பிரதம மந்திரி தன்-தன்யா கிரிஷி யோஜனா திட்டத்தின் இலக்கு என்ன? அது எவ்வாறு செயல்படுத்தப்படும்? -ஹரிகிஷன் சர்மா

 பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையின் போது இந்த திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் போது, ​​பிரதம மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனாவை (Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana (PMDKY)) தொடங்குவதாக அறிவித்தார்.


"ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் (Aspirational District Programme (ADP)) வெற்றியால், அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து  பிரதம மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனாவை மேற்கொள்ளும்" என்று திட்டத்தை அறிவிக்கும் போது சீதாராமன் கூறினார்.


ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் (Aspirational District Programme (ADP)) ஜனவரி 2018-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் மிகவும் வளர்ச்சியடையாத 112 மாவட்டங்களை விரைவாகவும் திறம்படவும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 


1. ஒருங்கிணைப்பு (Convergence) - ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை ஒன்றிணைத்தல்.


2. ஒத்துழைப்பு (Collaboration) - ஒன்றிய  மற்றும் மாநில அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இடையே முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.


3. போட்டி - மாவட்டங்களை அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் மாதாந்திரமாக தரவரிசைப்படுத்துதல் போன்ற மூன்று முக்கிய கொள்கைகளை (3 Cs)  இந்த திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.


சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் & நீர் வளங்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 சமூக-பொருளாதாரக் கருப்பொருள்களின் கீழ் 49 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.


PMDKY மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் 100 மாவட்டங்களில் கவனம் செலுத்தும்: குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அளவுருக்கள் என்று சீதாராமன் கூறியிருந்தார். ஆதாரங்களின்படி, வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் இந்த அளவுருக்களின் தரவுகளை சேகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டங்கள் அடையாளம் காணப்படும்.


பயிர்த் தீவிரம் (Cropping intensity) என்பது விவசாயத்திற்கு நிலம் எவ்வளவு திறமையாக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இது மொத்த பயிர் செய்யப்பட்ட பரப்பளவிலிருந்து நிகர விதைக்கப்பட்ட பரப்பளவின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. எளிமையாக பயிர் தீவிரம் என்பது ஒரு விவசாய ஆண்டில் ஜூலை முதல் ஜூன் வரை ஒரே நிலத்தில் எத்தனை பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்ற எண்ணிக்கையை குறிக்கிறது.


இந்திய முழுவதும் 2021-22ல் பயிர் தீவிரம் 155% ஆக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் பெரிதும் மாறுபடுகிறது. 1950-51ல் பயிர் தீவிரம் 111% மட்டுமே.


மாவட்ட வாரியாக விவசாயக் கடன் குறித்த தரவுகளை வழங்குமாறு நிதிச் சேவைகள் துறை மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியிடம் (National Bank for Agriculture and Rural Development (NABARD)) அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


நிதி அமைச்சரின் கூற்றுப்படி: 


விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல்;


பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்கப்படுத்துவது.


பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிப்பது.


சிறந்த நீர் விநியோகத்திற்காக நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவது.


உழவர்களுக்கு நீண்டகால மற்றும் குறுகியகால கடன் வழங்குவது. இது போன்ற ஐந்து நோக்கங்களைக் இந்த திட்டம்  கொண்டுள்ளது.


இந்தத் திட்டம் 1.7 கோடி உழவர்களுக்கு பயனளிக்கும் என்று சீதாராமன் கூறினார்.


வரவு செலவு அறிக்கை ஆவணங்கள் திட்டத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கவில்லை என்றாலும், வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் இருந்து நிதி பெறப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்றிய அமைச்சரவையால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, அது களத்தில் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு,  அரசாங்கத்தால் இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைச் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.




Original article:

Share: