கிழக்கே செயல்படும் கொள்கையை (Act East policy) எவ்வாறு மேம்படுத்தும்? வடகிழக்கை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் திட்டங்களின் நிலை என்ன?
தற்போதைய நிலை : இந்திய இரயில்வே சமீபத்தில் மிசோரமின் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 18 கி.மீ தொலைவில் சாய்ராங் வரை புதிய 51.38 கி.மீ பாதையை அமைத்தது. இது தென்கிழக்கு ஆசியாவுடன் இரயில் மற்றும் சாலை இணைப்புகளை வழங்கும் வகையில் இந்தியாவின் லட்சியமான கிழக்கே செயல்படும் கொள்கைக்கு நம்பிக்கையை எழுப்புகிறது.
மிசோரம் திட்டம் (Mizoram project) எப்போது தொடங்கியது?
2000-ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பாதை மாற்றும் திட்டம் (gauge conversion project) மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள பைராபியை, அசாமின் சில்சாருடன் இணைக்கும் 1.5 கி.மீ மீட்டர் கேஜ் இரயில் பாதை இருந்தது. இந்தத் திட்டம் 51.38 கி.மீ பாதை அமைப்பதன் மூலம் சாய்ராங்கிற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு 2008-09-ல் தொடங்கியது. ஆனால், மோசமான வானிலை, கடினமான மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய நிலப்பரப்பு, மனிதவள பற்றாக்குறை மற்றும் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக முன்னேற்றம் மெதுவாக இருந்தது. 2010-களின் முற்பகுதியில், இந்திய இரயில்வே அனைத்து வடகிழக்கு மாநில தலைநகரங்களையும் நாட்டினுடைய இரயில் நெட்வொர்க்குடன் இணைக்கத் திட்டமிட்டது. சாய்ராங் இரயில் நிலையம் மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலில் இருந்து இன்னும் 18 கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன் 2025-ல் பாதுகாப்பு அனுமதி பெற்று முறையான திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் பைராபி-சைராங் பிரிவில் (Bairabi-Sairang section), மொத்தம் 12.85 கி.மீ நீளம் கொண்ட 48 சுரங்கப்பாதைகள் மற்றும் 142 பாலங்கள் உள்ளன. இந்தத் திட்டத்திற்கு ₹5,020 கோடிக்கும் அதிகமாக செலவானது. துரதிர்ஷ்டவசமாக, ஆகஸ்ட் 2023-ல் கட்டுமானத்தின்போது மிக உயரமான தூண் கொண்ட பாலம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் இறந்தனர்.
இதன் முக்கியத்துவம் என்ன?
நிலத்தால் சூழப்பட்ட மிசோரமானது, நாட்டின் பிற பகுதிகளுக்கு விமானப் பயணம் மூலம் மட்டுமே செல்ல முடியும். சாய்ராங் வழியாக ஐஸ்வால்-சில்சார் நெடுஞ்சாலை (Aizawl-Silchar highway), குறைந்தது ஐந்து மணிநேரம் எடுக்கும் இரண்டாவது முறையான விருப்பமாகும். சாய்ராங் இரயில் நிலையத்திலிருந்து முன்மொழியப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உட்பட இரயில்கள் இந்தப் பயண நேரத்தை 1.5 மணிநேரமாகக் குறைக்கும். மேலும், போக்குவரத்துச் செலவையும் கணிசமாகக் குறைக்கும். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் மாநிலத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும், லாரிகளைச் சார்ந்திருப்பதை பெருமளவில் குறைக்கும் என்றும் இரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். சாய்ராங் இரயில் நிலையம் கிழக்கின் செயல்பாடு கொள்கையுடன் (Act East Policy) ஒப்பிடும்போது இராஜதந்திர நிலையானது என்றும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும், இராஜதந்திர ரீதியில் ஈடுபாடுகளை தீவிரப்படுத்தவும், வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்கவும் இரயில் மற்றும் சாலை இணைப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும் அவர்கள் கூறினர். இந்தியா நிதியளிக்கும் மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்திலிருந்து பொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் சாய்ராங் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கே செயல்படும் கொள்கை (Act East Policy) என்றால் என்ன?
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட கிழக்கே செயல்படும் கொள்கை (Act East Policy) 1991-ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தின் போது தொடங்கப்பட்ட கிழக்கைப் பார் கொள்கை (Look East Policy) மிகவும் லட்சியமான பதிப்பாகும். இது வடகிழக்கு பிராந்தியத்தை ஆசியான் கூட்டமைப்பிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக மாற்றும் முக்கிய நோக்கத்துடன் இருந்தது. 2014-15 நிதியாண்டில் ₹36,108 கோடியிலிருந்து 2024-25-ஆம் ஆண்டில் ₹1,00,000 கோடிக்கும் அதிகமாக இந்தப் பிராந்தியத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு 300% அதிகரித்து, ₹1,00,000 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன. இந்தக் காலகட்டத்தில் 10,000 கி.மீ.க்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் மற்றும் 800 கி.மீ. இரயில் பாதைகள் கட்டப்பட்டன. 8 புதிய விமான நிலையங்கள் நிறுவப்பட்டன. மேலும், பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தென்கிழக்கு ஆசியாவை ரயில் மூலம் இணைப்பதற்கு, நாகாலாந்தில் உள்ள 82.5 கி.மீ திமாபூர்-சுப்சா இரயில் பாதை (Dimapur-Zubza railway), மணிப்பூரில் உள்ள இம்பால்-மோரே இரயில் பாதைத் திட்டம் (Imphal-Moreh railway plan) மற்றும் அசாமில் இருந்து கோஹிமா மற்றும் இம்பால் வழியாக மோரே வரையிலான ஆசிய நெடுஞ்சாலை 1 ஆகியவை முக்கியத் திட்டங்களில் அடங்கும். நாகாலாந்து திட்டம் (Nagaland project) சிறப்பாக முன்னேறி வருகிறது. இருப்பினும், மணிப்பூரில் இன மோதல்கள் இம்பால் மற்றும் மோரே இடையேயான முன்மொழியப்பட்ட இரயில் பாதையை பாதித்துள்ளன.
வடகிழக்கை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் இணைப்புத் திட்டங்கள் இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் நகரவில்லை. இது இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகும். பிப்ரவரி 2021-ல் மியான்மரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கிழக்கில் செயல்படும் கொள்கையானது (Act East Policy) சிக்கல்களை எதிர்கொண்டது. பின்னர், ஆகஸ்ட் 2024-ல் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சி மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியது. அகர்தலா-அகௌரா இரயில் திட்டம் (Agartala-Akhaura railway project) முடங்கியுள்ளது. இந்தத் திட்டம் திரிபுரா, வங்காளதேசம் வழியாக கொல்கத்தாவை விரைவாக அணுகவும், சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கவும் உதவியிருக்கும். மியான்மரில் ₹2,904 கோடி செலவில் செயல்படுத்தப்படும் கலடன் மல்டி-மாடல் டிரான்ஸிட் டிரான்ஸ்போர்ட் திட்டத்தின் (Kaladan Multi-Modal Transit Transport Project) தாமதம் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்தத் திட்டம் மிசோரம் மற்றும் கொல்கத்தா இடையேயான தூரத்தை 1,000 கி.மீ குறைத்திருக்கும்.