இந்தியாவின் பிற பகுதிகள், சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாட்டிடம் இருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? -பழனிவேல் தியாக ராஜன்

 தமிழ்நாடு போன்ற வளர்ந்த தென் மாநிலங்களின் வெற்றிகரமான கொள்கைகளை வட மாநிலங்களில் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக மாற்ற விரும்புகிறது. இது பொருளாதார ரீதியாக பெருங்கேடான  விளைவுகளை (catastrophic) ஏற்படுத்தக்கூடும்.


1990-ஆம் ஆண்டில், இந்தியாவின் தனிநபர் வருமானம் (per capita income) $368 ஆகவும், சீனாவின் தனிநபர் வருமானம் $318 ஆகவும் இருந்தது. இரு நாடுகளும் ஒரே மாதிரியான பொருளாதார மட்டத்தில் இருந்தன. 1970-களின் பிற்பகுதியில் சீனா பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்கியது.  ஆனால் அதன் விரைவான வளர்ச்சி இன்னும் உச்சத்தை எட்டவில்லை. அடுத்த 30 ஆண்டுகளில், சீனா உலகளாவிய உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நாணய இருப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது. இது மிகப்பெரிய செல்வ உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இன்று, சீனாவின் தனிநபர் வருமானம் $12,614 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் தற்போதைய தனிநபர் வருமானமான $2,480-ஐ விட ஐந்து மடங்கு அதிகமாகும்.


நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறோம். புத்திசாலித்தனமான கொள்கைகளால் விரைவான நடவடிக்கைகளும் அடுத்த பத்தாண்டுகளில் வலுவான வளர்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர முடியும். வயதான மக்கள்தொகை காரணமாக உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு குறைந்து வருவதால், முதலீட்டாளர்களும் வர்த்தக நட்பு நாடுகளும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான புதிய இயந்திரமாக இந்தியா மாற முடியும்.


வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மிகப்பெரிய இளம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆங்கிலம் மூலம் வலுவான உலகளாவிய தொடர்புகள் மற்றும் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கக்கூடிய வளர்ந்து வரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதிக வளர்ச்சியை அடைய, நாம் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு உலக சந்தைக்குத் தேவையான திறன்களைக் கொண்ட கோடிக்கணக்கான இளம் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தியாவை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கான சிறந்த வழி, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களிடமிருந்து கற்றுக்கொள்வதாகும். மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் இந்தக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்தி, ஒட்டுமொத்த தேசிய சராசரியை மேம்படுத்த முடியும்.


சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களிலிருந்து வெற்றிகரமான கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது வெற்றிகரமான மாநிலங்களின் மீது மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களின் மாதிரிகளைத் திணிப்பதன் மூலம் தேசிய சராசரியைக் குறைக்கக்கூடும். வட மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாநிலங்கள் அதிக மக்கள் தொகை, அதிக பிறப்பு விகிதம் மற்றும் தேசிய சராசரியைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. 1.4 பில்லியன் மக்களை ஒரே அடையாளத்திற்குள் பொருத்த முயற்சிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்தின் மீது அரசாங்கத்தின் கவனம் தவறாகத் தெரிகிறது. வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக, அது நிர்வாகத்தைவிட அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது பொருளாதார ரீதியாக மோசமான  விளைவுகளை (catastrophic) ஏற்படுத்தக்கூடும்.


நான் மீண்டும் சொல்கிறேன். ஒன்றிய அரசின் முதன்மையான முன்னுரிமை சுகாதாரம் மற்றும் கல்வி விளைவுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், இந்த அளவீடுகள் தமிழ்நாட்டைவிட மிகவும் பின்தங்கியுள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் “இரட்டை-இயந்திர (ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே தலைமையைக் கொண்ட) அரசு” (double-engine sarkars) என்று அழைக்கப்படுபவர்களால் ஆளப்படுவதால், இந்தப் பிரச்சினை புறக்கணிக்கப்படுவது இன்னும் கவலையளிக்கிறது. இந்தியா நல்ல எதிர்காலத்தைக் பெற வேண்டுமென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டும். தமிழ்நாட்டில், இருந்து இந்தப் பகுதிகள் சிறந்த பலன்களை பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும், பல ஆண்டுகளாக நிதி உதவி அதிகரித்த போதிலும் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.


இந்த மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான இடைவெளி பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் மீது கொள்கைகளைத் திணிப்பதற்குப் பதிலாக, இந்த வேறுபாடுகளைக் குறைப்பதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். சுகாதார அணுகலை மேம்படுத்துதல், பெண்களுக்கான கல்வியை உறுதி செய்தல், பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல், திறன் மேம்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்ய முடியும்.


அதற்குப் பதிலாக, அவர்கள் அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை அச்சுறுத்தி, மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நியாயமான நிதியைத் தாமதப்படுத்துகிறார்கள். இது அவர்களின் சொந்த நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காகவா? இந்த அணுகுமுறை தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும் (self-defeating) இயல்பை கொண்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார நிலைமையைப் புரிந்துகொள்பவர்கள் எவரும் தமிழ்நாடு ஏன் எதிர்ப்பை முன்னின்று தெரிவித்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். தமிழ்நாடு நியாயமற்ற தொகுதி மறுவரையறை மாற்றங்களை எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை மாநிலம் கடுமையாக நிராகரிக்கிறது. கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் உரிமைகள் பலவீனமடைவதை எதிர்த்துப் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.


முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஒரு பெரிய கவலையாக உள்ளது. ஏனெனில், இது நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதிக்கிறது. “பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிக்க முடியாது” (no taxation without representation) என்ற கருத்து புறக்கணிக்கப்படுகிறது. தேசிய கருவூலத்திற்கு (national exchequer) விகிதாசாரமாக அதிக வரிகளை அளித்தபோதிலும், நமது மாநிலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் அதன் விகிதாசார பங்கைக் குறைக்கும் வாய்ப்பை எதிர்கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொறுப்பான தேசியக் கொள்கையாக மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய நாம் இப்போது அதற்காக தண்டிக்கப்படுகிறோம். இது தேசிய முடிவுகளில் நமது செல்வாக்கைக் குறைக்கும். நல்லாட்சி மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளை நியாயமற்ற முறையில் தண்டிக்கும். நாம் அதிகமாக வரி செலுத்தி, குறைவாகப் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம். இது உண்மையான ஜனநாயகத்தில் நியாயமற்ற நடவடிக்கையாக இருக்கும்.


ஒன்றிய அரசின் பிடிவாத குணம், வெற்றிகரமான மாதிரிகளிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் கிடைத்த நன்மைகள் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு கல்விக் கொள்கைகள் மற்றும் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தமிழ்நாடு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த எதிர்ப்பு நீதிக்கட்சி காலம் முதல் திராவிட இயக்கத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 1930-கள் முதல் 1960-கள் வரை, 1980-களின் பிற்பகுதி வரையிலும், தமிழ் மக்கள் இதுபோன்ற முயற்சிகளை மீண்டும் மீண்டும் எதிர்த்துப் போராடியுள்ளனர். அவர்கள் அடிபணியக்கூடியவர்கள் அல்ல.


தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி மற்றும் அதன் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்தப் போராட்டத்தை அவர் ஜனநாயக ரீதியாக வழிநடத்துகிறார். ஆதரவைத் திரட்டவும், பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலிக்கவும் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார். கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க மாநில மாநாடு நடத்தவும் அவர் அழைப்பு விடுத்தார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தக் குழு ஒரு பரந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படும். தமிழ்நாடு அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு நினைத்தால், அவர்கள் நாட்டின் மனநிலையைத் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.


அரசியல் தேவைகள் தேவைப்படும்போது பாஜக வியக்க வைக்கும் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.  அவற்றை "ரேவடி கலாச்சாரம்" (revdi culture) என்று அழைத்தார். இருப்பினும், அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும், அவரது கட்சி அவர் கண்டித்த அதே நலத்திட்ட அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது. இந்த தலைகீழ் மாற்றத்திற்கு ஒரு தெளிவான உதாரணம் தமிழ்நாட்டின் மகளிர் உரிமை தொகை (Magalir Urimai Thogai) திட்டமாகும். இந்த மாதிரியை பாஜக பல முறை நகலெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில், அவர்கள் தமிழ்நாட்டைவிட அதிக மாதாந்திர ஊதியங்களை தருவதாக உறுதியளித்துள்ளனர். இந்த மாற்றம் ஆச்சரியமாகவும் எதிர்பார்க்கப்பட்டதாகவும் உள்ளது. 


மகளிர் உரிமை தோகை (Magalir Urimai Thogai)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15, 2023-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெண்களுக்கு நிலையான வருவாய் வழங்கி அவர்களை வலுவாக்க உதவுகிறது. மேலும், பெண்களில் வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்க இது ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் இருந்து பாடங்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். இது வட இந்தியாவின் “இரட்டை இயந்திர (ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே தலைமையை கொண்ட) அரசுகள்” (double-engine sarkars) சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கு செயல்படுத்தப்பட வேண்டிய ஆழமான சமூக மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். வேறு எந்த நடவடிக்கையையும் விட, நமது நாட்டின் எதிர்காலம் இந்த மாநிலங்களின் இளைஞர்களின் வளர்ச்சியை பொறுத்து இருக்கும்.


பழனிவேல் தியாக ராஜன், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்.



Original article:

Share: