இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மோடி, வான்ஸ் வரவேற்பு -அமிதி சென்

 பரஸ்பர வரிவிதிப்புகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிப்பதால், இந்தப் பயணம் மிகவும் முக்கியமானது.


திங்கள்கிழமை புது தில்லியில் (இந்தியா) நடந்த சந்திப்பில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மற்றும் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் நாடுகளுக்கிடையேயான இராஜதந்திரரீதியில் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.


வான்ஸ் தனது குடும்பத்தினர் மற்றும் மூத்த அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மோடியைச் சந்தித்த பிறகு, வான்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில், "இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் உள்ள மக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. எரிசக்தி, பாதுகாப்பு, இராஜதந்திர ரீதியில் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர்கள் குறிப்பிட்டனர்."


இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நாட்டு உறவுகளில் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம்தான் முன்னோக்கிச் செல்லும் வழி என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக அறிக்கை கூறுகிறது.


இந்தியா தற்போது அமெரிக்காவுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வான்ஸின் வருகை முக்கியமானது. ஜூலை 9-ம் தேதிக்குள் இந்தியா மீது 26 சதவீத வரியை விதிக்க வேண்டாம் என்று டிரம்ப் நிர்வாகத்தை வற்புறுத்துவதற்காக BTA-ன் "ஆரம்ப கட்டத்தை" (early tranche) அடைய அவர்கள் முயற்சிக்கின்றனர்.


ஏப்ரல் 2-ம் தேதி பரஸ்பர வரிகள் அறிவிக்கப்பட்டாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாடுகளுக்கு அவகாசம் அளித்தார்.


இந்தியாவில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்த வாரம் வாஷிங்டன் டிசிக்கு சென்று வர்த்தக உரையாடலுக்கான அமெரிக்க சக அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. இந்த மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத அடிப்படை வரிகளை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.


நிதியாண்டு 25-ல் அமெரிக்கா இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி இடமாகத் தொடர்ந்தது. இந்தியா அமெரிக்காவிற்கு 86.51 பில்லியன் டாலர்களை ஏற்றுமதி செய்தது, இது அதன் மொத்த ஏற்றுமதியில் 19 சதவீதத்திற்கும் அதிகமாகும். அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 45.33 பில்லியன் டாலர் மதிப்புடையவை ஆகும்.


ஜனவரி மாதம் வாஷிங்டன் டிசிக்கு மேற்கொண்ட பயணத்தை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். அந்த பயணத்தின்போது, ​​அவர் அதிபர் டிரம்புடன் சாதகமுள்ள கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த கலந்துரையாடல்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுவான ஒத்துழைப்புக்கான திட்டத்தை உருவாக்க உதவியது. "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு (Make America Great Again (MAGA))" மற்றும் "விக்சித் பாரத் 2047" ஆகிய இரண்டின் பலங்களையும் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடக தளமான X வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பயணம் (ஏப்ரல் 21-24) உலகளாவிய இராஜதந்திர ரீதியில் இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.


திங்கட்கிழமை காலை வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவர்கள் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று, அரசாங்கத்தால் நடத்தப்படும் காட்டேஜ் எம்போரியத்தில் (Cottage Emporium) ஷாப்பிங் செய்தனர்.


அடுத்து, வான்ஸ் ஜெய்ப்பூருக்குச் செல்வார் எனவும், அவர் ஒரு நிகழ்வில் பேசுவார் மற்றும் சில தனியார் கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் குறிப்பிட்டிருந்தார். புதன்கிழமை, துணைத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் ஆக்ராவுக்குச் செல்வார்கள். அவர்கள் வியாழக்கிழமை அதிகாலை நாடுதிரும்புவார்கள்.


Original article:
Share: