எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறினார்.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற அணுகுமுறையால், மெதுவான வளர்ச்சியை உலகம் கடக்க இந்தியா உதவும் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
தனது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று மோடி விளக்கினார். சட்டத்தை எளிமையாக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவைவரி (GST) சீர்திருத்தங்களின் அடுத்த கட்டம் தீபாவளிக்குமுன் நிறைவடையும் என்றும், விலைகளைக் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தூய எரிசக்தி, குவாண்டம் தொழில்நுட்பம், மின்கல சேமிப்பு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இது, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கை ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
கடந்தகால சாதனைகளில் தான் திருப்தி அடையவில்லை என்றும், இந்த மனநிலை அரசாங்கத்தின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இயக்குகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் அழுத்தம் அல்லது நெருக்கடியால் ஏற்படுவதில்லை. மாறாக, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையால் ஏற்படுகின்றன என்று பிரதமர் கூறினார். அரசாங்கம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும்.
இந்த அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை தேவையை அதிகரிக்கவும், தொழில்களுக்கு ஊக்கமளிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்க்கை முறையை எளிதாக்குதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் இரண்டையும் மேம்படுத்தவும் உதவும்.
எதிர்க்கட்சிகள் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும், சமீபத்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது அரசாங்கம் தொடர்ந்து சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது என்று அவர் மேலும் கூறினார்.
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற யோசனையால் வழிநடத்தப்படும் இந்தியா, மெதுவான வளர்ச்சியிலிருந்து உலகம் மீள உதவும் நிலையில் உள்ளது.
உலகளாவிய சூழலில், இந்தியாவின் பொருளாதாரத்தின் வலிமை தெளிவாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு விரைவில் சுமார் 20 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் அடையப்பட்ட பொருளாதார நிலைத்தன்மை காரணமாக இந்த வளர்ச்சியும் வலிமையும் சாத்தியமாகும். நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதி திரட்டுகின்றன. வங்கிகள் முன்பைவிட வலுவாக உள்ளன. பணவீக்கம் குறைவாக உள்ளது. வட்டி விகிதங்களும் குறைவாக உள்ளன என்று மோடி விளக்கினார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு வலுவாக உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் SIPகள் மூலம் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்கிறார்கள்.
ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கும்போது, நேர்மறையான விளைவுகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா வலுவாக நகர்ந்து வருவதாகவும், இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படை ஒரு சுயசார்பு இந்தியா என்றும் பிரதமர் மேலும் கூறினார். இதற்காக, நாடு வேகம், அளவு மற்றும் நோக்கம் போன்ற மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பிரபலமாகப் பயன்படுத்தப்படும் "பேருந்தை தவறவிடுதல் (Missing the Bus)" என்ற பதத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, வாய்ப்புகள் பயன்படுத்தப்படாவிட்டால் அவை கடந்து சென்றுவிடும் என்பதை விளக்கிய மோடி, இந்தியாவின் முந்தைய அரசாங்கங்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் இதுபோன்ற பல வாய்ப்புகளைத் தவறவிட்டதாகக் கூறினார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக மோடி கூறினார். வாய்ப்புகளை இழப்பதற்குப் பதிலாக, நாடு வழிநடத்தவும் முன்னேறவும் முடிவு செய்தது.
இந்தியா தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகள் இப்போது விரைவாக நடந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ₹50,000 கோடியாக இருந்தது. இன்று, அவை ஆண்டுதோறும் ₹1.2 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளன.
இந்தியா மெட்ரோ பெட்டிகள், ரயில் பெட்டிகள் மற்றும் விசைப்பொறி எந்திரங்களையும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
100 நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா விரைவில் மற்றொரு மைல்கல்லை எட்டும் மற்றும் இது தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வு ஆகஸ்ட் 26 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.