ஒவ்வொரு நகரமும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கு உள்ளூர் ஆளுகை, சிறந்த திட்டமிடல், மற்றும் நகரம் சார்ந்த உத்திகள் தேவைப்படுகின்றன.
கோடைகாலம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய நகரங்கள் நீர் பற்றாக்குறை அதிகரிக்கும் மின்சாரத் தேவை மற்றும் வெப்பநிலைகளால் போராடி வருகின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலிருந்து வரும் அறிக்கைகள் நீர் டேங்கர் முன்பதிவுகளில் அதிகரிப்பைக் காட்டுகின்றன. அதே நேரத்தில் குளிரூட்டி பயன்பாடு அதிகரிப்பதால் மின்வெட்டுகள் ஏற்படுத்துகிறன. ஆண்டுதோறும் ஏற்படும் போராட்டங்கள் ஒரு அவசரமான கேள்வியை எழுப்புகின்றன. 30%-க்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் நம் நகரங்கள், காலநிலை தீவிரங்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கலுக்கு தயாராக உள்ளனவா?
நகரமயமாக்கல் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளைக் கொண்டு வருவதோடு, அதிகரித்த மாசுபாடு, நெரிசல், மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கும் வழிவகுக்கிறது. இவை பெரும்பாலும் ஏழைகளை கடுமையாக பாதிக்கின்றன. Sustainable Futures Collective தங்களது 2025ஆம் ஆண்டு வெப்பமய உலகத்திற்கு இந்தியா தயாரா? (Is India Ready for a Warming World?)’என்ற அறிக்கையில், நகரங்களில் காலநிலை மாற்றத்திற்கான நீண்டகால திட்டமிடல் தொடர்பாக இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டும் என்று கண்டறிந்துள்ளனர். நம் நகரங்கள் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை (urban heat island effect) எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்த கவலைகளும் நாடாளுமன்றத்தில் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. இத்தகைய தெளிவான நிலைமைகள் 2030-ஆம் ஆண்டுக்குள் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நெகிழ்திறன் கொண்ட, மற்றும் நிலையான நகர்ப்புற சூழல்களை உருவாக்குவதற்கான நிலையான வளர்ச்சி இலக்கு-11 (Sustainable Development Goal (SDG-11)-ஐப் பின்தொடர்வதில் நமது நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இத்தகைய உண்மைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
குறியீடுகள் உண்மையை பிரதிபலிக்கின்றனவா?
உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்கு-11 குறிகாட்டிகள் இருந்தாலும், இந்தியாவில் திறம்பட கண்காணிப்பதற்கான நகர-அளவிலான கருவிகள் இல்லை. நிதி ஆயோக்கின் SDG நகர்ப்புற குறியீடு 77 குறிகாட்டிகளின் அடிப்படையில் 56 நகரங்களை தரவரிசைப்படுத்துகிறது. ஆனால், அதன் SDG-11 கூறு நான்கு அம்சங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அவை ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan), சாலை விபத்து மரணங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-அர்பன் (Pradhan Mantri Awas Yojana (PMAY-U)) வீட்டுவசதி மற்றும் கழிவு மேலாண்மைக்கு பயன்படுகிறது. வாழ்க்கை வசதி குறியீடு 111 நகரங்களை உள்ளடங்கியுள்ளது. ஆனால், விரிவான SDG-11ல் மதிப்பீடு இல்லை.
மெர்சர் மற்றும் எகனாமிஸ்ட் போன்ற சர்வதேச குறியீடுகள் நெகிழ்திறன் கொண்ட நகரங்கள் குறித்த பார்வைகளை வழங்குகின்றன. ஆனால், இந்திய நிலைமைகளை கருத்தில் கொள்வதில்லை. SDG-11 குறியீடு இல்லாததால், கொள்கை வகுப்பாளர்கள் உண்மையிலேயே பாதுகாப்பான நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகரங்களை அடையாளம் காண முடியாமல் ஒரு கொள்கை-ஆராய்ச்சி இடைவெளி உருவாகிறது.
இந்த இடைவெளியைக் குறைக்கவும், நிதி ஆயோக் பயன்படுத்தும் குறியீடுகளை மிகவும் விரிவான குறியீடுகளுடன் நிரப்பவும், எங்கள் சமீபத்திய ஆராய்ச்சி நான்கு தனித்துவமான குறியீடுகளை உருவாக்குகிறது - SDG-11-ன் ஒவ்வொரு தூணுக்கும் ஒன்று, இதில் ஒவ்வொரு குறியீட்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகளில் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 10 முக்கிய நகரங்களை (ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை, புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் சூரத்) தரவரிசைப்படுத்தினோம். பாதுகாப்பிற்காக ஒன்பது குறிகாட்டிகளும், உள்ளடக்கியதற்காக 19 குறிகாட்டிகளும், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை குறியீடுகளுக்கு 15 குறிகாட்டிகளும் பயன்படுத்தப்பட்டன. குறிகாட்டிகளை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் அளவுருக்கள் நகர்ப்புற சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைகளிலிருந்து கடன் வாங்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011, சாலைப் போக்குவரத்து ஆண்டறிக்கை, இந்திய வன ஆய்வு, தேசிய குற்ற ஆராய்ச்சி பணியகம், காலமுறை தொழிலாளர் படை ஆய்வு, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் காலநிலை அட்டவணைகள் மற்றும் ஓலா மொபிலிட்டி நிறுவனத்தின் நகரும் எளிமை குறியீடு 2022 போன்ற பல்வேறு தரவுத்தொகுப்புகளிலிருந்து தரவு பெறப்பட்டது. எடையிடுதலுக்கு மிகவும் புறநிலை அணுகுமுறையை வழங்குவதால், குறியீடுகளுக்கான எடைகளை உருவாக்க, ஷானன் என்ட்ரோபி வெயிட்டிங் நுட்பம் (பல அளவுகோல் முடிவெடுக்கும் மாடலிங்கில் இருந்து கடன் வாங்கப்பட்டது) எனப்படும் ஒரு புதிய முறையைப் பயன்படுத்தினோம்.
நகரங்கள் முழுவதும் SDG-11 செயல்படுத்தல் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை முடிவுகள் வழங்குகின்றன. பகுப்பாய்வு செய்யப்பட்ட 10 முக்கிய நகரங்களில், உள்ளடக்கியதில் அகமதாபாத் முதலிடத்திலும், ஜெய்ப்பூர் மிகக் குறைந்த இடத்திலும் உள்ளன. பெங்களூரு பாதுகாப்பான நகரமாகத் தோன்றியது. அதே நேரத்தில் கொல்கத்தா பாதுகாப்பில் மிகக் குறைந்த இடத்திலும் உள்ளது. சூரத் நிலைத்தன்மையில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா பின்தங்கியுள்ளது. காலநிலை மீள்தன்மை அடிப்படையில், சென்னை முதலிடத்திலும், ஜெய்ப்பூர் மிகக் குறைந்த மீள்தன்மை கொண்டதாகவும் உள்ளது. நிதி ஆயோக்கின் SDG-11 தரவரிசைகளுடன் ஒப்பிடுகையில், முன்னணியில் இருக்கும் நகரங்கள் மற்றும் செயல்திறன் கொண்ட நகரங்கள் என குறிக்கப்பட்ட நகரங்கள் நமது குறியீடுகளில் மோசமாக செயல்பட்டன என்பதைக் காட்டுகிறது.
உள்ளடக்கிய குறியீட்டில் உள்ள மாறுபாடுகள் சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கின்றன. நகர்ப்புற திட்டமிடலில் வாய்ப்புகளுக்கு சமமான அணுகல் தேவை மற்றும் உள்ளடக்கிய யோசனையை விரிவுபடுத்துகின்றன. பாதுகாப்பு தரவரிசையில் உள்ள வேறுபாடுகள், சில நகரங்கள் தீவிரமான சட்ட அமலாக்கத்தால் பயனடைகின்றன. மற்றவை சிறந்த குற்றத் தடுப்பு மற்றும் நகர்ப்புற பாதுகாப்பு உத்திகள் தேவை என்பதைக் குறிக்கின்றன. நிலைத்தன்மை தரவரிசைகள் சுற்றுச்சூழல் திட்டமிடல், கழிவு மேலாண்மை மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் சீரற்ற முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இது விரிவான நிலைத்தன்மை கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது. மீள்தன்மையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, ஜனாக்ரஹாவின் இந்திய நகர அமைப்புகளின் வருடாந்திர கணக்கெடுப்பு 2023, 16 நகரங்களில் மட்டுமே “நகர நிலைத்தன்மை திட்டம்' இருப்பதாகவும், 17 நகரங்களில் 'நகர மீள்தன்மை உத்திகள்” இருப்பதாகவும் தெரிவித்தது. இந்தியாவில் கணிசமான முன்னேற்றத்தை அடைய SDG-11-க்கு தேவையான அடித்தளத்தில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை இது குறிக்கிறது.
முன்னோக்கி செல்லும் பாதை
இந்தியாவின் நகர்ப்புற எதிர்காலம் ஒரு முக்கிய திருப்புமுனையில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (urban local body (ULB)) மட்டத்தில் SDG-11-ஐக் கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை நகரங்கள் நிறுவ வேண்டும். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு கட்டமைப்புகளை ஏற்றுக்கொண்டாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதைப் பின்பற்ற வேண்டும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் (Smart Cities Mission) கீழ் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், நிகழ்நேர தரவுகளைச் சேகரிக்கவும், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, நகர்ப்புற குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஏழைகளாக இருப்பதால், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது. இந்தியா இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தரவை நம்பியுள்ளது. இது நகர்ப்புற வறுமையை கடுமையாக குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்க மாநில அளவில் அவ்வப்போது நகர்ப்புற ஏழை வாழ்க்கைத் தரக் கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு நகரமும் (சிறிய மற்றும் பெரிய) தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. உள்ளூர்மயமாக்கப்பட்ட நிர்வாகம், சிறந்த திட்டமிடல் மற்றும் நகர-குறிப்பிட்ட உத்திகள் தேவைப்படுகின்றன. தரவு சார்ந்த, நகரம் சார்ந்த கொள்கைகள் மூலம் இந்த வேறுபாடுகளை நிவர்த்தி செய்வது மிகவும் சமமான நகர்ப்புற எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.
அலோக் குமார் மிஸ்ரா, பேராசிரியர், பொருளாதாரப் பள்ளி, ஹைதராபாத் பல்கலைக்கழகம்; பவன் குமார் திம்மாவஜ்ஜாலா, ரிசர்ச் அசோசியேட், ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஹைதராபாத் பல்கலைக்கழகம்.