அவசரநிலையின் 50-வது ஆண்டு : காரணங்களிலிருந்து அரசியலமைப்பு தாக்கங்கள் வரை -ரோஷ்னி யாதவ்

 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இரவு, இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது. "உள்நாட்டு குழப்பம்" (“internal disturbance.”) இருப்பதாகக் கூறியது. சுதந்திர இந்தியாவில் அவசரநிலையை அமல்படுத்த இந்தக் காரணம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. அதன் 50வது ஆண்டு நிறைவை குறிக்கும் வேளையில், நாட்டின் அரசியலமைப்பு வரலாற்றில் இந்த முக்கியமான திருப்புமுனையை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

என்ன பிரச்சினை?


அவசரநிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்த 21 மாதங்களுக்கு, அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன, பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன, பலர் கைது செய்யப்பட்டனர், மற்றும் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், அரசாங்கம் சிறப்பு உத்தரவுகளால் ஆளப்பட்டது. 


கேள்வி 1: நவீன இந்திய அரசியல் வரலாற்றில் "அவசரநிலை" என்றால் என்ன, அவசரநிலைகள் பற்றி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?


நவீன இந்திய அரசியல் வரலாற்றில், "அவசரநிலை" என்ற சொல் ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான காலத்தைக் குறிக்கிறது, அப்போது பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கம் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை எடுக்க சிறப்பு அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது.


அவசரநிலைகள் பற்றிய விதிகள் இந்திய அரசியலமைப்பின் பகுதி XVIII-ல், பிரிவுகள் 352 முதல் 360 வரை காணப்படுகின்றன. இந்த விதிகள் ஜெர்மனியின் வீமர் அரசியலமைப்பால் ஈர்க்கப்பட்டன. அரசியலமைப்பில் மூன்று வகையான அவசரநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்தியாவில் அவசரநிலைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்:


பிரிவு 352: அரசாங்கம் ஒரு தேசிய அவசரநிலையை அறிவிக்க அனுமதிக்கிறது.


பிரிவு 353: ஒரு தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்குகிறது.


பிரிவு 354: அவசரநிலையின் போது ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் பணம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில் மாற்றங்களை அனுமதிக்கிறது.


பிரிவு 355: வெளிப்புற தாக்குதல் அல்லது உள்நாட்டு வன்முறையிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பது ஒன்றிய  அரசின் கடமை என்று கூறுகிறது.


பிரிவு 356: ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு ஒழுங்கு சீர்குலைந்தால், ஒன்றிய அரசு அதன் கட்டுப்பாட்டை எடுக்க அனுமதிக்கிறது.


பிரிவு 357: பிரிவு 356-ன் கீழ் மாநிலங்களுக்கு சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசை அனுமதிக்கிறது.


பிரிவு 358: தேசிய அவசரநிலையின் போது, ​​அரசாங்கம் பிரிவு 19 (சுதந்திர உரிமைகள்)-ஐ புறக்கணிக்கலாம்.


பிரிவு 359: அவசரநிலையின் போது பகுதி III (அடிப்படை உரிமைகள்)-ன் கீழ் உரிமைகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.


பிரிவு 360: நாட்டின் நிதி நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளானால் நிதி அவசரநிலையை பிறப்பிக்கலாம்.


இந்தியாவில் எத்தனை முறை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?


இந்தியா இதுவரை மூன்று முறை அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது:


1. முதல் அவசரநிலை - அக்டோபர் 26, 1962 அன்று, போர் சூழ்நிலை காரணமாகவும்,


2. இரண்டாவது அவசரநிலை - டிசம்பர் 3, 1971 அன்று, போர் காரணமாகவும்,


3. மூன்றாவது அவசரநிலை - ஜூன் 25, 1975 அன்று, உள்நாட்டுக் கலவரம் காரணமாக.

(குறிப்பு: "உள் குழப்பம்" என்ற சொல் பின்னர் 1978-ல் அரசியலமைப்பின் 44வது திருத்தத்தால் நீக்கப்பட்டது.)


கேள்வி 2: இந்திய அரசியலமைப்பு எத்தனை வகையான அவசரநிலைகளை அங்கீகரிக்கிறது?


அரசியலமைப்பின் பகுதி XVIII-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விதிகள் மூன்று வகையான அவசரநிலைகளை வழங்குகின்றன: தேசிய அவசரநிலை (பிரிவு 352-354, 358-359), குடியரசுத்தலைவர் ஆட்சி (பிரிவு 355–357), நிதி அவசரநிலை (பிரிவு360).


தேசிய அவசரநிலை


அரசியலமைப்பின் பிரிவு 352-ன் கீழ், இந்தியாவின் பாதுகாப்பு அல்லது அதன் எந்தப் பகுதியும் போர், வெளிப்புறத் தாக்குதல் அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் அச்சுறுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடியும். இது பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. (1975-ல், "ஆயுதமேந்திய கிளர்ச்சி" என்பதற்குப் பதிலாக "உள்நாட்டு குழப்பம்" என்று பயன்படுத்தப்பட்டது.) இந்த வகையான அவசரநிலை பொதுவாக "தேசிய அவசரநிலை" என்று அழைக்கப்படுகிறது.


குடியரசுத்தலைவர் ஆட்சி


பிரிவு 356(1)-ன் படி, ஆளுநரின் அறிக்கை அல்லது வேறுவிதமாக அரசியலமைப்பின்படி ஒரு மாநில அரசு செயல்பட முடியாது என்று குடியரசுத்தலைவர் கருதினால் ஒரு அறிவிப்பை வெளியிடலாம்:


(அ) மாநில அரசாங்கத்தின் சில அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஆளுநர் அல்லது மாநிலத்தில் உள்ள எந்தவொரு அதிகாரத்தின் அதிகாரங்களையும், மாநில சட்டமன்றத்தைத் தவிர, எடுத்துக்கொள்வது;


(ஆ) மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றம் செயல்படுத்த அனுமதிப்பது;


(இ) பிரகடனத்தை செயல்படுத்த உதவும் வகையில் தேவையான மாற்றங்கள் அல்லது தற்காலிக விதிகளை உருவாக்குவது, அந்த மாநிலத்தில் சில அரசியலமைப்பு விதிகளை நிறுத்துவது உட்பட.


நிதி அவசரநிலை


இந்தியாவின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அல்லது அதன் எந்தப் பகுதியின் நிதி நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குடியரசுத்தலைவர் நம்பினால், அரசியலமைப்பின் பிரிவு 360, நிதி அவசரநிலையை அறிவிக்க அனுமதிக்கிறது.


கேள்வி 3: 1975-ஆம் ஆண்டு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த முக்கிய நிகழ்வுகள் யாவை?


1974 மற்றும் 1975-ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பல அரசியல் மற்றும் சமூக முன்னேற்றங்கள் தேசிய அவசரநிலை பிரகடனத்திற்கு வழிவகுத்தன. அவற்றில் பின்வருவன அடங்கும்:


📍 ஜேபி இயக்கம்:


1974 ஆம் ஆண்டின் முற்பகுதியில், குஜராத்தில் மாணவர்கள் முதல்வர் சிமன்பாய் படேலுக்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் என்ற போராட்டத்தைத் தொடங்கினர். அவரது காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினர். போராட்டங்கள் வன்முறையாக மாறியது. படேல் ராஜினாமா செய்தார். குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது பீகாரில் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிராக இதேபோன்ற மாணவர் போராட்டத்தைத் தூண்டியது.


ஏபிவிபி மற்றும் சோசலிச குழுக்கள் சத்ர சங்கர்ஷ் சமிதியை உருவாக்கி, மரியாதைக்குரிய காந்தியத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணை (ஜேபி) தங்கள் தலைமைக்கு அழைத்தன. ஜேபி ஒப்புக்கொண்டார். ஆனால், இயக்கம் வன்முறையற்றதாக இருந்து, இந்தியா முழுவதும் பரவி, ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தனது.


இது ஜேபி இயக்கம் என்று அறியப்பட்டது. ஜூன் 5, 1974 அன்று, ஜே.பி. பாட்னாவில் "சம்பூர்ண கிராந்தி" (முழு புரட்சி)-க்கு அழைப்பு விடுத்து ஒரு பிரபலமான உரையை நிகழ்த்தினார். 1974-ஆம் ஆண்டின் இறுதியில், நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு ஆதரவு கிடைத்தது. மேலும், டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார்.


1975 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து, "சின்ஹாசன் காலி கரோ, கே ஜனதா ஆதி ஹை" ("அரியணையை காலி செய், மக்கள் வருகிறார்கள்") என்ற முழக்கத்துடன் பெரிய பேரணிகளை நடத்தினார்.


📍 1974 ரயில்வே வேலைநிறுத்தம்:


மே 1974ஆம் ஆண்டில், சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு பெரிய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார், இது இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை மூன்று வாரங்களுக்கு நிறுத்தியது.


📍 ராஜ் நரேன் தீர்ப்பு:


ஜூன் 12, 1975 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரதமர் இந்திரா காந்தியை தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜ் நரேன் தாக்கல் செய்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றம் ரே பரேலியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்தது.


பின்னர் உச்சநீதிமன்றம் அவர் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்தது, ஆனால் வாக்களிக்கவில்லை.


ஜூன் 25, 1975 அன்று இரவு, இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, அரசியலமைப்பின் பிரிவு 352(1)-ன் கீழ் தேசிய அவசரநிலையை அறிவித்தார். அந்த நேரத்தில், போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது உள் குழப்பத்தால் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருந்தால் சட்டம் அவசரநிலையை அனுமதித்தது. (குறிப்பு: 1978-ஆம் ஆண்டில், "உள் குழப்பம்" என்ற சொல் அரசியலமைப்பு திருத்தம் மூலம் "ஆயுதமேந்திய கிளர்ச்சி" என்று மாற்றப்பட்டது.)





கேள்வி 4: 1975 தேசிய அவசரநிலையின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட முக்கிய அரசியலமைப்பு தாக்கங்கள் என்ன?


1975-ஆம் ஆண்டில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு ஒரு ஒற்றையாட்சி அமைப்பாக திறம்பட மாற்றப்பட்டது. மாநில அரசுகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடைத்தது. மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படாவிட்டாலும், அவை முழுமையாக மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. செய்தித்தாள்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. மேலும் UNI மற்றும் PTI செய்தி நிறுவனங்கள் சமாச்சார் என்ற அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் இணைக்கப்பட்டன.


ஜெயபிரகாஷ் நாராயண் (ஜேபி) உட்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்-ன் விகாஸ் பதக் அறிக்கையின்படி, உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சுமார் 36,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்திய ஜனநாயகத்தில், குறிப்பாக அரசியலமைப்பில், அவசரநிலை பல மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட சில முக்கிய அரசியலமைப்பு மாற்றங்கள்:


38வது மற்றும் 39வது அரசியலமைப்புத் திருத்தங்கள்: 


எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருந்தபோது இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 38வது திருத்தம், அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்வதைத் தடுத்தது. 39-வது திருத்தம், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தவைர், பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் தேர்தல்களை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது என்று கூறியது.


42வது அரசியலமைப்பு திருத்தம்: இந்தத் திருத்தம் பல முக்கிய மாற்றங்களைச் செய்தது:


  • தேர்தல் தகராறுகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் இனி விசாரிக்க முடியாது.


  • மாநில விவகாரங்களில் தலையிட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் கிடைத்தது.


  • நீதிமன்ற மறுஆய்வு இல்லாமல் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டது.


  • மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது.


உங்களுக்குத் தெரியுமா?


அவசரநிலையின்போது, ​​நாடாளுமன்றம் மக்களவையின் ஐந்து ஆண்டு காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடியும். வழக்கமாக மாநிலங்களுக்குச் சொந்தமான பட்டியலில் சட்டங்களை இயற்றவும், மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு நீட்டிக்கவும் முடியும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நிதி வளங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும்.


அவசர நிலைக்குப் பிந்தைய நிலை


1977ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவசரநிலை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, ஜனசங்கம், காங்கிரஸ் (O), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தளம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் புதிய அரசியல் குழுக்கள் செல்வாக்கு பெறுவது மற்றும் அதிகாரம் மேலும் பரவலாக்கப்பட்டிருப்பது போன்ற பெரிய மாற்றங்கள் காணப்பட்டன. அவசரநிலைக்குப் பிறகு சில முக்கிய அரசியலமைப்பு மாற்றங்கள்:


📍44வது அரசியலமைப்புத் திருத்தம்:


1976ஆம் ஆண்டின் 42வது திருத்தத்தால் செய்யப்பட்ட பல மாற்றங்களை ஜனதா அரசாங்கம் ரத்து செய்தது. இது அவசரநிலை விதியை முற்றிலுமாக நீக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அதைச் சுமத்துவதை மிகவும் கடினமாக்கியது.


அவசரநிலை பிரகடனங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றங்களை அனுமதித்தது. மேலும், அத்தகைய பிரகடனங்களை ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்க வேண்டும் என்று கோரியது. இரு அவைகளும் சிறப்பு பெரும்பான்மையுடன் அதாவது மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும், தற்போது வாக்களிப்பவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கும் அதை அங்கீகரிக்கவில்லை என்றால் அவசரநிலை முடிவுக்கு வரும்.


அவசரநிலையை அமல்படுத்துவதற்கான சரியான காரணமாக "உள்நாட்டு குழப்பம்" என்பதையும் இந்தத் திருத்தம் நீக்கியது. இப்போது, ​​போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சி மட்டுமே காரணங்களாகப் பயன்படுத்த முடியும். இருப்பினும், 42-வது திருத்தத்தால் சேர்க்கப்பட்ட 'மதச்சார்பற்ற' மற்றும் 'சமதர்ம' என்ற வார்த்தைகளை முகவுரையில் அது தக்க வைத்துக் கொண்டது.


📍ஷா கமிஷன் மற்றும் அதன் அறிக்கை:


ஜனதா அரசாங்கம் அவசரநிலை மற்றும் அதன் விளைவுகளை விசாரிக்க ஷா கமிஷனை அமைத்தது. அவசரநிலையை ஆணையத்தின் அறிக்கை கடுமையாக விமர்சித்தது. இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது மற்றும்  அடிப்படை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியது.


கேள்வி 5: 1975-ஆம் ஆண்டு தேசிய அவசரநிலையிலிருந்து அரசியலமைப்பு பாடங்கள் என்ன?


வரலாறு நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது. எனவே, நாம் அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அத்தகைய ஒரு பாடம் 1975-ஆம் ஆண்டு அவசரநிலையிலிருந்து வருகிறது. இது இந்தியாவின் ஜனநாயகத்தில் ஒரு தாழ்ந்த புள்ளியாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு இன்றும் மக்களுக்கு ஜனநாயக விழுமியங்களையும் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.


1975-ஆம் ஆண்டு அவசரநிலையிலிருந்து முக்கியப் பாடம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி இருந்தால் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதற்கு ஒரு தன்னாட்சியான நீதித்துறை, ஒரு சுதந்திரமான பத்திரிகை, ஒரு வலுவான அரசியல் எதிர்ப்பு மற்றும் சிவில் சமூகத்தின் தீவிர ஈடுபாடு தேவை.


தி இந்தியன் எக்ஸ்பிரஸின் அபூர்வா விஸ்வநாத் "ஜனநாயகத்தை சீர்குலைக்க இந்திரா காந்தி அரசியலமைப்பை எவ்வாறு பயன்படுத்தினார்" (“How Indira Gandhi used the Constitution to subvert democracy”) என்ற கட்டுரையில் ஜனநாயகம் அரசியலமைப்பைப் பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது என்று எழுதினார். இதில் அரசியல் எதிர்க்கட்சி, நீதித்துறை, பத்திரிகை மற்றும் குடிமைச் சமூகத்தின் பணிகளிலிருந்து வரும் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை அடங்கும்.



Original article:

Share: