இந்தியாவில் பஞ்சாயத்துகள் எதிர்கொள்ளும் சவால்களை சமீபத்திய அரசாங்க அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரங்களை எவ்வளவு சிறப்பாகப் பகிர்ந்தளித்துள்ளது என்பதையும் இது மதிப்பிடுகிறது.
ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சமீபத்தில் பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டை (Panchayat Devolution Index) வெளியிட்டது. இந்த குறியீடு இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (Indian Institute of Public Administration (IIPA)) ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த குறியீட்டின் கடைசி வெளியீடு 2014-ல் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், தேசிய சராசரி மதிப்பெண் 39.92-லிருந்து 43.89 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2.62 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. இது 2013-14-ல் 2.48 லட்சமாக இருந்தது. 2013-14 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான பஞ்சாயத்துகளைக் கொண்டுள்ளன.
2. இந்திய பொது நிர்வாக நிறுவனம் (Indian Institute of Public Administration (IIPA)) 8 மாவட்டங்களில் 172 பஞ்சாயத்துகளை அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக ஆய்வு செய்தது. இந்த ஆய்வு ஆறு அளவுருக்களில் கவனம் செலுத்தியது: கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, செயல்பாட்டாளர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகும். இந்தத் தரவைப் பயன்படுத்தி, இந்திய பொது நிர்வாக நிறுவனம் பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டை உருவாக்கியது.
3. இந்தக் குறியீடு 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் மாநிலங்களுக்கு மதிப்பெண் வழங்குகிறது. முதல் மூன்று இடங்களில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளன. அதே, நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்துள்ளன.
4. சமீபத்திய குறியீட்டின்படி, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை குறைந்த மதிப்பெண் பெற்ற மாநிலங்களாகும். கடந்த பத்தாண்டுகளில் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன. முதல் 10 மாநிலங்களில், ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மதிப்பெண் மட்டுமே குறைந்துள்ளது.
5. 2013-14ல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் 11 மாநிலங்கள் சரிவை சந்தித்துள்ளன.
6. பெண்களின் பிரதிநிதித்துவம் (Women’s Representation): பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு உள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த வரம்புக்கு கீழே உள்ளன. இதில் மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் திரிபுரா ஆகியவை அடங்கும்.
மறுபுறம், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இட ஒதுக்கீடு வரம்பை சந்திக்கின்றன அல்லது மீறுகின்றன. பஞ்சாயத்து பிரதிநிதிகளில் பெண்களின் விகிதாச்சாரத்தில் ஒடிசா 61.51% அதிகமாகவும், இமாச்சலப் பிரதேசம் 57.5% ஆகவும், தமிழ்நாடு 57.32% ஆகவும் உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெண் பிரதிநிதிகள் மிகக் குறைந்த விகிதத்தில் 33.33% உள்ளனர். ஏனெனில், அதன் விதிமுறைகள் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை மட்டுமே அனுமதிக்கின்றன.
தேசிய அளவில், பெண் பிரதிநிதிகளின் சராசரி விகிதம் 46.44% ஆகும். இது 2013-14ல் 45.9% ஆக இருந்தது. 2013-14-ல், 50% அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பிரதிநிதிகளைக் கொண்ட 11 மாநிலங்கள் இருந்தன. 2024-ல் இந்த எண்ணிக்கை 16 மாநிலங்களாக அதிகரித்துள்ளது.
7. பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் : பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முறையான இடஒதுக்கீடு இல்லை என்றாலும், குறிப்பிட்ட மாநிலங்கள் பஞ்சாயத்துகளில் இந்த குழுக்களின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தைக் காட்டியுள்ளன.
பஞ்சாபில் 36.34% பட்டியலிடப்பட்ட சாதி பிரதிநிதிகள் அதிக அளவில் உள்ளனர்.
சத்தீஸ்கரில் 41.04% பட்டியலிடப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் பங்கு அதிகமாக உள்ளது.
பீகாரில் 39.02% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், இந்த குழுக்களுக்கான தேசிய சராசரி பிரதிநிதித்துவம் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கு 18.03%, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு 16.22% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 19.15% ஆக உள்ளது.
8. முக்கிய சவால்கள்: நிலையான நிதி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை பஞ்சாயத்துகளுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிதி: 2023-24-ல், மாநில அரசுகள், பஞ்சாயத்துகளுக்கு, 47,018 கோடி ரூபாய் ஒதுக்கியதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2023 நவம்பர் வரை, 10,761 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு (Infrastructure): சில மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்கள் பஞ்சாயத்து அலுவலகங்களில் 100% நிரந்தர கட்டிடங்களாக (pucca buildings) இருந்ததாகவும், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், குறைந்தது நான்கில் மூன்று பங்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் திடமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
1. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு (Panchayati Raj System), அடிமட்ட ஜனநாயகம் மற்றும் கிராமப்புற மக்களை அதிகாரம் அளிப்பதை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது உள்ளூர் அமைப்புகளுக்கு தங்களைத் தாங்களே ஆள அதிகாரத்தை அளிக்கிறது. இது பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறது (participatory democracy). மக்கள் தங்கள் சமூகங்களுக்கான முடிவெடுப்பதில் பங்கேற்க அனுமதிக்கிறது.
2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பண்டைய இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. அங்கு பஞ்சாயத்துகள் என்று அழைக்கப்படும் கிராம சபைகள் உள்ளூர் விவகாரங்களை நிர்வகித்தன. இருப்பினும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முன்பு இருந்தது. ஆனால், அதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லை. 1993-ஆம் ஆண்டு, இது அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இதை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
3. ஏப்ரல் 24, 1993 அன்று நடைமுறைக்கு வந்த 1992-ஆம் ஆண்டின் 73-வது திருத்தச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு (Panchayati Raj Institutions (PRIs)) அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இது அரசியல் அதிகாரத்தை அடிமட்ட அளவிற்கு பரவலாக்குவதில் ஒரு முக்கியப் படியாகும்.
4. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது ஜனநாயகத்தை நோக்கிய ஒரு படி மட்டுமல்ல. அது மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையாகப் பார்க்கப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை அவர் ஆதரித்தார். உள்ளூர் சமூகங்கள் தங்கள் சொந்த கிராமங்களை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
5. 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பில் பகுதி IX-ஐச் சேர்த்தது. இந்தப் பிரிவு பஞ்சாயத்துகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. இது பிரிவுகள் 243 முதல் 243-O வரை உள்ளடக்கியுள்ளது.
6. கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாயத்து ராஜ் அமைப்புககளின் பங்கு அதிகரித்துள்ளது. விரிவான வளர்ச்சிக்கு வலுவான உள்ளூர் நிர்வாகம் தேவைப்படுகிறது. பஞ்சாயத்துகள் காலநிலை மாற்றம் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வை சரி செய்ய உதவுகின்றன. உள்ளூர் மட்டத்தில் நியாயமான மற்றும் நிலையான வளர்ச்சியில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்ளூர் தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்படுவதையும் அவை உறுதி செய்கின்றன.