குடும்ப நன்கொடை நிறுவனங்களுக்கான கட்டமைக்கப்பட்ட சேவைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ₹50,000-55,000 கோடி திரட்ட உதவும் என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்ற பெரிய நாடுகளைவிட சராசரியாக குறைவாகவே நன்கொடை அளிக்கின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் சமூகத் துறைக்கான தனியார் நிதி ஒவ்வொரு ஆண்டும் 10%–12% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி பெரும்பாலும் குடும்ப கொடை மூலம் நன்கொடை அளிக்கும் செல்வந்தர்களிடமிருந்து (HNWIs) வரும் என்று பிப்ரவரி 27 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
2024 நிதியாண்டில், நாடு கல்வி, சுகாதாரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற சமூகத் திட்டங்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் கோடி ($300 பில்லியன்) செலவிட்டது. இந்த நிதியில் 95%, அதாவது ரூ.23 லட்சம் கோடியை அரசாங்கம் வழங்கியது. இதில் MGNREGS மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள் அடங்கும்.
டாஸ்ரா அண்ட் பெய்ன் & கோவின் இந்திய நன்கொடைகளுக்கான அறிக்கை (India Philanthropy Report (IPR)) 2025-ன் படி, தனியார் செலவினம் சுமார் ரூ.1.3 லட்சம் கோடி ($16 பில்லியன்) ஆகும். குடும்ப நன்கொடைக்கான சிறந்த சேவைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆதரவு அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ரூ.50,000-55,000 கோடி ($6–$7 பில்லியன்) திரட்ட உதவும் என்று அறிக்கை கூறியுள்ளது.
தனியார் நன்கொடைகளில் குடும்ப நன்கொடை சுமார் 40% ஆகும். இதில் குடும்பத்திற்குச் சொந்தமான அல்லது குடும்பம் நடத்தும் வணிகங்களிலிருந்து தனிப்பட்ட நன்கொடைகள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (corporate social responsibility (CSR)) முயற்சிகள் அடங்கும்.
இந்தியாவில் நன்கொடை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தனியார் நிதி, மற்ற பெரிய பொருளாதாரங்களை விட குறைவாக உள்ளது. இந்திய நன்கொடை அறிக்கை (India Philanthropy Report) 2022, பணக்கார இந்தியர்கள் (UHNIs) தங்கள் செல்வத்தில் 0.1% முதல் 0.15% வரை மட்டுமே நன்கொடை அளிப்பதாகக் கண்டறிந்துள்ளது. இதை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் உள்ள பணக்காரர்கள் 1.2% முதல் 2.5% வரை, இங்கிலாந்தில் 0.5% முதல் 1.8% வரை, சீனாவில் 0.5% முதல் 1.4% வரை நன்கொடை அளிக்கின்றனர்.
2025 அறிக்கை, மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை (UHNIs) ரூ.1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்புள்ளவர்கள் என்று வரையறுக்கிறது. அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIs) ரூ.200 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை சொத்து மதிப்புள்ளவர்கள். "வசதியானவர்கள்" பிரிவில் ரூ.7 கோடி முதல் ரூ.200 கோடி வரை சொத்து மதிப்புள்ளவர்கள் அடங்குவர்.
சராசரியாக, 2024 நிதியாண்டில்:
UHNIs தலா ரூ.5 கோடி நன்கொடை அளித்தனர்.
HNIs தலா ரூ.0.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை நன்கொடை அளித்தனர்.
"வசதியானவர்கள்" குழு தலா ரூ.0.4 கோடிக்கும் குறைவாக நன்கொடை அளித்தது.
மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களில் (UHNIs), டாடா, அம்பானி, அதானி மற்றும் பிர்லா ஆகிய நான்கு குடும்பங்களுக்குச் சொந்தமான வணிகங்கள், அத்தகைய நிறுவனங்களின் மொத்த பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) செலவினங்களில் சுமார் 20% பங்களித்தன. இந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.800 முதல் 1,000 கோடி வரை CSR-க்காகச் செலவிட்டன.
அமெரிக்காவில், தனியார் நன்கொடை நீண்ட காலமாகவே வழக்கமாக இருந்து வருகிறது. வாரன் பஃபெட், பில் கேட்ஸ், மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் போன்ற கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தது 20%-ஐ நன்கொடையாக அளித்துள்ளதாக 2024 ஃபோர்ப்ஸ் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் 1% க்கும் குறைவாகவே நன்கொடை அளித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனியார் செலவினம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் வேகமான வளர்ச்சியே ஒரு முக்கிய காரணம். இந்த உயர்வுக்கு அதிக மக்கள் உயர்-நடுத்தர மற்றும் உயர் வருமானக் குழுக்களில் சேருவதே காரணம் என்று அறிக்கை விளக்குகிறது. இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 61 மில்லியனில் இருந்து 2030ஆம் ஆண்டில் 168 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UHNI ((Ultra High Net Worth Individual)) பிரிவிலிருந்து நிதியில் ஒரு சிறிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 2023 நிதியாண்டில், இந்த வளர்ச்சி முக்கியமாக தொழிலதிபர்களான ஷிவ் நாடார் மற்றும் அசிம் பிரேம்ஜி ஆகியோரால் உந்தப்பட்டது.
விதிகளைப் பின்பற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், CSR வளர்ச்சி 10-12% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.500 கோடி நிகர மதிப்பு, ரூ.1,000 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் அல்லது ரூ.5 கோடிக்கு மேல் நிகர லாபம் கொண்ட நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் சராசரி நிகர லாபத்தில் குறைந்தது 2% ஐ CSR நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும். CSR-இணக்க நிறுவனங்களில் 20% அதிகரிப்பு, 2022 நிதியாண்டில் சுமார் 12,000 ஆக இருந்த எண்ணிக்கை, 2023 நிதியாண்டில் சுமார் 15,000 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
சுமார் 40% குடும்பங்கள் இந்த நிதியை பாலினம், சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் (gender, equity, diversity, and inclusion (GEDI)) நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தின‘. அதே நேரத்தில் 29% குடும்பங்கள் காலநிலை நடவடிக்கையை ஆதரித்தன. இந்த முயற்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை (55%) பெண்களால் வழிநடத்தப்பட்டன.
அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIs) மற்றும் அவர்களது குடும்பங்களின் செல்வத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களான குடும்ப அலுவலகங்களின் வளர்ச்சியை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2018ஆம் ஆண்டில், 45 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில், 300 ஆக கணிசமாக அதிகரித்துள்ளது. இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதியை இயக்குவதற்கு கட்டமைக்கப்பட்ட சேவைகளை உருவாக்குவது இந்திய நன்கொடை நிறுவனங்களை பெரிய அளவில் ஆதரிக்கும்.