குறைவான மருத்துவமனை வருகைகள், மேம்பட்ட கற்றல் அளவீடுகள். தமிழ்நாடு தொடக்கப் பள்ளிகளின் காலை உணவுத் திட்டம் சோதனை வெற்றி. -பிரபாகர் தமிழரசு

 அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5,300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு கணக்கெடுப்பில், காலை உணவுத் திட்டம், மாணவர்களின் எழுத்து பணிகளை முடிக்கும் திறனை அதிக  அளவில்  உயர்த்தியுள்ளது  என்று கூறப்பட்டுள்ளது.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதன்மையான காலை உணவுத் திட்டம், மாநில அரசுப் பள்ளிகள் முழுவதும் கணிசமான உடல்நலம் மற்றும் கல்விப் பலன்களை வழங்கியுள்ளது என்று மாநிலத் திட்டக் குழு (State Planning Commission (SPC)) கண்டறிந்துள்ளது.


‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் பயிலும் குழந்தைகள் மீதான தாக்கம்’ (‘Chief Minister’s Breakfast Scheme: Impact on Children in Primary Classes in Government Schools’) என்ற தலைப்பிலான சிறப்பு அறிக்கை, காலை உணவுத் திட்டத்தால், அரசுப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புக் குழந்தைகளிடையே மருத்துவமனை சேர்க்கையில் 63.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 2023ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2024  வரையிலான காலகட்டத்தில் 70.6 சதவீதம் தீவிர நோய்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளின் மாணவர்களிடையே மருத்துவமனை வருகைகள் கிராமப்புறங்களில் 68.4 சதவீதமும், நகர்ப்புறங்களில் 29.4 சதவீதமும் குறைந்துள்ளன. இது ஊட்டச்சத்து சவால்கள் உள்ள பகுதிகளில் திட்டத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.


சுகாதார அளவுகள் தவிர, தமிழ்நாடு மாநில திட்டக்குழு மார்ச் 13 அன்று முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில், வகுப்பில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க இத்திட்டம் உதவியது.


நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5,300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கவனம் மற்றும் புரிதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன. தூண்டுதலின்றி கவனம் செலுத்தக்கூடிய மாணவர்களின் சதவீதம் 85.8 சதவீதத்திலிருந்து 93.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றும் திறன் 91.3 சதவீதத்திலிருந்து 95.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


அதே நேரத்தில், மாணவர்கள் எழுத்து பணிகளை முடிக்கும் திறன் 89.6 சதவீதத்திலிருந்து 95.4 சதவீதமாக உயர்ந்துள்ளன. நினைவாற்றலைத் தக்கவைத்தல் மற்றும் கற்றல் திறன் ஆகியவை அதிகரித்து வருகின்றன. பாடத்தை நினைவுபடுத்தும் திறன் 71.4 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாகவும், புதிய விஷயங்களைக் கற்கும் திறன் 88.1 சதவீதத்திலிருந்து 92.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.


கூடுதலாக, மாணவர்களின் வாசிப்புத் திறன் 88.9 சதவீதத்திலிருந்து 94.2 சதவீதமாகவும், பேசும் திறன் 92.9 சதவீதத்திலிருந்து 95.9 சதவீதமாகவும், கையெழுத்துத் திறன் 90.2 சதவீதத்திலிருந்து 93.4 சதவீதமாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.


காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 2022ஆம் ஆண்டு 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது.  இது ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பின்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 31,008 பள்ளிகளை எட்டியது. தற்போது, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 17 லட்சம் மாணவர்களுக்கு உணவளிக்கிறது. இதற்கான பட்ஜெட் சுமார் ரூ. 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாளும் காலை உணவு வகைகள் மாறுபடுகின்றன. இது சீரான ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் உப்புமா, கிச்சடி, பொங்கல் மற்றும் சேமியா கேசரி ஆகியவை அடங்கும். ஒவ்வொரு உணவும் 293 கலோரிகள், 9.85 கிராம் புரதம், 5.91 கிராம் கொழுப்பு, 20.41 கிராம் இரும்பு மற்றும் 1.64 கிராம் கால்சியம் ஆகியவற்றை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க தினைகள் வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்க்கப்படுகின்றன.


முதலமைச்சராக பதவியேற்ற இரண்டாவது ஆண்டில், 2022 ஆம் ஆண்டு ஒரு பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கினார். 2024ஆம் ஆண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டபோது, ​​அவர் மாணவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறினார்.


மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஜே.ஜெயரஞ்சன் கூறியதாவது, இந்த திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


"பெரும்பாலான பெற்றோர்கள் அதிகாலையில் வேலைக்குச் செல்வதால் கிராமப்புற மாணவர்களே அதிகம் பயனடைந்தனர். வரும் நாட்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்" என்று ஜெயரஞ்சன் கூறினார்.


“நாங்கள் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​குழந்தைகள் பசியின்றிப் படிக்க முடியும் என்பதை உறுதி செய்வதே எங்கள் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆனால், அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை தற்போது விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், உணவு வகைகைளை  மிகவும் மாறுபட்டதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.


ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்து நியாயமான அணுகலை உறுதி செய்வதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை திட்டக்குழு பரிந்துரைக்கிறது. இது திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற உதவும்.


கணக்கெடுப்பின் பின்னணி


மாநிலத்தில் உள்ள 30,992 தொடக்கப் பள்ளிகளில், 38 மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதித்துவம் பெற்ற 100 பள்ளிகளை திட்டக்குழு தேர்வு செய்தது. பெற்றோரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, 82 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 3,944 மாணவர்களிடமும், 18 நகர்ப்புற பள்ளிகளைச் சேர்ந்த 1,330 மாணவர்களிடமும் தரவு சேகரிக்கப்பட்டது.


சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையின் தலைமையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் சமூக மருத்துவத் துறையால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


முதல் சுற்று டிசம்பர் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்டாலும், மூன்று பின்தொடர்தல் சுற்றுகள் மார்ச் 2024, ஜூன் 2024, செப்டம்பர் 2024, மற்றும் டிசம்பர் 2024 ஆண்டில் இறுதிச் சுற்றுக்கு முன் நடத்தப்பட்டன.


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது, ​​இந்தத் திட்டம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டதாகக் கூறினர். கோவை நகர்ப்புறத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரான பி. ஆபிரகாம், இந்தத் திட்டம் தொடங்கிய பிறகு காலை வகுப்புகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தியதாகக் கூறினார்.


"இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, காலை கூட்டத்தின் போது குறைந்தது நான்கு முதல் ஐந்து பேர் மயக்கம் அடைவார்கள், ஆனால் இப்போது இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, மாணவர்களின் கவனமும் அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் தங்கள் எதிர்பார்ப்புகளை விட பயனுள்ளதாக இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


"இந்த நவீன யுகத்தில் யாராவது தங்கள் குழந்தைகளை காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு அனுப்புவார்களா என்று 2022ஆம் ஆண்டில் நாங்கள் யோசித்தோம். ஆனால் திட்டம் தொடங்கியபோது நாங்கள் தவறு செய்தோம் என்று நிரூபிக்கப்பட்டது," என்று அருணா கூறினார். தனது பள்ளியில் 98% குழந்தைகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.


மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து நிலைகள்


எண்கள் சொல்கின்றன


டிசம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில், வருகை 89%-லிருந்து 90% ஆக சற்று அதிகரித்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. மாணவர்களின் நேரமின்மையும் சற்று மேம்பட்டு, அனைத்து குழுக்களிலும் 97.2% இலிருந்து 98.4% ஆக உயர்ந்துள்ளது.


இந்த ஆய்வு மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பட்டதாகக் காட்டியது. இது அவர்களை சாதாரண, மெல்லிய, மிகவும் மெல்லிய, அதிக எடை உள்ளவர்கள் என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்தது. டிசம்பர் 2023ஆம் ஆண்டில் 'கடுமையாக மெலிந்த' மாணவர்களில், சுமார் 25.8% பேர் 'மெலிந்த'வர்களாகவும், சுமார் 32.1% பேர் 'சாதாரண' எடையை அடைந்ததாகவும் தெரிவித்தனர்.


இதேபோல், டிசம்பர் 2023ஆம் ஆண்டில் 'மெல்லிய' என வகைப்படுத்தப்பட்டவர்களில், 46.7 சதவீதம் பேர் 'சாதாரண' வகையை அடைந்தனர், 42.6 சதவீதம் பேர் 2023 டிசம்பரில் 'அதிக எடையில்' இருந்து 'சாதாரணமாக' மாறியுள்ளனர்.


இருப்பினும், 'பருமனான' பிரிவில் மாணவர்களிடையே முன்னேற்றம் மெதுவாக இருந்தது, 17 சதவீதம் பேர் 'அதிக எடை'க்கும் 20.8 சதவீதம் பேர் 'சாதாரண'த்திற்கும் மாறினர்.


பல காரணிகள் மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்று ஜெயரஞ்சன் தெரிவித்தார். "பள்ளிகள் காலை மற்றும் மதிய உணவை வழங்குகின்றன. ஆனால் அவர்கள் வீட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, ஒரு மாணவருக்கு அவர்களின் பகுதியில் உள்ள மாசுபட்ட தண்ணீரிலிருந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அது பல மாதங்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார்.


மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர்களின் சுகாதார அளவுகளில் பிரதிபலிக்கிறது.


நகர்ப்புறப் பள்ளிகளில் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80.3 சதவீதமும், கிராமப்புறப் பள்ளிகளில் சுமார் 68.9 சதவீதமும் குறைந்துள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் விகிதம் முறையே 57.1 சதவீதம் மற்றும் 64.7 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை முறையே 72.9 சதவீதம் மற்றும் 67.5 சதவீதம் குறைந்துள்ளது.


"பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படுவதற்கு, உடலில் கொழுப்பு சதவீதம் அதிகமாக இருப்பதால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதே காரணமாக இருக்கலாம். இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது" என்று அறிக்கை கூறுகிறது.


இத்திட்டத்தை உயர்கல்வி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த திட்டக்குழுவானது முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளது.


"நாங்கள் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகிறோம். அதன் பிறகு, மாணவர்கள் தங்கள் பழைய உணவுப் பழக்கத்திற்குத் திரும்பினால், அவர்களின் ஊட்டச்சத்து அளவுகள் குறையும். எனவே, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களைச் சேர்க்க விரிவாக்கம் செய்யக் கோரியுள்ளோம். இது அவர்களின் ஊட்டச்சத்தைப் பராமரிக்கவும், அவர்களின் படிப்பை மேம்படுத்தவும் உதவும்," என்று ஜெயரஞ்சன் கூறினார்.



Original article:

Share: