உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கை-2025 -ரோஷ்னி யாதவ்

 உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை-2025 (Global Report on Food Crises(GRFC)) வெளியாகியுள்ளது. இது, 2024-ம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டனர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் பொருள் என்ன? இதற்கான முக்கிய முடிவுகள் என்ன? கீழே ஒரு விரைவான விளக்கம் காட்டப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய பசி குறியீடு-2024 (Global Hunger Index) பற்றி அறிய 'தகவல் சுருக்கத்திற்கு அப்பால்' செல்லவும்.


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) வெளியிட்ட உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை 2025-ன்படி, 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 2024 -ம் ஆண்டில் கடுமையான பசியை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில், இந்த அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.


முக்கிய அம்சங்கள் : 


1. GRFC 2025-ன் தயாரிப்பு, உணவு பாதுகாப்பு தகவல் வலையமைப்பால் (Food Security Information Network (FSIN)) ஒருங்கிணைக்கப்பட்டு, உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பிற்கு (Global Network Against Food Crises (GNAFC)) ஆதரவாக செயல்படுகிறது. 2024-ம் ஆண்டில் உணவு நெருக்கடி உள்ளதாக அடையாளம் காணப்பட்ட நாடுகள்/பிராந்தியங்களில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மக்கள்தொகை இடப்பெயர்ச்சி குறித்த ஒருமித்தக் கருத்து அடிப்படையில் பகுப்பாய்வை வழங்குகிறது.


2. GRFC-2025-க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 65 நாடுகள்/பிராந்தியங்களில், 53 நாடுகள் GRFC தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரவுகளைக் கொண்டிருந்தன. 2024-ம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது 2023 உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் அதிகரிப்பாகும். அதே நேரத்தில், பேரழிவு தரும் அளவிலான பசியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையானது சாதனை அளவை எட்டியது.


3. கூடுதலாக, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு 2024-ம் ஆண்டில் தொடர்ந்து 6-வது ஆண்டாக அதிகரித்தது. இது உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில பகுதிகளில் மில்லியன் கணக்கான மக்களை நெருக்கடிக்குத் தள்ளியது.


4. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு முதல், கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையில் முதல் பத்து நாடுகளின் பட்டியல் மாறாமல் உள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாட்டிலும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் இந்த நாடுகள் ஒட்டுமொத்தமாக 196 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் குறித்தன, இது உலகளாவிய மொத்தத்தின் 66 சதவீதமாகும்.


கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் அதிக மக்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்


தரவரிசையில் உள்ள நாடு அதிக அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை — 2024 உச்சம்


  1. நைஜீரியா                                    -              31.8 மில்லியன்

  2. சூடான்                                          -              25.6 மில்லியன்   

  3. காங்கோ ஜனநாயகக் குடியரசு      -              25.6 மில்லியன்

  4.  வங்காளதேசம்                             -              23.6 மில்லியன்

  5. எத்தியோப்பியா                            -               22.0 மில்லியன்

  6. ஏமன்                                            -              16.7 மில்லியன்

  7. ஆப்கானிஸ்தான்                         -               15.8 மில்லியன்

  8. மியான்மர்                                     -               14.4 மில்லியன்

  9. பாகிஸ்தான்                                  -             11.8 மில்லியன்

  10. சிரிய அரபுக் குடியரசு                    -             9.2 மில்லியன்


5. நைஜீரியா, சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவை சேர்ந்து நெருக்கடியை எதிர்கொள்ளும் 295.3 மில்லியன் மக்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் (28%) ஆவர். ஆப்கானிஸ்தான், சூடான், சிரிய அரபுக் குடியரசு மற்றும் ஏமன் ஆகியவை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் அதிக எண்ணிக்கையையும் பங்கையும் கொண்ட நாடுகளில் அடங்கும்.


6. ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, சிரிய அரபு குடியரசு மற்றும் ஏமன் போன்ற நாடுகள் 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.




கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள்


GRFC 2025-ன் படி, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பொதுவாக ஒரு தாக்கம் அல்லது ஆபத்தால் ஏற்படுவதில்லை. மாறாக, இது அதிக தாக்கங்கள், வறுமை, கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் மக்களை பாதிக்கப்படக்கூடிய பிற காரணிகளின் தொடர்புகளால் விளைகிறது. இருப்பினும், ஒவ்வொரு நாடு அல்லது பிரதேசத்திற்கும், ஒரு முக்கிய காரணத்தை இன்னும் அடையாளம் காண முடியும்.


1. உணவு நெருக்கடிகளுக்கு மோதல் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. காசா பகுதி, தெற்கு சூடான் மற்றும் பிற பகுதிகள் குறிப்பாக பாதிக்கப்பட்டன.


2. பொருளாதாரத்தின் மீதான தாக்கங்கள் பல இடங்களில் பசியையும் ஏற்படுத்தின. இந்த தாக்கங்களில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு ஆகியவை அடங்கும். அவை 15 நாடுகளில் பசியைத் தூண்டின. மொத்தம் 59.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகும்.


3. தீவிர வானிலை நிகழ்வுகள் உலகம் முழுவதும் 96 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்தன. தென்னாப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் தலைமைப்பகுதியில் (Horn of Africa) மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். இந்தப் பிரச்சினைகள் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை மேலும் மோசமாக்குகின்றன. ஏற்கனவே, பலவீனமாக உள்ள பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.


உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index (GHI)) 2024


1. உலகளாவிய பசி குறியீடு (GHI) ஒவ்வொரு ஆண்டும் Concern Worldwide மற்றும் Welthungerhilfe-ஆல் வெளியிடப்படுகிறது. இது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசியளவில் பசியை அளவிடுகிறது மற்றும் கண்காணிக்கிறது. மேலும், பசிக்கு எதிரான போராட்டம் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவதை இந்த அறிக்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், உலகளவில் பசி அதிகமாக இருக்கும் பகுதிகளையும் இது எடுத்துக்காட்டுகிறது. குறிப்பிடத்தக்க அளவில் பசியைக் குறைக்க இந்தப் பகுதிகளுக்கு அதிக முயற்சிகள் தேவை.


2. உலகளாவிய பசி குறியீடானது (GHI) நான்கு குறிகாட்டிகளின் அடிப்படையில், விதிமுறையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த குறிகாட்டிகள் பசியின் பல்வேறு அம்சங்களைக் காட்டுகின்றன. (கீழே உள்ள வரையறைகள் globalhungerindex.org-லிருந்து குறிப்பிட்டவை)


ஊட்டச்சத்து குறைபாடு (Under nourishment) : போதுமான கலோரி உட்கொள்ளாத மக்கள்தொகையின் ஒரு பகுதியினரைக் குறிக்கிறது.


குழந்தை வளர்ச்சி குறைபாடு (Child stunting) : ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வயதுக்குக் குறைவான உயரம், நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதிபலிக்கிறது.


குழந்தை மெலிதல் (Child wasting) : ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதிபலிக்கிறது.


குழந்தை இறப்பு (Child mortality) : இது ஐந்து வயதை அடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் விகிதத்தைக் குறிக்கிறது. இது போதிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களின் அபாயகரமான கலவையை ஓரளவு பிரதிபலிக்கிறது.


3. அக்டோபர் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டின்படி, 42 நாடுகளில் பசியின் அளவுகள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் காரணமாக, 2030-ம் ஆண்டுக்குள் பசியை பூஜ்ஜியமாக்குதல் என்ற இலக்கை அடைவது சாத்தியமில்லை. தற்போதைய முன்னேற்றம் தொடர்ந்தால், 2160 வரை உலகமானது குறைந்தளவிலான பசியின் அளவைக் கூட பூர்த்தி செய்யாது. உலகின் GHI மதிப்பெண் 18.3 ஆகும். இந்த மதிப்பெண் பசி தீவிர அளவுகோலில் "மிதமான" பிரிவில் இருக்கிறது.



பசி என்றால் என்ன?


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization) பசியை உணவுப் பற்றாக்குறை அல்லது ஊட்டச்சத்து குறைபாடு என்று வரையறுக்கிறது. இது ஒரு நபரின் பாலினம், வயது, உயரம் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஒரு நபர் ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட வாழ்க்கையை வாழத் தேவையான குறைந்தபட்ச உணவு, ஆற்றலை வழங்குவதற்கு மிகக் குறைந்த கலோரிகளை வழக்கமாக உட்கொள்வதாகும்.


4. 2024 உலகளாவிய பசி குறியீடு (GHI) பூஜ்ஜிய பசியை அடைவதற்கான பல சவால்களைக் காட்டுகிறது. இந்த சவால்களில், பெரிய அளவிலான ஆயுத மோதல்களும் அடங்கும். காலநிலை மாற்றமும் ஒரு பெரிய பிரச்சனையாகும், மேலும் எதிர்பார்த்ததைவிட வேகமாக மோசமடைந்து வருகிறது. அதிக உணவு விலைகள் மற்றும் சந்தையின் சீர்குலைவுகள் சிரமங்களை அதிகரிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கடன் நெருக்கடிகள் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளையும் பாதிக்கின்றன.

5. சோமாலியா, ஏமன், சாட், மடகாஸ்கர், புருண்டி மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆறு நாடுகள் பசியின் அளவை ஆபத்தானதாகக் கருதுகின்றன. இது பரவலான மனிதனின் துயரம், ஊட்டச்சத்து குறைபாடு (undernourishment) மற்றும் சத்து குறைபாட்டின் (malnutrition) விளைவாகும்.


6. 2024-ம் ஆண்டு GHI-யில் 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. இது இந்தியாவின் பசியின்மையின் 'தீவிர' அளவைக் குறிக்கிறது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இதேபோன்ற பசி சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் குழந்தை மெலிதல் (Child wasting) அதிகமாக உள்ளது. குழந்தை மெலிதல் தாய்மார்களின் மோசமான ஊட்டச்சத்து ஆரோக்கியத்துடன் தொடர்புள்ளது. இது தலைமுறை தலைமுறையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஒரு முறையைக் குறிக்கிறது. தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை உணவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


7. இந்தியாவின் GHI மதிப்பெண் 27.3 என்பது கவலைக்குரியது. குறிப்பாக, அதன் தெற்காசிய அண்டை நாடுகளான வங்காளதேசம், நேபாளம் மற்றும் இலங்கையுடன் ஒப்பிடும்போது, இவை "மிதமான" வகையைச் சேர்ந்தவையாக உள்ளன.


8. பல்வேறு GHI அளவுருக்களில் இந்தியாவின் செயல்திறன் பின்வருமாறு:


  • இந்திய மக்கள்தொகையில் 13.7 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.


  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள் ஆவர்.


  • 18.7% குழந்தைகள் மெலிந்து போகின்றனர் (உயரத்திற்கு ஏற்ற எடை குறைவு) மற்றும், 


  • 2.9% குழந்தைகள் தங்கள் ஐந்து வயதை அடைவதற்கு முன்பே மரணிக்கின்றனர்.



Original article:

Share: