உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, உலக சுகாதாரத்தை மறுவடிவமைக்க ஒரு வாய்ப்பு -சந்திரகாந்த் லஹாரியா

 உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கவும், உலகளாவிய சுகாதார நிகழ்ச்சி நிரலை மறுவடிவமைக்க கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கவும் உலகத் தென் நாடுகளுக்கு இப்போது நேரம் வந்துவிட்டது.


ஜனவரி 20, 2025 அன்று, அமெரிக்க அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தது. இது WHO-க்கான நிதியைக் குறைப்பது அமைப்பின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதால், WHO-விலிருந்து ஒரு நாடு வெளியேறுவது ஏன் இவ்வளவு கவலையை ஏற்படுத்துகிறது போன்ற சில அடிப்படை கேள்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. WHO-விலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை வலுவான WHO-வை உருவாக்குவதற்கான வாய்ப்பாக எவ்வாறு மாற்ற முடியும்? உலகளாவிய சுகாதாரத்தில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பங்கு ஏன் அதிகரித்து வருகிறது?


நிதி சிக்கல்கள்


WHO நிதியில் அமெரிக்கா திரும்பப் பெறுவதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, WHO-வின் நிதி அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். நிதி ஆதாரங்களில் இரண்டு பரந்த பிரிவுகள் உள்ளன. முதலாவதாக, மதிப்பிடப்பட்ட பங்களிப்பு (assessed contribution) என்பது ஒவ்வொரு WHO உறுப்பு நாடும் ஆண்டுதோறும் ஒரு வகையான உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டிய ஒரு நிலையான தொகையாகும். அமெரிக்கப் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் வாதிட்டதோடு, அமெரிக்கா விலகுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்கொடைகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் தினசரி செயல்பாடுகளை பராமரிப்பதற்கும் உத்தரவாதமான நிதியை வழங்குகிறது, இது சேவைத் தொடர்ச்சிக்குத் தேவையான குறைந்தபட்ச ஆதாரங்களை உறுதி செய்கிறது.


மற்ற நிதி திரட்டல் தன்னார்வ பங்களிப்புகளிலிருந்து (voluntary contributions (VC)) வருகிறது. இது பல்வேறு நன்கொடை நிறுவனங்களிடமிருந்தும் WHO உறுப்பு நாடுகளின் கூடுதல் பங்களிப்புகளிலிருந்தும் வருகிறது. தன்னார்வ பங்களிப்புகள் பொதுவாக திட்டங்கள் மற்றும் பிற காலக்கெடு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறுகியகால ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்களை பணியமர்த்துவதில் WHO தன்னார்வ நிதிகளைப் பயன்படுத்துகிறது.  இருப்பினும், தன்னார்வ நிதிகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவை விருப்பத்தேர்வு, குறிப்பிட்ட பணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், எப்போதும் நேரத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இது அவற்றை கணிக்க முடியாததாக ஆக்குகிறது.


WHO சரிதான்: உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து


எடுத்துக்காட்டாக, பல உறுப்பு நாடுகளும் நன்கொடையாளர்களும் போலியோ ஒழிப்பு, நோயாளி பாதுகாப்பு, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்பான பணிகளுக்கு நிதி வழங்குகிறார்கள். இந்த பங்களிப்புகள் இறுக்கமானவை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு மாற்ற முடியாதவை.

 

WHO-வில் இருந்து அமெரிக்கா விலகுவதால், தன்னார்வ நிதியும் பாதிக்கப்படும். ஏனெனில், பல அமெரிக்காவை தளமாகக் கொண்ட அல்லது அமெரிக்காவுடன் இணைந்த நன்கொடையாளர்கள் WHO-க்கு நிதியளிப்பதைக் குறைக்கலாம் அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். உதாரணமாக, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (United States Agency for International Development(USAID)) தற்போதைய குழப்பம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் WHO நிதியுதவியையும் பாதிக்கும். WHO மீதான நிதி தாக்கம் அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி பங்களிப்பைவிட மிகப் பெரியதாக இருக்கும்.


WHO மிகவும் அதிகாரத்துவமானது மற்றும் சில நேரங்களில் தாமதமாக செயல்படுகிறது. இதற்கு அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படுவதால் அமெரிக்கா பின்வாங்கியது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த விமர்சனம் ஓரளவு உண்மைதான். நியாயமாகச் சொன்னால், அனைத்து உலகளாவிய நிறுவனங்களுக்கும் சீர்திருத்தங்கள் தேவை. இதில் WHOவும் விதிவிலக்கல்ல.


இன்றைய உலகில், நுண்ணுயிர் எதிர்ப்பு, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் போன்ற சவால்கள் அதிகரித்து வருகின்றன. நோய்கள் மீண்டும் தோன்றி வருகின்றன. மேலும் வாழ்க்கை முறை நோய்கள் கூர்மையாக அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் காரணமாக, உலகிற்கு இப்போது எப்போதையும்விட வலுவான WHO தேவை.


நிறுவனங்கள் ஏன் தோல்வியடைகின்றன?


Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty என்ற புத்தகத்தில், டாரன் அசெமோக்லு மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஒரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நாடுகள் வலுவான மற்றும் பயனுள்ள நிறுவனங்களைக் கொண்டிருக்கும்போது அவை வெற்றி பெறுகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த ஆசிரியர்கள் 2024ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்.

உலக அமைதியைப் பேணுவதற்கும் உலகளாவிய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் உலகிற்கு வலுவான அமைப்புகள் தேவை. ஆனால். சமீபத்திய தசாப்தங்களில், உலகளாவிய ஒத்துழைப்பு பலவீனமடைந்துள்ளது. பல நாடுகள் தேசியவாதத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன, அங்கு தலைவர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மற்றவர்களைவிட தங்கள் சொந்த நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். தீவிர தேசியவாதத்தின் இந்த எழுச்சி உலகளாவிய போக்குகளுடன் இணைந்துள்ளது. ஆனால், பணக்கார நாடுகளில் இது வலுவாக உள்ளது. இது பெரும்பாலும் உலகளாவிய ஒற்றுமையை ஆதரிக்கும் சர்வதேச அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.


உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால், G-7, G-20 மற்றும் பிற முக்கிய பல நாடுகளின் கூட்டணிகள் WHO-ஐ ஆதரிக்கவும் நிதியளிக்கவும் முன்வருவதற்கான வாய்ப்பு பலவீனமாக உள்ளது. இருப்பினும், கடந்த 75 ஆண்டுகளில் அதன் மகத்தான பணிகளுக்கு, உலகளாவிய நிறுவனங்களைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் மாற்று வழிகள் ஆராயப்படுவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு தார்மீகக் கட்டாயமாகும். உலகளாவிய தெற்கிலும், இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, எகிப்து மற்றும் பல நாடுகளிலும் உள்ள சட்டபூர்வமான அரசாங்கங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் குறிப்பாக WHO-ஐ ஆதரிக்கவும், பொதுவாக ஐக்கிய நாடுகள் சபையை ஆதரிக்கவும் முன்வர வேண்டும்.


மற்றொரு முக்கியமான பிரச்சினை உள்ளது. அவை உலகளாவிய சுகாதார முன்னுரிமைகள் மற்றும் நிதியுதவியில் உள்ள நியாயமற்ற இடைவெளி ஆகும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளைப் பாதிக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு மிகக் குறைந்த நிதியே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, 2022ஆம் ஆண்டு பணக்கார நாடுகளில் உள்ள மக்களைப் பாதிக்கத் தொடங்கியபோதுதான் mPox தொற்று உலகளாவிய கவனத்தைப் பெற்றது. காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற இடங்களில், mPox பாதிப்பு பரவலாக உள்ளது. தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் கிட்டத்தட்ட கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஒரு சில பாதிப்புகள் மட்டுமே உள்ள அமெரிக்காவில், இந்த வளங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.


பணக்கார நாடுகள் எவ்வாறு சுகாதாரக் கொள்கைகளை தொடர்ந்து வடிவமைத்து உலகளாவிய ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை இது காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது பெரும்பாலும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உலகளாவிய சுகாதாரம் என்பது '"பணம் கொடுப்பவரே பாட்டைத் தீர்மானிப்பார்” (‘He who pays the piper calls the tune’) என்ற பழமொழியின் ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது.


WHO உடன் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்களை திரும்ப அழைக்கும் முடிவு, உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் ஒரு சில நாடுகளின் நிபுணர்களை எவ்வளவு நம்பியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை முக்கியமான சுகாதாரத் திட்டங்களை மெதுவாக்குவது குறித்த கவலைகளை எழுப்பியது. பொது சுகாதாரத்தில் நிபுணர்கள் ஒரு சில நாடுகளிலிருந்து மட்டும் வருவதற்குப் பதிலாக பல வேறுபட்ட நாடுகளிலிருந்து வந்தால் உலகளாவிய சுகாதாரம் மேம்படும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


உலகளாவிய தெற்கு நாடுகள் செயல்பட வேண்டும்


முதலாவதாக, அமெரிக்கா வெளியேறிய பிறகு WHO நிதி இடைவெளியை நிரப்ப, உலகின் தெற்கில் உள்ள நாடுகள், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். BRICS அத்தகைய ஒரு தளமாக இருக்கலாம். இரண்டாவதாக, இந்தியா, எத்தியோப்பியா, கானா மற்றும் உலகின் தெற்கில் உள்ள பிற நாடுகள் பொது சுகாதாரத்தில் மட்டுமல்ல, உலகளாவிய சுகாதாரத்திலும் நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்ய வேண்டும் (இவை வெவ்வேறு பகுதிகள்). 


உதாரணமாக, ஆப்பிரிக்காவை பாதிக்கும் நிலைமைகள் மற்றும் நம் நாட்டில் பரவலாக இல்லாத நோய்கள் குறித்து இந்தியா பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டிருக்க வேண்டும். வேறு எந்தத் துறையையும் போல சுகாதாரத்தில் 'தொகுக்கப்பட்ட' தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கான நேரம் இது. மூன்றாவதாக, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள், நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மூலம், உலகளாவிய சுகாதாரத்தில் தங்கள் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க, நாட்டில் அல்லது பிராந்திய மட்டங்களில் சில முதன்மையான நிறுவனங்களை அமைக்க வேண்டும். 


குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் நிபுணத்துவம்தான், அத்தகைய நிபுணர்களை நியமிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் மற்றும் WHO-க்கு உதவியாக இருக்கும். அந்த வகையில், அதிக வருமானம் கொண்ட நாடுகளின் நிபுணத்துவத்தை விட மிகக் குறைந்த செலவில் உலகளாவிய சுகாதாரம் மேம்படும்.


நான்காவதாக, WHO-வில் சீர்திருத்தங்கள் குறித்து நீண்ட காலமாகக் கேள்விப்பட்டு வருகிறோம். அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று, ஊழியர்களைக் குறைத்து, தலைமையகத்தை பிரஸ்ஸாவில் (காங்கோ), கெய்ரோ, மணிலா அல்லது புது தில்லியில் உள்ள பிராந்திய அலுவலகங்களில் ஒன்றிற்கு மாற்றுவதாகும். இது தலைமையகத்தின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும். விமான இணைப்பு அடிப்படையில் இது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றாலும், WHO-வின் பணியின் நேரமும் கவனமும் தேவைப்படும் புவியியல் பகுதிகளான ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருக்க வேண்டும். தலைமையகத்தைக் குறைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை பிராந்திய அலுவலகங்களுக்கு மாற்றுவது மிகவும் இராஜதந்திர நடவடிக்கையாக இருக்கும்.


நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது எதிர்காலத்தில், ஒரு புதிய அமெரிக்க அதிபர் இருக்கும்போது, ​​அமெரிக்கா மீண்டும் WHO-வில் சேரும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், அதுவரை, அமெரிக்காவின் விலகல், உலகளாவிய தெற்கில் உள்ள பொது சுகாதார சமூகம் மற்றும் அரசியல் தலைமை, நாடு மற்றும் பிராந்திய மட்டத்திலும், கூட்டு நடவடிக்கைகளிலும் உலகளாவிய சுகாதார நிகழ்ச்சி நிரலை மறுவடிவமைப்பதற்கான ஒரு வாய்ப்பாக ஆராயப்பட வேண்டும். இது அதிக வருமானம் கொண்ட நாடுகளின் செல்வாக்கிலும் வழிகாட்டுதலிலும் உள்ளது. உலகளாவிய சுகாதாரம் என்பது ஒன்று அல்லது ஒரு சில உயர் வருமான நாடுகளின் நிதியுதவி அல்லது நிபுணத்துவத்தின் தயவில் இருக்கக்கூடாது. இது உண்மையிலேயே உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைமையில் முழு உலகிற்கும் ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.


டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா ஒரு மருத்துவ மருத்துவர் மற்றும் உலகளாவிய சுகாதாரத்தில் நிபுணர் ஆவார். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் UNICEF உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொழில்முறை பணி அனுபவத்தைக் கொண்டுள்ளார்.




Original article:

Share: