தற்போதைய செய்தி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்துதல் போன்ற பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் எல்லைகளுக்குள் இருந்தே திருப்பித் தாக்கும் திறன்களை உள்ளடக்கிய பல இராணுவ பதிலடி நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
• செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும்" என்றும் "அவர்களை உலகின் கடைசி எல்லை வரை துரத்துவோம்" என்றும் கூறினார்.
• அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் "இராணுவ பதிலடி இருக்கும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். தாக்குதலின் தன்மை பற்றி விவாதித்து வருகிறோம். 2019-ஆம் ஆண்டு முதல், நமது ஆயுதங்களை நவீனமயமாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நமது எல்லைக்குள்ளிருந்தே பயங்கரவாதிகளை இலக்கு வைக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
• 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவர் புல்வாமாவில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை, ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படை (Central Reserve Police Force (CRPF)) வாகனங்களின் மீது மோதச் செய்தார். சில நாட்களுக்குப் பிறகு பாலகோட்டில் இந்திய விமானப்படை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
• பகல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு மறுக்க முடியாதது என்று வலியுறுத்திய அரசாங்க வட்டாரங்கள், "இது பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிருடன் மிகவும் தொடர்புடையது" என்றும் அவரது நலன்களுடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டின. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, பகல்காம் தாக்குதல் "பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களின் பின்னணியில், பிரபலத்தைப் பெறவும், இந்தியாவில் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்கவும் ஜெனரல் முனிரின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
• மதத்தின் அடிப்படையில் இலக்குகளைத் தேர்ந்தெடுத்த பயங்கரவாதிகளின் அடையாளங்கள் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சிகள் "முன்னேற்றத்தில்" இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்களுக்குத் தெரியுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவால் அறிவிக்கப்பட்ட 5-அம்ச செயல் திட்டம்:
1. இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) உடனடியாக "நிறுத்தி வைத்துள்ளது".
2. புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு/இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாத நபர் (Persona Non Grata) என அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது. இந்தியா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்திலிருந்து தனது பாதுகாப்பு/கடற்படை/விமானப்படை ஆலோசகர்களை திரும்பப் பெறவுள்ளது.
3. சார்க் விசா விலக்கு திட்டம் (SAARC Visa Exemption Scheme (SVES)) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட எந்த விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவைவிட்டு வெளியேற 48 மணிநேரம் அவகாசம் உள்ளது.
4. அட்டாரி எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடல் - செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் எல்லையைக் கடந்து சென்றவர்கள் மே 1, 2025-க்கு முன்பு அந்த வழியாகத் திரும்பிச் செல்லலாம்.
5. தற்போதைய 55-ல் இருந்து தூதரகங்களின் எண்ணிக்கை 30ஆக குறைக்கப்படும். இது மே 01, 2025க்குள் நடைமுறைப்படுத்தப்படும்.