2026-ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை அனைத்து மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
மே 2023 ஆம் அண்டில், பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதல் இருக்கைகள் தேவை என்று குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை பணிகள் 2026 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த விவாதம் கவனத்தை ஈர்த்துள்ளது. தொகுதி மறுவரையறையில் பயன்படுத்தப்படும் சூத்திரம், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டாட்சி முறை குறித்த கலவையான பதிவுகள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையிலான சீரற்ற மக்கள்தொகை வளர்ச்சி போன்றவை தொகுதி மறுவரையறை குறித்த விவாதம் நியாயம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இது தொடர்பாக விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, தொகுதி மறுவரையறை என்றால் என்ன? அது ஏன் நிறுத்தப்பட்டது? அது நமது அரசியலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு விவாதத்தை நடத்த வேண்டும்.
அரசியலமைப்பின் 82-வது பிரிவு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்கள்தொகை மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், நாடாளுமன்றம் ஒரு தொகுதி மறுவரையறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 170, மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் மாநில சட்டமன்றங்களின் அமைப்பை தீர்மானிக்கிறது. பிரிவு 55, குடியரசுத்தலைவர் தேர்தலில் மாநிலங்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. பிரிவு 81 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து மக்கள்தொகை அடிப்படையில் அவற்றைப் பகிர்ந்தளிக்கிறது. 1976 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 42வது திருத்தத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தது. குடும்பக் கட்டுப்பாடு மூலம் தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு இது பாதகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது. பின்னர், வாஜ்பாய் அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2026 ஆம் ஆண்டு வரை நீட்டித்தது.
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த தொகுதி மறுவரையறையானது, தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அதே வேளையில், வட இந்திய மாநிலங்களுக்கான இடங்களை அதிகரிக்கும். தற்போது, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை 543 மக்களவை இடங்களில் 174 இடங்களை (32%) கொண்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை 129 இடங்களை அல்லது 24 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மொத்த மக்களவை இடங்கள் 543 ஆக இருந்தால், வட இந்திய மாநிலங்கள் தங்கள் இடங்களை 205 ஆக அதிகரிக்கலாம். அதே, நேரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 103 ஆகக் குறையலாம். இடங்கள் 888 ஆக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கொள்ளளவு விரிவடைந்தால், வட இந்திய மாநிலங்களுக்கு 324 இடங்கள் (39%) இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு 164 இடங்கள் (19%) இடங்களைப் மட்டுமே பெறும்.
1971-ஆம் ஆண்டில், பீகாரும் தமிழ்நாட்டும் ஒரே மாதிரியான மக்கள்தொகையையும் சமமான மக்களவை இடங்களையும் கொண்டிருந்தன. காலப்போக்கில், பீகாரின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்தது. எனவே, அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது தமிழ்நாட்டை விட அதிகமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, வட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப் பெரிய தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, வரவிருக்கும் தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களுக்கு உள்ள சவாலை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா மக்கள் தொகையில் வட மாநிலங்கள் இப்போது 50சதவித்தை கொண்டுள்ளன. இது 1971 ஆம் ஆண்டில் 43% ஆக இருந்தது. அதே, நேரத்தில் தென் மாநிலங்களின் பங்கு 25% இலிருந்து 20% ஆகக் குறைந்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநிலங்கள் பல காரணங்களுக்காக கவலை கொண்டுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு மூலம் அவர்கள் தங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அவர்களின் இடங்களைக் குறைக்கக்கூடும். அரசியல் ரீதியாக, கர்நாடகாவை தவிர, தென்னிந்தியாவில் பாஜக அதிக ஆதரவைப் பெறவில்லை. தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது தென் மாநிலங்களை இதற்காகத் தண்டிக்க ஒரு வழியாக இருக்கலாம்.
மற்றொரு முக்கிய கவலை கூட்டாட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தலாகும். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்தல், கேரளா போன்ற மாநிலங்களுக்கு எதிரான நிதி பாகுபாடு, புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் மாநில நலத்திட்டங்களில் தலையிடுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்ற கவலைகளை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்க செய்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், வட மாநிலங்களை விட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வரி வருவாய் விகிதாச்சாரத்தில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன. இருப்பினும், இந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஆபத்தில் உள்ளது. பிரதிநிதித்துவம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் பொருளாதார அநீதி பற்றிய கவலைகளையும் எழுப்புகின்றன. சுகாதாரம், கல்வி மற்றும் சமூக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்த மாநிலங்கள் தண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கவலைகளைத் தீர்க்க, அரசியலமைப்பு பாதுகாப்புகள் அவசியம். தொகுதி மறுவரையறை செயல்முறை மக்கள்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொகுதி மறுவரையறை பங்களிப்புகள், வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் நிர்வாக வெற்றியை கருத்தில் கொள்ள வேண்டும். இது அனைத்து பிராந்தியங்களுக்கும் நியாமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும் அதே வேளையில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் ஒரு அமைப்பு நீதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையாகும். நியாயமற்ற தொகுதி மறுவரையறை செயல்முறை, நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களித்த பகுதிகளை விலக்கக்கூடும்.
டி. ராஜா, எழுத்தாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்.