லா நினாவின் குளிரூட்டும் விளைவு (cooling effect) ஜனவரிமாத வெப்பநிலையைக் ஏன் குறைக்கவில்லை? -அலிந்த் சவுகான்

 ஜனவரி 2025-ம் ஆண்டில், உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டியது. இது கடந்த 19 மாதங்களில் இது 18 வது முறையாகும். டிசம்பர் 2024-ம் ஆண்டில் தொடங்கிய லா நினா கட்டம் (La Niña phase) வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் தரும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். இருப்பினும், இது நடக்கவில்லை.


கடந்த மாதம் இதுவரை பதிவானதிலேயே மிகவும் வெப்பமான நிலை ஜனவரி மாதமாகும். உலகளாவிய சராசரி மேற்பரப்பு, காற்று வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலையைவிட (1850-1900 சராசரி) 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இது கடந்த வாரம் ஐரோப்பாவின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (Copernicus Climate Change Service (C3S)) அறிவித்தது. வெப்பமண்டல பசிபிக் பகுதியில் லா நினா நிலைமைகளின் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய வெப்பநிலையில் அவற்றின் தற்காலிக குளிரூட்டும் விளைவு (temporary cooling effect) இருந்தபோதிலும் வெப்பநிலையின் சாதனை அளவை எட்டியுள்ளது என்றும் அது கூறியது.


ஜனவரி 2025-ம் ஆண்டில், உலகளாவிய சராசரி மேற்பரப்பின் காற்றின் வெப்பநிலை கடந்த 19 மாதங்களில் 18 வது முறையாக 1.5°C வரம்பைத் தாண்டியது. இது, டிசம்பர் 2024-ம் ஆண்டில் தொடங்கிய லா நினா கட்டம், விஷயங்களை குளிர்விக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். இருப்பினும், இது நடக்கவில்லை.


கோப்பர்நிக்கஸின் காலநிலை விஞ்ஞானி ஜூலியன் நிக்கோலஸ், ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்ஸிடம் பேசியதாவது, "இது ஒரு சிறிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது." விஞ்ஞானிகள் குளிரூட்டும் விளைவை அல்லது குறைந்தபட்சம் உலக வெப்பநிலையில் ஒரு தற்காலிக தடையை எதிர்பார்த்தனர். இருப்பினும், இந்த விளைவு தோன்றவில்லை.


முதலில், லா நினா (La Niña) என்றால் என்ன?


லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவின் (El Niño Southern Oscillation (ENSO)) மூன்று கட்டங்களில் ஒன்றாகும். ENSO என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு காலநிலை நிகழ்வு ஆகும். இது மேலே உள்ள வளிமண்டலத்தையும் பாதிக்கிறது. ENSO-ல் ஏற்படும் இந்த மாற்றங்கள் உலகளாவிய வளிமண்டல சுழற்சியை பாதிக்கின்றன. இது உலகம் முழுவதும் வானிலையை பாதிக்கிறது.


ENSO மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. இது, சூடான (எல் நினோ), குளிர் (லா நினா) மற்றும் நடுநிலையைக் கொண்டுள்ளது. இந்த கட்டங்கள் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கின்றன.


நடுநிலைக் கட்டத்தில், கிழக்கு பசிபிக் பெருங்கடல் (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) மேற்கு பசிபிக் பகுதியைவிட (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில்) குளிர்ச்சியாக இருக்கும். காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுவதால் இது நிகழ்கிறது. இந்த காற்று சூடான மேற்பரப்பு நீரை இந்தோனேசியாவை நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாக, கீழே இருந்து குளிர்ந்த நீர் அதன் இடத்தைப் பிடிக்க உயர்கிறது.


எல் நினோ கட்டத்தில், இந்த காற்றுகள் பலவீனமடைகின்றன. இதன் பொருள் தென் அமெரிக்க கடற்கரையிலிருந்து குறைந்த சூடான நீர் விலகிச் செல்கிறது. இதன் விளைவாக, கிழக்கு பசிபிக் வழக்கத்தை விட வெப்பமாகிறது.


இதற்கு நேர்மாறானது லா நினா கட்டத்தில் நிகழ்கிறது. வர்த்தக காற்று வழக்கத்தை விட வலுவாகிறது. அவை, மேற்கு பசிபிக் பகுதிக்கு அதிக அளவு தண்ணீரைத் தள்ளுகின்றன.


எல் நினோ ஏற்படும் போது, ​​உலகளாவிய வெப்பநிலை உயர்கிறது. லா நினாவின் போது, ​​அவை குறைகின்றன. இருப்பினும், பிராந்திய விளைவுகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. சில பகுதிகள் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் வெப்பமான மற்றும் குளிரான வெப்பநிலையை அனுபவிக்கக்கூடும்.


ஒவ்வொரு எல் நினோ மற்றும் லா நினா கட்டமும் வேறுபட்டவை. இரண்டு லா நினா சுழற்சிகளும் சரியாக ஒரே மாதிரியானவை அல்ல. அவை தீவிரம், கால அளவு மற்றும் அவை பாதிக்கும் பகுதிகளில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக, இந்த கட்டங்கள் எப்போதும் உலக வெப்பநிலையை ஒவ்வொரு முறையும் ஒரே வலிமையுடன் மாற்றுவதில்லை.


தற்போது நடைபெற்று வரும் லா நினா சுழற்சி பலவீனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் தாமதமான வருகையின் காரணமாக இருக்கலாம். செப்டம்பர் 2024-ம் ஆண்டில் லா நினா உருவாகும் என்று நிபுணர்கள் ஆரம்பத்தில் கணித்திருந்தனர். ஆனால் அது டிசம்பர் வரை வெளிப்படவில்லை. பல பிற காரணிகளும் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையின்படி, "எல் நினோ தெற்கு அலைவின் (El Niño Southern Oscillation (ENSO)) நிகழ்வுகள் வடக்கு அரைக்கோள குளிர்காலத்தில் உச்சத்தை அடைகின்றன. லா நினா வலுப்பெற அதிக நேரம் இல்லை." பலவீனமான லா நினா பொதுவாக வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


மேலும், லா நினா கட்டத்தின் வருகை இருந்தபோதிலும், வெப்பத்தைத் தடுக்கும் வளிமண்டல கார்பனின் அதிகரிப்பு முந்தைய ஆண்டுகளின் ஏற்கனவே உயர்ந்த அளவைவிட அதிகமாக உள்ளது. தி கான்வர்சேஷனின் (The Conversation) அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு வலுவான லா நினா கூடுதல் மழையைக் கொண்டுவருகிறது. இது அதிக தாவர வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து அதிக கார்பனை உறிஞ்சுகின்றன.


வளிமண்டலத்தில் தூசிப் படல செறிவு (aerosol concentration) அல்லது இடைநிறுத்தப்பட்ட துகள்களின் (suspended particles) குறைவு வெப்பநிலையை வெப்பமாக வைத்திருக்க உதவியிருக்கலாம். ஏனெனில், சில பகுதிகளில் சுத்தமான காற்று தூசிப் படலங்களைக் குறைத்துள்ளன. தூசிப் படலங்கள் பொதுவாக குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளன. அவை, சூரிய கதிர்வீச்சை மீண்டும் விண்வெளியில் சிதறடிக்கின்றன. அவை மேக உருவாக்கத்தையும் பாதிக்கின்றன. இது சூரிய ஒளி எவ்வளவு உறிஞ்சப்படுகிறது அல்லது பிரதிபலிக்கிறது என்பதைப் பாதிக்கிறது.


குறிப்பாக, மிகவும் வெப்பமான ஜனவரி மாதம் நீண்ட கால வானிலை முறைகளை முன்னறிவிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், உலகளாவிய வெப்பநிலையைக் குறைப்பதில் இயற்கை குளிர்ச்சி நிலைகள் (natural cooling phases) குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.


இதைத் தடுக்க, பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) உமிழ்வை நாம் கணிசமாகக் குறைக்க வேண்டும். 2024-ம் ஆண்டில், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு அளவுகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவை எட்டியது என்று C3S கூறுகிறது.




Original article:

Share: