அமெரிக்க நுழைவு மூடப்படுகிறது. சிறந்த திறமையாளர்களை ஈர்க்க இந்தியாவிற்கு சிறந்த நகரங்கள் தேவை. -அமிதாப் காந்த்

 புதுமை மையங்களாக மாற, இந்திய நகரங்கள் தாங்கள் வழங்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $1,00,000 கட்டணம் விதிக்கும் உத்தரவு உலகளாவிய திறமைகளைத் தண்டிப்பதோடு திறமையானவர்கள் அமெரிக்க ஆய்வகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை விட்டு வெளியேற காரணமாக இருக்கலாம். இந்த நடவடிக்கை நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் சிறப்புத் திறன்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இது புதுமைகளை மெதுவாக்கும் சூழ்நிலையை உருவாக்கும். உலகளாவிய தெற்கு வரும் காலகட்டங்களில் உலகின் வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோரில் அதன் தலைமையை வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு இழக்கும் அபாயம் உள்ளது.


இது இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. விசா தடைகள் அதிகரிக்கும்போது, ​​திறமையான தொழிலாளர்கள், மூத்த மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தியாவுக்குத் திரும்புவது அல்லது முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம். இதை நீண்டகால நன்மையாக மாற்ற, தொழில் வல்லுநர்கள் வாழவும் வசதியாக வேலை செய்யவும் கூடிய நகரங்களை இந்தியா உருவாக்க வேண்டும். இந்த நகரங்களில் நல்ல சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான காற்று மற்றும் நீர், நம்பகமான பொதுப் போக்குவரத்து, மலிவு விலையில் வீடுகள், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நிலையான விதிமுறைகள் இருக்க வேண்டும். இந்தியா அத்தகைய நகர்ப்புற சூழல்களை உருவாக்கினால், அது புதுமை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சிறப்பிற்கான உலகளாவிய மையமாக மாறும்.


தற்போது, ​​15 இந்திய நகரங்கள் மட்டுமே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% பங்களிக்கின்றன. வளர்ச்சி விகிதத்தில் மேலும் 1.5% சேர்க்கும் அவற்றின் திறன், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா $30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை அடைய முடியுமா என்பதை தீர்மானிக்கும். இருப்பினும், இந்த நகரங்கள் காற்று மாசுபாடு, நீர் பற்றாக்குறை, நகர்ப்புற வெள்ளம், பெரிய குப்பைக் குவியல்கள் மற்றும் பலவீனமான நிர்வாகம் போன்ற கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. அவை இன்னும் உலகத் தரம் வாய்ந்தவை அல்ல. ஆனால், சரியான நடவடிக்கை எடுத்தால், அவை உலகத் தரம் வாய்ந்ததாக மாறலாம்.


உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் சுமார் 42 இந்தியாவில் உள்ளன. எனவே, வாகன உமிழ்வைக் குறைப்பது அவசரமானது. பொதுப் போக்குவரத்தை விரைவாக மின்சார வாகனங்களுக்கு மாற்றுவதன் மூலமும், கட்டுமான தூசி கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் இதைச் செய்ய முடியும். முன்மொழியப்பட்ட ₹1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதி, நகரங்களை அவற்றின் செயல்திறனின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவதன் மூலமும், சிறந்தவற்றுக்கு நிதி வெகுமதிகளை வழங்குவதன் மூலமும் உதவும்.


நகராட்சி நிர்வாகம் பல இடங்களில் தோல்வியடைந்துள்ளது. தினமும் உற்பத்தி செய்யப்படும் 1,50,000 டன் கழிவுகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே முறையாக செயலாக்கப்படுகிறது. மாநில அரசுகள் சிறந்த கழிவு சேகரிப்பு அமைப்புகள், வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களில் முதலீடு செய்ய வேண்டும். வெகுமதிகள் அல்லது அபராதங்களை செயல்திறனுடன் இணைக்கும் தெளிவான விதிகள் மற்றும் குடிமக்கள் கழிவுகளை மூலத்திலேயே பிரிப்பதை உறுதி செய்வதும் அவசியம்.


இந்தியா 30 நகரங்களை பாதிக்கக்கூடிய கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதைத் தீர்க்க, நகரங்கள் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை பெரிய அளவில் சேகரித்து, சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்த வேண்டும். குழாய் வழியாக அனுப்பப்படும் நீரில் 40-50% இழக்கும் பிரச்சனையையும் அவர்கள் சரிசெய்ய வேண்டும். “பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் (pay as you use)” மாதிரியின் அடிப்படையில் ஒரு நியாயமான நீர் விலை நிர்ணயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கையில் ஏழை வீடுகளுக்கான மானியங்கள் வழங்குதல் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டைத் தடுக்க அதிக விகிதங்கள் ஆகியவை அடங்கும்.


நகர்ப்புற திட்டமிடுபவர்கள் தரை பரப்பளவு குறியீட்டை (Floor Space Index (FSI)) மிகக் குறைவாக வைத்திருக்கும் பழைய நடைமுறையை நிறுத்த வேண்டும். இந்தக் கொள்கை நகரங்கள் பரவ காரணமாகிறது மற்றும் பயண தூரங்களை அதிகரிக்கிறது. அதற்குப் பதிலாக, திட்டமிடுபவர்கள் அதிக FSI முறையை அனுமதிக்க வேண்டும் மற்றும் திறமையான நிலப் பயன்பாட்டைத் தடுக்கும் பழைய விதிமுறைகளைப் புதுப்பிக்க வேண்டும். அடர்த்தியான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட செங்குத்து வளர்ச்சி இன்னும் நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் பல்லுயிரியலைப் பராமரிக்கவும் முடியும் என்பதை சிங்கப்பூர் காட்டியுள்ளது.


மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறை, 2030-ஆம் ஆண்டிற்குள் மும்மடங்காகி 31 மில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனை சரிசெய்ய வேண்டும். FSI/FAR வளர்ச்சியை அதிகரிப்பது செங்குத்து மேம்பாட்டை ஊக்குவிக்கிறது, மேலும் நகரங்கள் அடர்த்தி தொடர்பான ஊக்குவிப்புகளை ஆராய வேண்டும், சாவோ பாலோ ((Sao Paolo) மற்றும் டோக்கியோவின் மாதிரிகளைப் பின்பற்றி, அங்கு நில உருவாக்குநர்கள் சமூக வீட்டு வசதி அல்லது போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்யும் பொருட்டு உயர அனுமதிகளைப் பெறுகின்றனர்.


நகரவாசிகள் தினமும் இரண்டு மணிநேரம் வரை வீணாக்கும் நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க, பொதுப் போக்குவரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். கடைசி மைல் இணைப்புக்கு மெட்ரோ அமைப்புகள் மின்சார வாகனங்களால் ஆதரிக்கப்பட வேண்டும். விரைவான போக்குவரத்து அமைப்புகளைச் சுற்றியுள்ள நகரங்களைத் திட்டமிட போக்குவரத்து சார்ந்த மேம்பாடு (Transit Oriented Development (TOD)) செயல்படுத்தப்பட வேண்டும். இது நகரங்கள் சிறிய மற்றும் செங்குத்து முறையில் வளரவும், கார் பயன்பாட்டைக் குறைக்கவும், சிறந்த இணைப்பு மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவும்.


இந்தியாவில் தற்போது போதுமான நகர்ப்புற திட்டமிடுபவர்கள் இல்லை. நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, ஒரு நகரத்திற்கு ஒன்றுக்கும் குறைவான திட்டமிடுபவர்கள் உள்ளனர். மாநிலங்கள் நகர்ப்புற நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும், தொழில்முறை நகர்ப்புற மேலாளர்கள் குழுவை உருவாக்க வேண்டும். மேலும், நகரங்களுக்கு அதிக நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும். சொத்துவரி வசூல் மேம்படுத்தப்பட வேண்டும், நிலப் பதிவுகள் மின்னணு மயமாக்கப்பட வேண்டும். மேலும், ஹாங்காங்கில் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது போல், நகர மேம்பாட்டிற்கு நிதியளிக்க நில மதிப்பு பிடிப்பு (Land Value Capture (LVC)) பயன்படுத்தப்பட வேண்டும்.


இந்தூரின் சாதனைகளிலிருந்து, குறிப்பாக வள மேலாண்மையில், இந்திய நகரங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வீடு வீடாகப் பிரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பு மற்றும் ஈரமான கழிவுகளை உயிரி-CNG ஆக மாற்றும் மேம்பட்ட செயலாக்க ஆலைகள் மூலம் அறிவியல் கழிவு மேலாண்மை சாத்தியமாகும் என்பதை இந்தூர் காட்டியுள்ளது. GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவுநீர் கசிவுகளை சரிசெய்தல், மழைநீர் சேகரிப்பை செயல்படுத்துதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த நகரம் இந்தியாவின் முதல் மிகைநீர்” நகரமாக மாறியது. இந்தூரின் மாதிரி இந்தியா முழுவதும் நீர் மீள்தன்மையை அடைவதற்கான வழிகாட்டியாக செயல்படும்.


இந்தியாவின் எதிர்கால செழிப்பை நிலையான நகரமயமாக்கல் தீர்மானிக்கும். இந்தியா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய நகர்ப்புற அமைப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைவிட அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். கடந்த காலகட்டதில், 91 மில்லியன் மக்கள் இந்திய நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இது 32% அதிகரிப்பாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள், சுமார் 350 மில்லியன் மக்கள் நகரங்களில் வசிப்பார்கள். மேலும், 2036-ஆம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மக்கள்தொகை வளர்ச்சியில் நகர்ப்புறங்கள் 73%-ஆக இருக்கும். நகரமயமாக்கல் வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருக்கும்.


பல நாடுகளில், வெற்றிகரமான நகரமயமாக்கலின் பெரும்பகுதி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவியுள்ளது. இதேபோன்ற முன்னேற்றத்தை அடைய இந்தியா தனது நகரங்களை உலகத் தரம் வாய்ந்த மையங்களாக மாற்ற வேண்டும். நாடு இனி நகர்ப்புற வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது.


மக்கள் சிறந்த வருமானத்திற்கு மட்டும் இந்தியாவைவிட்டு வெளியேறுவதில்லை; அவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக நகர்கின்றனர். அமெரிக்கா அதன் கதவுகளை மூடத் தொடங்குகையில், இந்தியா தனது திறமையானவர்களை மீண்டும் அழைத்து வரவோ அல்லது அவர்களை வெளியேறவிடாமல் தடுக்கவோ ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதைச் செய்ய, நாம் அவர்களுக்கு வலுவான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.


எழுத்தாளர் இந்தியாவின் G20 தலைமை அதிகாரி மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share: