ஒரு படி முன்னேற்றம்: இந்தியாவும் 2025 மனிதவள மேம்பாட்டு அறிக்கையும்

 இந்தியா மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு (Human Development Index (HDI)) தரவரிசையில் முன்னேறிவரும் நிலையில், அதிகரிக்கும் சமத்துவமின்மை சவால்களை உருவாக்குகிறது.


உலகளாவிய வளர்ச்சியின் கவலைக்குரிய வேகக் குறைவும், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பும் நிலவும் சூழலில், இந்தியா மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் சிறிதளவு முன்னேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட “தேர்வு செய்ய வேண்டிய விவகாரம்: செயற்கை நுண்ணறிவு காலத்தில் மக்களும் வாய்ப்புகளும்” என்ற 2025 மனிதவள மேம்பாட்டு அறிக்கையில், இந்தியா 193 நாடுகளில் 2022ல் 133வது இடத்திலிருந்து 130வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் மதிப்பு 2022ல் 0.676-லிருந்து 2023-ல் 0.685 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதவள மேம்பாட்டு குறியீடு அளவிடும் மூன்று துறைகளிலும் இந்தியாவின் மீட்சி "நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம்" என வலுவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஆயுட்காலம், 2023-ல் 72 ஆண்டுகளாக உள்ளது, இது 1990-ல் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து (58.6 ஆண்டுகள்) அடைந்த மிக உயர்ந்த அளவாகும். குழந்தைகள் சராசரியாக 13 ஆண்டுகள் பள்ளியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1990-ல் 8.2 ஆண்டுகளாக இருந்தது மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் 1990-ல் $2,167.22-லிருந்து 2023-ல் $9046.76-ஆக உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)), கல்வி உரிமைச் சட்டம், தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission) மற்றும் பிற முயற்சிகள் மேம்பட்ட நிலைக்கு காரணம் என அறிக்கை பாராட்டியது. ஆனால், அதிகரிக்கும் சமத்துவமின்மை, குறிப்பாக வருமான மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறித்து எச்சரிக்கையும் விடுத்தது.


பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023-24-ல் 41.7% ஆக உயர்ந்திருக்கலாம், என 2024-25 பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால், பெண்கள் பணிக்குச் சேர்வதையும், தங்கள் வேலைகளைத் தக்கவைத்துக் கொள்வதையும் உறுதிசெய்ய வலுவான சூழலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சட்டமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த எந்த அறிகுறியும் இல்லாமல், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பெண்கள் பின்தங்கியுள்ளனர். நலிவடைந்த சிறுமிகளும் சிறுவர்களும் இன்னும் கல்வி பெற போராடுகின்றனர், இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை, இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index (HDI)) மதிப்பு உயராது. 2015-16 மற்றும் 2019-21 காலகட்டத்தில் 13.5 கோடி பேர் (இந்தியாவின் 144 கோடி மக்கள்தொகையில்) "பல்பரிமாண வறுமையிலிருந்து விடுபட்டனர்" (escaped multidimensional poverty) என்று அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், வருமான மற்றும் பாலின சமத்துவமின்மைகள் இந்தியாவின் HDI-ஐ 30.7% அளவுக்குக் குறைத்துள்ளன. இது பிராந்தியத்தில் மிக அதிகமான இழப்புகளில் ஒன்றாகும். இந்த ஆண்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அறிக்கையின் கவனம் செயற்கை நுண்ணறிவு மீதும், வளர்ச்சி அளவுருக்களில் மனிதர்கள் அதிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதன் மீதும் இருந்தது. இந்தியா 2019-ஆம் ஆண்டில் பூஜ்ஜியமாக இருந்த 20% செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில், விவசாயம் முதல் சுகாதாரம், கல்வி முதல் பொதுச் சேவை வழங்கல் வரை பல துறைகளில் செயலாற்றுவதற்கு இந்தியா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும். ஆனால், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடிய அபாயத்தைத் தடுக்க, சரியான கொள்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது அவசியம்.


Original article:
Share: