சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம். ஆனால், இது அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு வலுவான நடவடிக்கையாக, The Resistance Front அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த முடிவு செய்தது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக நிறுத்தும் வரை அது நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியது. இதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரக்கூடும். இருப்பினும், 1960ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், ஒரு நாடு மட்டும் அதை ரத்து செய்ய அனுமதிக்காது. IWTஇன் பிரிவு XII (4) ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு புதிய அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டால் மட்டுமே அது முடிவுக்கு வர முடியும்.
பல இந்திய ஆய்வாளர்கள் வியன்னா ஒப்பந்த சட்டத்தின் (Vienna Convention on the Law of Treaties (VCLT)) உட்பிரிவுகள் 60 மற்றும் 62-ன் கீழ் உள்ள விதிகளைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்று வாதிடுகின்றனர். இந்தியா VCLT அமைப்பில் உறுப்பினராக இல்லை. இதில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அதை உறுதிப்படுத்தவில்லை. VCLTஇன் உட்பிரிவு 62-இன் கீழ் உள்ள விதிகளை IWT-இல் பயன்படுத்துவது எளிதாக தோன்றினாலும், அதை நிரூபிப்பது கடினம். IWT-ஐ நிறுத்தி வைப்பது இரு விரோத நாடுகளுக்கிடையேயான நீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கக்கூடும். மூன்று வெவ்வேறு சட்ட வழிகள் உள்ளன. பாகிஸ்தானின் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அகீல் மாலிக், உலக வங்கியில் (World Bank) இந்த பிரச்சினையை எழுப்புவது, நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் (Permanent Court of Arbitration) அல்லது ஹேக்கில் (Hague) உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) இந்தியா 1969ஆம் ஆண்டு VCLTஐ மீறியதாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பது அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UN Security Council) இந்த பிரச்சினையை எழுப்புதல் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு சட்ட வழிகள் உள்ளதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
நீர் ஓட்டத்தை நிறுத்துதல்
பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளப்படும் நதி நீரைப் பயன்படுத்துவதில் இந்தியா இப்போது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத் தகவல்களை வழங்குவதை நிறுத்தவும், அதன் நீர்த்தேக்கங்களை காலி செய்யவும், நீர் மின் திட்டங்களைக் கட்டுவதிலும் அல்லது இயக்குவதிலும் இனி கட்டுப்பாடுகள் இல்லை. வறண்ட காலங்களில் இந்தியா தண்ணீரைச் சேமித்து, கனமழையின் போது அதை வெளியிட முடியும். இது பாகிஸ்தானில் வறட்சி அல்லது வெள்ளத்திற்கு வழிவகுக்கும். மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவை பாகிஸ்தானின் விவசாயம், தினசரி நீர் பயன்பாடு மற்றும் மின்சார உற்பத்திக்கு மிகவும் முக்கியமானவை.
பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரோட்டத்தில் ஏற்படும் தாக்கம் அந்நாட்டில் மாகாணங்களுக்கிடையேயான நீர் சர்ச்சைகளை மேலும் தீவிரப்படுத்தலாம். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு நீர் சண்டைகளில் நீண்ட வரலாறு உள்ளது. தற்போது, அவை ஆறு கால்வாய்கள், குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கோலிஸ்தான் (Cholistan) பாலைவனப் பகுதியை பாசனம் செய்ய கோலிஸ்தான் கால்வாய் அமைக்கும் திட்டம் குறித்து விவாதித்து வருகின்றன. சிந்து மாகாணத்தில் போராட்டங்கள் வெடித்த நிலையில், சர்ச்சைக்குரிய கால்வாய் திட்டங்களை நிறுத்த பாகிஸ்தான் மத்திய அரசு முடிவு செய்தது.
சிந்து நதி ஒப்பந்தத்தில் தனது அரசியல் முடிவை நடைமுறைப்படுத்த, இந்தியாவிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா 3.60 மில்லியன் ஏக்கர் அடி (million acre-feet (MAF) நீரைச் சேமிக்க, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் 1.34 மில்லியன் ஏக்கர் பாசன நிலத்தை உருவாக்க, மேற்கத்திய நதிகளில் ஓடைப்போக்கில் அணைகளைக் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவிற்கு 1 MAF சேமிப்பு திறன் மட்டுமே உள்ளது மற்றும் 0.642 மில்லியன் ஏக்கர் பாசனத்தை உருவாக்கியுள்ளது. கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றில், பக்ரா, பாங் மற்றும் ரஞ்சித் சாகர் அணை போன்ற பெரிய திட்டங்களால் ஆதரிக்கப்படும் 33 MAF ஒதுக்கப்பட்ட நீரில் 90%க்கும் அதிகமானவற்றை இந்தியா பயன்படுத்துகிறது.
மேற்கத்திய நதிகளில் இந்தியாவின் நீர்மின் திட்டங்களான கிஷங்கங்கா நீர்மின் திட்டம் (Kishanganga Hydroelectric Project), ராட்டில் அணை (Ratle Dam), சலால் அணை (Salal Dam), நிமூ பாஸ்கோ (Nimoo Bazgo) மற்றும் பாகலிஹார் அணை (Baglihar Dam) ஆகியவை IWTஇன் கீழ் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட நீர் பங்கைப் பயன்படுத்தி, இந்து, ஜீலம் மற்றும் சென்னாப் நதிகளின் நீர் வளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள் பல்வேறு சேமிப்பு திறன்களைக் கொண்டுள்ளன. கிஷங்கங்கா 18.35 மில்லியன் கன மீட்டர், ராட்டில் அணை 78.71 மில்லியன் கன மீட்டர், சலால் அணை 285 மில்லியன் கன மீட்டர் மற்றும் பாகலிஹார் அணை 475 மில்லியன் கன மீட்டர் ஆகும். வரவிருக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டங்களான ராட்டில் அணை, கிரு அணை (Kiru Dam) மற்றும் பகல் துல் அணை (Pakal Dul Dam) ஆகியவை சென்னாப் நதி மற்றும் அதன் துணை நதிகளைப் பயன்படுத்தும். இருப்பினும், பாகிஸ்தானுக்குள் பாயும் நீரைப் தடுத்துப் பயன்படுத்தும் இந்தியாவின் திறன் இந்த திட்டங்களின் திறனால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதிக நீரோட்ட காலங்களில் பெரும் அளவிலான நீரை தேக்கி வைக்க இந்தியாவிற்கு பெரிய சேமிப்பு உட்கட்டமைப்பு இல்லை.
இந்தியா தனது நீர் பங்கை அதிகரிக்கவும், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரோட்டத்தைக் குறைக்கவும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தொடங்கியுள்ள போதிலும், பெரும்பாலான மேற்கத்திய நதித் திட்டங்கள் குறைந்த சேமிப்புடன் உள்ளன. சவாலான இமயமலை நிலப்பரப்பு மற்றும் அதிகாரத்துவத் தாமதங்களைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பைக் ஏற்படுத்த பத்தாண்டு அல்லது அதற்கு மேலாக ஆகலாம்.
முடிவுரை
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான தனது நிலைப்பாட்டை இந்தியா நியாயப்படுத்தலாம். இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்ற அண்டை நாடுகளை அரசியல் ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் திருப்திப்படுத்தவில்லை எனில், இந்த இடைநீக்கம் இந்தியாவின் மற்ற நாடுகளுடனான உறவுகளை பாதிக்கலாம். உதாரணமாக, பல இந்திய நதிகளுக்கு மேலாற்றுப் பகுதியிலுள்ள சீனா, திபெத்திலிருந்து இந்தியாவில் பாயும் நதிகளில் உள்ள நீர் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding (MoU)) புதுப்பிக்காமல் இருக்க, அல்லது நீர்த் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இடைநீக்கத்தை தனக்கு சாதகமாக மேற்கோள் காட்டலாம்.
சட்லஜ் மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் சீனாவுடன் இந்தியாவின் தரவுப் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது மற்றும் இந்தியாவின் நீர்வள அமைச்சகத்தின் இணையதளம் கூறுவதைப் போல், இது புதுப்பித்தல் செயல்முறையில் உள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் டோக்லாம் நெருக்கடியின் போது, சீனா இந்தியாவுடன் நீர்த் தரவுகளை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், வங்கதேசத்துடன் பகிர்ந்து கொண்டது. இரண்டாவதாக, 2026ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ள கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்தியாவும் வங்கதேசமும் ஒப்புக்கொண்டுள்ளதால், சர்வதேச நீர் விநியோக ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தற்போது, இந்தியாவும் வங்கதேசமும் மிக நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவின் நீர் முடிவுகள் நேபாள மக்களின் ஒரு பிரிவினரை இந்தியாவுடனான நீர் தொடர்பான மற்றும் பிற ஒப்பந்தங்களில் அரசாங்கத்தை எச்சரிக்க தூண்டக்கூடும். இலங்கையிலிருந்து சில விமர்சகர்களும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது "கவனமாக" இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.
அமித் ரஞ்சன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்; நபீலா சித்திக், உதவிப் பேராசிரியை, விநாயகா Mission’s Law School, விநாயகா, Missions Research Foundation-Deemed University, சென்னை.