ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலக உயிர்க்கோள காப்பக வலையமைப்பில் இமாச்சலப் பிரதேசத்தின் குளிர் பாலைவனம் சேர்க்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், உயிர்க்கோளக் காப்பகங்கள் என்றால் என்ன? இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் யாவை?
தற்போதைய செய்தி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் (Cold Desert Biosphere Reserve (CDBR)) ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் (World Network of Biosphere Reserves (WNBR)) சேர்க்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் லாஹவுல்-ஸ்பிட்டி மாவட்டம் முழுவதும் பரவியுள்ள 7,770 சதுர கிமீ பரப்பளவை சர்வதேச பாதுகாப்பு வரைபடத்தில் சேர்க்கும் உலகளாவிய அங்கீகாரமாகும். இந்தச் சேர்க்கையுடன், இந்தியாவில் இப்போது உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள 13 காப்பகங்கள் உள்ளன.
முக்கிய அம்சங்கள்:
1. பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (Man and Biosphere (MAB)) திட்டத்தின் 37-வது கூட்டத்தில், 21 நாடுகளைச் சேர்ந்த 26 புதிய உயிர்க்கோள இருப்புக்கள் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் (WNBR) சேர்க்கப்பட்டன. 20 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கை - WNBR பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
2. குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் (Cold Desert Biosphere Reserve (CDBR)) டிரான்ஸ்-இமயமலை பகுதி முழுவதும் பரவியுள்ளது. இது முழு ஸ்பிதி வனவிலங்குப் பகுதியையும், லாஹௌல் வனப்பகுதியின் அருகிலுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. இதில் பரலாச்சா கணவாய், பரத்பூர் மற்றும் சர்ச்சு போன்ற இடங்களும் அடங்கும். இந்த இடங்களின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,300 மீட்டர் முதல் 6,600 மீட்டர் வரை உள்ளது.
3. இது பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கிப்பர் வனவிலங்கு சரணாலயம், சந்திரதால் ஈரநிலம் மற்றும் சர்ச்சு சமவெளிகளை ஒருங்கிணைத்து காற்று வீசும் பீடபூமிகள், பனிப்பாறை பள்ளத்தாக்குகள், ஆல்பைன் ஏரிகள் மற்றும் உயரமான பாலைவனத்தை உள்ளடக்கியது. இது உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் உள்ள மிகவும் குளிரான மற்றும் வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
4. குளிர் பாலைவனம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது — மையப் பகுதி (2,665 சதுர கி.மீ), இடையகப் பகுதி (3,977 சதுர கி.மீ), மற்றும் மாற்றுப் பகுதி (1,128 சதுர கி.மீ) — இவை பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துகின்றன. இது மூலிகைகள், புதர்கள், மர இனங்கள், உள்ளூர் இனங்கள், வனவிலங்குகள் மற்றும் மருத்துவ தாவரங்களால் செழுமையாக உள்ளது. பனிச்சிறுத்தை இங்கு முதன்மை இனமாக வசிக்கிறது.
உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?
1. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்படி, உயிர்க்கோளக் காப்பகங்கள் பல்வேறு உயிர் புவியியல் பகுதிகளில் உள்ள சிறப்பு இயல்பு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், மனித சமூகங்களை அவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகக் கருதவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 'நிலையான வளர்ச்சிக்கான கற்றல் இடங்கள்' (learning places for sustainable development) ஆகும்.
2. உயிர்க்கோளக் காப்பகத்தை வடிவமைப்பதின் நோக்கம் :
(i) பரந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக (மரபணுக்கள் முதல் சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை பல்லுயிர் பெருக்கத்தின் அனைத்து நிலைகளிலும்) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
(ii) சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூறுகளைப் பற்றிய புரிதலை (ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மூலம்) விரிவுப்படுத்த வேண்டும்.
(iii) உயிர்க்கோளக் காப்பகத்திலும் அதைச் சுற்றியும் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
3. ஒரு உயிர்க்கோளக் காப்பகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது :
மையப் பகுதி (core zones) என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பாக வைக்கப்படும் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இடையகப் பகுதி (buffer zones) என்பது படிப்பு மற்றும் கற்றலுக்குப் பயன்படுத்தப்படும் மையத்தைச் சுற்றியுள்ள பகுதியாகும்.
இடைநிலைப் பகுதி (transition zones) என்பது மக்கள் வசிக்கும் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வேலைகளைச் செய்யும் பகுதியாகும்.
4. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) 1973-74-ஆம் ஆண்டில் மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere (MAB)) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உயிர்க்கோள காப்பங்கள் என்ற யோசனையைத் தொடங்கியது. 1971-ஆம் ஆண்டு ஒரு உலகளாவிய அறிவியல் திட்டமாகத் மனிதனும் உயிர்க்கோளமும் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது பல்வேறு நாடுகள் இணைந்து இயற்கையைப் படிப்பதற்கும், உலகளவில் மக்கள் தங்கள் சுற்றுச்சூழலுடனான உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
5. உயிர்க்கோள காப்பகங்கள் தேசிய அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், அவை அமைந்துள்ள மாநிலங்களின் இறையாண்மை அதிகார வரம்பிற்குள் இருக்கும். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு மனிதன் மற்றும் உயிர்க்கோளம் என்ற திட்டத்தை தொடங்கிய பிறகு, இந்திய மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) குழு 1979-ஆம் ஆண்டில் உயிர்க்கோள காப்பகங்களை உருவாக்குவதற்கான இடங்களை அடையாளம் கண்டது. இதன் விளைவாக, இந்திய தேசிய உயிர்க்கோளக் காப்பகத் திட்டம் 1986-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மனிதன் மற்றும் உயிர்க்கோளம் என்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்திய அரசாங்கம் இதுவரை 18 உயிர்க்கோள காப்பகங்களை அங்கீகரித்துள்ளது.
6. உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பு (World Network of Biosphere Reserves (WNBR)) என்பது இருக்கும். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சிறப்பு இடங்களின் குழுவாகும். உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பின் கீழ் ஒரு தளத்தை உருவாக்க, அரசாங்கம் அதை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். அது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தபிறகு அதை அங்கீகரிக்கிறது. இந்தியாவில், உள்ள 13 உயிர்க்கோளக் காப்பகங்கள் (biosphere reserves), உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
7. இந்த உயிர்க்கோளக் காப்பகங்களை நிர்வகிப்பதற்கு, இந்திய அரசாங்கம் அதன் ஒன்றிய நிதியுதவி உயிர்க்கோளக் காப்பக திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குகிறது. இடைநிலை மற்றும் இடையக பகுதிகளில் வாழ்க்கை நடத்துவதற்கு கூடுதல் அல்லது மாற்று வழிகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது உயிர்க்கோளக் காப்பகத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.
இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்
இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. நீலகிரி இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமாகும். இது 1986ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.