குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிடக் கற்றுக் கொடுப்பது பள்ளியிலேயே தொடங்கப்பட வேண்டும் -பவன் அகர்வால்

 உணவு எழுத்தறிவு (Food literacy) இனி ஒரு ஆடம்பரமல்ல. குழந்தைகளுக்கு உணவளிப்பதில் மட்டுமல்ல, ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்தமாதம், உலகத் தலைவர்கள் பாரிஸில் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து (N4G) உச்சிமாநாட்டிற்காக சந்தித்தனர். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA)), ஐக்கிய நாடுகள் சபையின் ஊட்டச்சத்துக்கான பத்தாண்டு நடவடிக்கை 2025ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தது. அனைத்து வகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முயற்சியைத் தொடரவும், 2030-ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை சிறப்பாகப் பொருத்தவும் இந்த நீட்டிப்பு நோக்கமாக உள்ளது.


ஊட்டச்சத்துக்கு இது ஒரு முக்கியமான தருணமாக இருக்கலாம். இது மக்கள் உணவை நாடுவதைப் பற்றியது மட்டுமல்ல. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள், ஏன் சாப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு. ஊட்டச்சத்து என்பது ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; இது கல்வி, நியாயம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.


இதுவரை, உலகளாவிய ஊட்டச்சத்து முயற்சிகள் பெரும்பாலும் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் கர்ப்பம் முதல் இரண்டு வயது வரை, ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கான மிக முக்கியமான நேரமாக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், இப்போது, ​​அடுத்த 4,000 நாட்களும் அதே அளவு முக்கியம் என்பதை நிபுணர்கள் உணர்ந்துள்ளனர். இதில் இளம் வயதினரின் காலமும் அடங்கும். இது பெரிய உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை மாற்றங்களின் காலமாகும். இது ஆரம்பகால ஊட்டச்சத்து பிரச்சினைகளை சரிசெய்ய மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.


இளமைப் பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து குழந்தைகள் சரியாக வளரவும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவும். இதை அடைய, குழந்தைகளுக்கு உணவளிப்பதைத் தாண்டி, ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி என்பதைக் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


பாரிஸ் உச்சிமாநாட்டில் நடந்த ஒரு துணை நிகழ்வு, “நன்றாக சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள்: உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட உணவுமுறைகள் மற்றும் மாற்றத்தின் முகவர்களாக இளைஞர்கள்” (“Learn to Eat Well: Bio-diverse Diets and Youth as Agents of Change”) என்ற தலைப்பில் இந்த யோசனையை தெளிவாக எடுத்துக்காட்டியது. உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் என்று மக்கள் இப்போது நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. கலோரிகளை எண்ணுவதைவிட அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் பூமிக்கும் நல்ல தேர்வுகளை எவ்வாறு செய்வது என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.


மாறும் உலகம்


இன்று, குழந்தைகள் உணவை எளிதாகப் பெறும் உலகில் வாழ்கிறார்கள்.  ஒரு தொலைபேசியைத் தட்டினால் போதும், அதை ஆர்டர் செய்து டெலிவரி பெறலாம். உணவும் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது, இதனால் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமாகிறது.


பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்வதற்கான போதுமான விவரம் அல்லது திறன்கள் இல்லை. அவர்களின் உணவுப் பழக்கம் பெரும்பாலும் நல்ல ஊட்டச்சத்து அல்லது மரபுகளுக்குப் பதிலாக நண்பர்கள், பழக்கவழக்கங்கள் அல்லது விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், மிகக் குறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள், மேலும் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள்.



உணவுப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம்


இன்றைய ஒரு பெரிய இழப்பு உணவுப் பன்முகத்தன்மை நமது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற பல்வேறு வகையான உணவுகளை உண்பது. நிலையான வளர்ச்சி இலக்கு 2 (பசியை முடிவுக்குக் கொண்டுவருதல்)-ன் கீழ் ஐக்கிய நாடுகள் சபை குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மையை உலகளாவிய நடவடிக்கையாக ஆக்கியுள்ளது. இது, கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை 10 உணவுக் குழுக்களில் குறைந்தது ஐந்து உணவுகளை சாப்பிட்டதா? எனும் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறது.


துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் பெரும்பாலான குழந்தைகள் போதுமான வகைகளை சாப்பிடுவதில்லை. அவர்களின் மோசமான உணவுமுறைகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு நமது உணவு முறைகள் மற்றும் கல்வியில் ஆழமான சிக்கல்களையும் காட்டுகின்றன.


மோசமான உணவுமுறைகள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைப் பருவ உடல் பருமன், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தடுக்கக்கூடிய வயதுவந்தோரின் நோய்களில் கிட்டத்தட்ட 70% குழந்தைப் பருவத்தில் உருவாகும் பழக்கவழக்கங்களுடன்  குறிப்பாக உணவுப் பழக்கங்களுடன் தொடங்குகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது சீக்கிரமாகத் தொடங்குவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது, மேலும் ஆரோக்கியமான பழக்கங்களைக் கற்பிக்க பள்ளிகள் சிறந்த இடம்.


இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி இல்லை அல்லது அது காலாவதியாகியுள்ளது மற்றும் நிஜ வாழ்க்கையுடன் இணைக்கப்படவில்லை. சரியான பாடத்திட்டம் அல்லது நல்ல கற்றல் பொருட்கள் இல்லை, இது குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிட கற்றுக்கொடுப்பதை கடினமாக்குகிறது. ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் பயிற்சி மற்றும் கருவிகளும் இல்லை. சரியான ஆதரவு இல்லாமல், பள்ளிகள் நல்ல உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வியை வழங்குவது கடினமாக உள்ளது.


இதனால்தான் நமக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் வயதுக்கு ஏற்ற பாடத்திட்டம் தேவை. இது உணவுக் குழுக்களுக்கு அப்பால் சென்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் கற்பிக்க வேண்டும். இது பாலர் பள்ளியின் ஆரம்பத்திலேயே தொடங்கி குறைந்தபட்சம் நடுநிலைப் பள்ளி வரை தொடர வேண்டும், உணவு, சுகாதாரம், அடையாளம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.


மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது. பன்முகத்தன்மை கொண்ட உணவுகள் ஏன் முக்கியம். உணவு அமைப்புகள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பது வரை அனைத்தையும் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்க முடியும். பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட உணவுகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். பல்வேறு வகையான உள்ளூர், பருவகால மற்றும் பாரம்பரிய உணவுகளை உண்ணுதல் இந்த உணவுமுறைகள் சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இது உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்கின்றன மற்றும் பாரம்பரிய உணவு அறிவைப் பாதுகாக்க உதவுகின்றன.


இது பள்ளி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்


குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிட கற்றுக்கொடுப்பது அவ்வப்போது பேச்சுக்கள் அல்லது செயல்பாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அது பள்ளி வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாற வேண்டும். இதன் பொருள் நல்ல, வயதுக்கு ஏற்ற பொருட்களைக் கொண்ட வாராந்திர பாடங்களைக் கொண்டிருக்க வேண்டும். பள்ளிகள் ஆரோக்கியமான உணவகங்கள், சமையலறைத் தோட்டங்கள், எளிய சமையல் அமர்வுகள் மற்றும் மாணவர்கள் தலைமையிலான பிரச்சாரங்கள் மூலம் இதை ஆதரிக்க வேண்டும். இந்த நிஜ வாழ்க்கை நடவடிக்கைகள் குழந்தைகள் உணவு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய நீடித்த அறிவு, பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்புகளை வளர்க்க உதவுகின்றன.


உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் ஏற்கனவே என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றன. மாணவர்கள் காய்கறிகளை வளர்க்கிறார்கள், உணவு சமைக்கிறார்கள், உணவு லேபிள்களைப் படிக்கிறார்கள், மேலும் அவர்களின் உணவுத் தேர்வுகள் அவர்களின் ஆரோக்கியத்தையும் பூமியையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.


இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பள்ளி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் திட்டம் இந்த வகையான கற்றலுக்கான இடத்தை உருவாக்கியுள்ளன. இருப்பினும், நமக்கு இன்னும் ஒரு தெளிவான அமைப்பு, ஒரு முழு பாடத்திட்டம், ஆண்டு முழுவதும் குறைந்தது ஒரு வாராந்திர அமர்வு, சரியான கற்றல் வளங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.


குழந்தைகளை கற்பவர்களாக மட்டுமல்ல, செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் பார்க்க வேண்டும். சரியான அறிவு மற்றும் கருவிகளுடன், அவர்கள் தங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்களை பாதிக்கலாம். அவர்கள் சிறந்த பள்ளி உணவைக் கேட்கலாம், உணவு வீணாவதைக் குறைக்க உதவலாம், ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வைப் பரப்பலாம்.


நன்றாக சாப்பிடக் கற்றுக்கொள்வது என்பது உணவைப் பற்றியது மட்டுமல்ல. அது ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது, கிரகத்தை மதிப்பது மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வளர்வது பற்றியது. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகமாக சாப்பிடுவது, காலநிலை மாற்றம் மற்றும் கலாச்சார இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உலகில், உணவுக் கல்வி விருப்பமானது அல்ல. அது அவசியமானது.


ஆரோக்கியமான, கனிவான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க விரும்பினால், இன்று முதல் ஒவ்வொரு குழந்தையின் கல்வியின் ஒரு பகுதியாக நன்றாக சாப்பிடக் கற்றுக்கொள்வதை நாம் செய்ய வேண்டும்.


பவன் அகர்வால், Food Future Foundation அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)).


Original article:
Share: