொழிகளிலும் இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த இரண்டு இந்திய மொழிகளுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படும்.


ஒன்றிய அரசின் மாறுபட்ட நிலைப்பாடு


கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதாக ஒன்றிய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. இதன் பொருள் ஒன்றிய அரசும் மாநிலங்களும் கல்விக் கொள்கைகளில் முடிவுகளை எடுக்க முடியும்.


2004ஆம் ஆண்டில், ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் (காங்கிரஸ்) நாடாளுமன்றத்தில் மும்மொழி கொள்கை ஒரு பரிந்துரை மட்டுமே என்று கூறினார். அதை செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் மட்டுமே பொறுப்பு என்று அவர் தெளிவுபடுத்தினார். 2014ஆம் ஆண்டில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டங்களை தீர்மானிக்க முழு அதிகாரம் உள்ளது என்று அவர் கூறினார்.


இருப்பினும், இப்போது, சமக்ர சிக்ஷா நிதியைப் பெறுவதற்கு, மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் கூறுகிறது. இது மாநிலங்கள் தங்கள் கல்விக் கொள்கைகளை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க கட்டாயப்படுத்துகிறது.
Original article:


Why Tamil Nadu, Centre are clashing over NEP’s 3-language formula. -Abhinaya Harigovind , Ritika Chopra

Share: