தற்போதைய செய்தி : தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee for Fair Delimitation (JAC)), உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் இருப்பதாகக் கண்டறிந்தது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்கள் மக்களவை இடங்களை இழக்காது என்று ஷா உறுதியளித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மீதான முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
முக்கிய அம்சங்கள்:
• தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள், கர்நாடகாவின் துணை முதலமைச்சர் மற்றும் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகியோர் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை செயல்முறையை எதிர்க்க ஒன்றிணைந்தனர். இது வடக்கு, இந்தி பேசும் மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் பயனளிக்கும் அதே வேளையில் தெற்கு மற்றும் வேறு சில பகுதிகளுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்று குரல் எழுப்பினர்.
• 1971 முதல் முடக்கப்பட்ட மக்களவையின் தற்போதைய பிரதிநிதித்துவம், பிரதிநிதித்துவ சமநிலையை பராமரிக்கிறது. ஆனால் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறை செயல்முறை, அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட வட மாநிலங்களுக்கு அரசியல் அதிகாரத்தை மாற்றக்கூடும். இது மக்கள்தொகை கட்டுப்பாட்டு இலக்குகளை அடையாத மாநிலங்களுக்கு சாதகமாக சமநிலையை மாற்றும்.
• 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சுமார் 10 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்ப்படுத்துவர். முன்னதாக, 1951-ல் இடங்கள் 494 ஆகவும், 1961-ல் 522 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டன. அவசரநிலையின் போது, 1976-ல் 42-வது திருத்தம், மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இடங்களின் எண்ணிக்கையை முடக்கியது. 2002ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசாங்கம் இந்த முடக்கத்தை 2026 வரை நீட்டித்தது.
• கூட்டத்தின் முடிவில், நாடாளுமன்றத் தொகுதிகளை 25 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என்று நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee for Fair Delimitation (JAC)) தீர்மானம் கோரியது. தொகுதி மறுவரையறை செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மை, மாநில அரசுகளுடன் கட்டாய ஆலோசனை மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்களைப் பாதுகாக்க அரசியலமைப்பு மாற்றங்கள் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் எல்லை நிர்ணய கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1. ஒன்றிய அரசின் தெளிவற்ற உறுதிமொழியை நிராகரித்தல்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாநிலங்கள் "விகிதாச்சார அடிப்படையில்" இடங்களை இழக்காது என்றார். இருப்பினும், முதலமைச்சர் ஸ்டாலின் இதை நிராகரித்தார். இது "அரசியல் ரீதியாக தெளிவற்றது" என்றும், இது ஒரு முறையான உறுதிமொழி அல்ல என்றும் கூறினார்.
2. தீர்மானங்களும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களும்: நல்லாட்சிக்காக மாநிலங்களைத் தண்டிக்கும் எந்தவொரு தொகுதி மறுவரையறை செயல்முறை நடவடிக்கையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்றும், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்றும் JAC கூட்டத்தின் இறுதித் தீர்மானம் வலியுறுத்தியது. கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மையக் குழுவை அமைக்கவும் தீர்மானம் பரிந்துரைத்தது.
3. “நியாயமான பிரதிநிதித்துவத்திற்கான” (fair representation) ஐக்கிய முன்னணி: தென்னிந்தியாவின் மக்களவை பிரதிநிதித்துவத்தை 24%-லிருந்து 33% ஆக அதிகரிக்குமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிக்கும் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரலைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா?
• தொகுதி மறுவரையறை என்பது சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும். அரசியலமைப்பின் 82வது பிரிவு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை இடங்களின் ஒதுக்கீடு மக்கள்தொகை மாற்றங்களின் அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது.
• அரசியலமைப்பின் 81வது பிரிவின் படி, மக்களவையில் 550 உறுப்பினர்களின் வரம்பை நிர்ணயிக்கிறது. மாநிலங்களில் இருந்து 530 மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து தொகுதிகளும் ஒரே மாதிரியான மக்கள்தொகை அளவைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறுகிறது.
• சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தொகுதி மறுவரையறை செயல்முறை 1952, 1963, 1973 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் நான்கு முறை நடந்துள்ளது.
• மாநிலங்களுக்கிடையே இடங்களை மறுபகிர்வு செய்வதற்கு ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு தன்னாட்சி கொண்ட தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோரை உள்ளடக்கிய ஆணையத்தை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
• ஆணையம் தனது உத்தரவுகளை வெளியிட்டவுடன், அந்த முடிவுகள் இறுதியானவை. 1952ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 329A-ன் படி, இந்த உத்தரவுகளுக்கு முழு சட்ட அதிகாரம் உள்ளது மற்றும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.
• உச்சநீதிமன்றம் ஜூலை 2024-ல், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் தொகுதி மறுவரையறை ஆணைய உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. ஒரு உத்தரவு தெளிவாக நியாயமற்றதாகவும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு எதிராகவும் இருந்தால், நீதிமன்றங்கள் தேவையான தீர்வை வழங்க முடியும் என்று கூறியது.