தற்போதுள்ள வரவு செலவு அறிக்கை செயல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கைக் குறைத்து, ஜனநாயகப் பொறுப்புணர்வை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வரவு செலவு அறிக்கை என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நாட்டின் முன்னுரிமைகள், பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் நிர்வாக முறையைக் காட்டுகிறது. ஜனநாயக நாடுகளில், நாடாளுமன்றங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துகின்றன. வரவு செலவுத் திட்டங்களை வடிவமைக்க உதவுகின்றன. நிதி ஒழுக்கத்தைப் பராமரிக்கின்றன மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன.
இந்தியாவில், வரவு செலவு அறிக்கையில் நாடாளுமன்றத்திற்கு குறைவான பங்கே உள்ளது. அரசாங்கம் செயல்முறையை கட்டுப்படுத்துகிறது. சட்டமியற்றுபவர்களுக்கு நிதிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது வடிவமைக்க மிகக் குறைந்த வாய்ப்பையே வழங்குகிறது. நாடாளுமன்றத்தின் வரவு செலவு அறிக்கைளை அங்கீகரிப்பதில் இருந்து பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்க உதவ வேண்டும். இதற்கு வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கை அலுவலகத்தை (Parliamentary Budget Office (PBO)) நிறுவுதல் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
வரவு செலவு அறிக்கை ஜனநாயகத்தின் தூண்
வரவு செலவு அறிக்கை, என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை இது தீர்மானிக்கிறது மற்றும் அரசாங்கத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை அமைக்கிறது. வரலாறு முழுவதும், சட்டமன்றங்கள் பொது நிதியைக் கட்டுப்படுத்தப் போராடியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றம் முதல் நவீன ஜனநாயகங்கள் வரை, வரவு செலவு அறிக்கையின் மேற்பார்வை அரசாங்கத்தின் அதிகப்படியான அணுகலைத் தடுக்க உதவியுள்ளது.
உலகளவில், நாடாளுமன்றங்கள் வரவு செலவு அறிக்கை மீது வெவ்வேறு கட்டுப்பாட்டு நிலைகளைக் கொண்டுள்ளன. சில நாடுகள் வரவு செலவு அறிக்கைகளை உருவாக்கி மாற்றியமைக்கின்றன மற்றவை அவற்றை வெறுமனே அங்கீகரிக்கின்றன. சில நாடுகள் விரிவான விவாதங்களை நடத்துகின்றன. மற்றவை நிதிக் குழுக்களை நம்பியுள்ளன. ஆனால், ஒன்று தெளிவாக உள்ளது. அதிக வரவு செலவு அறிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஈடுபாடு சிறந்த சமூக மற்றும் பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் வரவு செலவு அறிக்கை உருவாக்கம் மற்றும் அதை ஆய்வு செய்வதில் நாடாளுமன்றத்தின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானது. நிதி அமைச்சகம் வரவு செலவு அறிக்கையை தனியாகத் தயாரிக்கிறது. வரவு செலவு அறிக்கை மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் வரை கேபினட் அமைச்சர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைக்கப்டுகிறது. மற்ற மசோதாக்களைப் போல் இல்லாமல், வரவு செலவு அறிக்கை நாடாளுமன்றத்தை அடைவதற்கு முன்பு அமைச்சரவையில் முழுமையாக விவாதிக்கப்படுவதில்லை. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் இந்த செயல்முறை பலவீனமான விவாதங்களுக்கும் மோசமான மேற்பார்வைக்கும் வழிவகுக்கிறது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் முக்கிய கொள்கைகளை பலவீனப்படுத்துகிறது.
மக்களவை ஒரு ஜனநாயக அமைப்பாக இருந்தாலும், வரவு செலவு அறிக்கை விவாதங்களில் அதன் பங்கு மிகக் குறைவு. விந்தையாக, இந்தியா ஒரு நிதியமைச்சரை மாநிலங்களவை உறுப்பினராக இருக்க அனுமதிக்கிறது. ஆனால், அவர்களால் மக்களவையில் தங்கள் சொந்த வரவு செலவு அறிக்கை முன்மொழிவுகளில் வாக்களிக்க முடியாது. இது பிரிட்டிஷ் சபையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தாலும், நிதிச் சட்டங்களில் ஓரளவு அதிகாரம் செலுத்துகிறது.
வரவு செலவு அறிக்கை மீதான நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு பலவீனமடைந்துள்ளது. விவாதங்கள் குறுகியதாகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளது. குழுக்கள் வரவு செலவு அறிக்கை விவரங்களை திறம்பட மதிப்பாய்வு செய்வதில்லை. மேலும், சட்டமியற்றுபவர்கள் வரவு செலவு அறிக்கை முடிவுகளை மாற்ற முடியாது. அவர்களின் பங்கு பெரும்பாலும் கேள்வி இல்லாமல் ஒப்புதல் அளிப்பதாகவே உள்ளது.இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புணர்வைக் குறைக்கிறது.
வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள்
வரவு செலவு அறிக்கை தயாரிப்பில் நாடாளுமன்றம் தனது உரிமையை மீண்டும் பெற இரண்டு முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும். வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவு அறிக்கைக்கு அலுவலகத்தை உருவாக்குதல்.
வரவு செலவு அறிக்கை செயல்பாட்டில் பயனுள்ள ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக, மழைக்கால கூட்டத்தொடரின் போது வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களை நாடாளுமன்றம் நிறுவனமயமாக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நாள் வரையிலான ஒரு பிரத்யேக விவாத காலம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நிதி ஆரோக்கியத்தை மதிப்பிடவும், வரவு செலவு அறிக்கை முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டவும், அரசாங்கத்தின் பரிசீலனைக்காக ஒரு பரந்த பொருளாதார கட்டமைப்பை முன்வைக்கவும் அனுமதிக்கும். இத்தகைய விவாதங்கள் பாடக் குழுக்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும், தகவலறிந்த உள்ளீடுகளை வழங்குவதற்கான அவர்களின் திறனை மேம்படுத்தும்.
வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்கள் வரவு செலவு அறிக்கை தயாரிக்கும் செயல்முறையை ஜனநாயகமாக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் கவலைகளை எழுப்பலாம், நியாயமான வள விநியோகத்தை பரிந்துரைக்கலாம் மற்றும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கலாம். மிக முக்கியமாக, இந்த விவாதங்கள் பொதுமக்களை அதிக அளவில் ஈடுபடுத்தும் மற்றும் நிதி முடிவுகளை தெளிவாகவும் நம்பகமானதாகவும் மாற்றும்.
வரவு செலவு அறிக்கை தயாரிப்பில் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தால், வாக்காளர்களை மகிழ்விக்க அவர்கள் பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவிடக்கூடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். சில பொருளாதார வல்லுநர்கள் இது நிதி ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், மேற்பார்வை இல்லாமல் அரசாங்கம் எப்போதும் பொதுமக்களின் நலனுக்காக செயல்படும் என்று நம்புவது நடைமுறைக்கு மாறானது. உண்மையில், எந்த அரசாங்கமும் பொருளாதாரத்தில் நியாயத்தை அதன் சொந்தமாக உறுதி செய்ததில்லை.
ஆரோக்கியமான ஜனநாயகம் அதிகாரத்தை சமநிலைப்படுத்துகிறது. நிர்வாகம் நிதி விருப்புரிமையைத் தக்க வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாகும்.
வரவு செலவு அறிக்கை சீர்திருத்தத்தின் ஒரு முக்கிய அம்சம், நாடாளுமன்றத்தின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதாகும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தன்னாட்சி மற்றும் பாரபட்சமற்ற வரவு செலவு அறிக்கை பகுப்பாய்வை வழங்கும் நிறுவன வழிமுறை இந்தியாவில் இல்லை.
தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் நிபுணர் பொருளாதார முன்னறிவிப்புகள் இருப்பதால், பாராளுமன்ற வரவு செலவு அறிக்கை அலுவலகம் (PBO) நிறுவுவது இந்த இடைவெளியைக் குறைக்கும். அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவு அறிக்கை அலுவலகம் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒத்த அமைப்புகளை மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் நன்கு கட்டமைக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை அலுவலகம் அரசாங்க செலவினம், வருவாய் கணிப்புகள் மற்றும் நிதிக் கொள்கைகளை பகுப்பாய்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இது தன்னாட்சி பொருளாதார முன்னறிவிப்புகளை நடத்தும், முன்மொழியப்பட்ட கொள்கைகளின் நிதி தாக்கத்தை மதிப்பிடும் மற்றும் நடுத்தர கால மற்றும் நீண்ட கால வரவு செலவு அறிக்கைகளை மதிப்பிடும்.
கூடுதலாக, வரவு செலவு அறிக்கை அலுவலகம் (PBO) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமியற்றுபவர்களுக்கு கொள்கை விளக்கங்களை வழங்கும். அவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். இது அரசாங்கத்தின் கொள்கைகளில் தலையிடாது. ஆனால், வரவு செலவு அறிக்கை ஆய்வு உறுதியான ஆராய்ச்சியின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அதை ஆதரிக்கும். இது அரசாங்கத்தை பொறுப்பு ஏற்க வைக்கும் நாடாளுமன்றத்தின் திறனை வலுப்படுத்தும் மற்றும் அடிப்படை கொள்கை விவாதங்களை ஊக்குவிக்கும்.
நாடாளுமன்ற அதிகாரத்தை மீண்டும் பெறுதல்
தற்போதைய, வரவு செலவு அறிக்கை செயல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கைக் கட்டுப்படுத்துகிறது. ஜனநாயக பொறுப்புணர்வைக் குறைக்கிறது. வரவு செலவு அறிக்கைக்கு முந்தைய விவாதங்களும் நாடாளுமன்ற வரவு செலவு அறிக்கை அலுவலகமும் (Parliamentary Budget Office (PBO)) நாடாளுமன்றம் வரவு செலவு அறிக்கைகளை அங்கீகரிப்பதில் இருந்து அவற்றை தீவிரமாக வடிவமைப்பதற்கு உதவும்.
இந்த சீர்திருத்தங்கள் சிறிய மாற்றங்கள் மட்டுமல்ல. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளாகும். அவை அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் மட்டும் அல்லாமல் கூட்டு விவாதத்தின் மூலம் நிதி முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும். இது வலுவான நாடாளுமன்ற ஈடுபாடு நியாயமான பொருளாதாரக் கொள்கைகள், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் நிதி அமைப்புக்கு வழிவகுக்கும்.
வினோத் பானு, புது டெல்லியில் உள்ள சட்டமன்ற ஆராய்ச்சி மற்றும் வழக்குரைத்தல் மையத்தின் (Centre for Legislative Research and Advocacy (CLRA)) இயக்குனர் ஆவார்.