ஓர் ஆளுநருக்கு தேவைப்படுவது நாவடக்கம் -விவேக் கட்ஜு

 தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பது பொருத்தமற்றது என்பதை மற்ற ஆளுநர்களைப் போலவே தமிழக ஆளுநரும் நினைவில் கொள்ள வேண்டும்.


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சமீபகாலமாக தவறான காரணத்திற்காக செய்திகளில் வருகிறார். தொடர்பில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க ஆளுநர்கள் தேவைப்படும் தனது பங்கிற்கு தன்னை கட்டுப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, திரு ரவி இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகளின் விளக்கத்தை விவாதிக்கத் துணிந்தார். வரலாற்று ஆய்வுகளின் பின்புலம் கொண்ட ஆளுநர் கூட இதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், இந்திய காவல் பணியில் சேர்ந்து புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau (IB)) பணியாற்றிய இயற்பியல் மாணவரான திரு ரவி, இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தனது கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளும் நிபுணத்துவம் தனக்கு இருப்பதாக நம்புகிறார்.


பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெறும்போது நிலப்பிரபுத்துவ, பெரும்பாலும் பழமைவாத மற்றும் படிநிலை சமூகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்தியாவின் தேசிய இயக்கத்தை திரு ரவி முழுமையாக ஆய்வு செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த உன்னத நோக்கத்திற்காக தேசிய இயக்கத்தின் அனைத்து மாபெரும் தலைவர்களும் தங்கள் பங்கை ஆற்றினர். எது எவ்வாறாயினும், எந்தவொரு அரசியலமைப்பு அதிகாரமும் சில தலைவர்களின் பங்கை வலியுறுத்துவதும், மற்றவர்களை இழிவுபடுத்துவதும் அடிப்படையில் தவறானது என்பதை உணரவேண்டும்.


ஆளுநரின் பார்வை


இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான பிரிட்டிஷாரின் முடிவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India movement) சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று திரு ரவி பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தையும் (Azad Hind Government) அதன் இந்தியத் தேசிய இராணுவத்தையும் ( Indian National Army(INA)) உருவாக்கியது. 1946 இல் கடற்படை கலகம் மற்றும் விமானப்படை கிளர்ச்சி போன்ற நிகழ்வுகளால் ஆங்கிலேயர்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாக அவர் நம்புகிறார். அந்தக் காலகட்டத்தில் உளவுத்துறை புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau (IB)) கோப்புகளைப் படித்ததிலிருந்து திரு ரவி இந்த கருத்தை உருவாக்கினார். பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லிக்கும் வங்காளத்தின் தற்காலிக ஆளுநருக்கும் இடையிலான உரையாடலையும் அவர் மேற்கோள் காட்டினார். அங்கு அட்லி 'ஒத்துழையாமையின்' (non-cooperation) குறைந்தபட்ச தாக்கத்தை குறிப்பிட்டார். ஆனால் 'கடற்படை கிளர்ச்சி மற்றும் விமானப்படை கிளர்ச்சி'க்குப் (Naval Revolt and the Air Force Rebellion) பிறகு 'பாதுகாப்பற்றதாக' (insecure) உணர்ந்ததால் பிரிட்டிஷார் வெளியேறினர் என்று கூறினார்.

ஒரு விளக்கம்

தனது அறிக்கைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்ட திரு ரவி, மகாத்மா காந்தி மீது 'மிக உயர்ந்த மரியாதை' வைத்திருப்பதாக தெளிவுபடுத்தினார். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது பற்றிய தனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார். பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகளில் இந்திய வீரர்களின் விசுவாசம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்கள் இல்லாமல், பிரிட்டிஷார் இந்தியாவை வென்றிருக்க முடியாது. இந்தியத் தேசிய இராணுவம் ( Indian National Army(INA)) மற்றும் கடற்படைக் கலகம் (naval mutiny) இந்திய வீரர்களின் விசுவாசத்தின் மீதான பிரிட்டிஷாரின் நம்பிக்கையை அசைத்தது என்பதை தேசிய இயக்கத்தின் வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தேசிய இயக்கம், பிரிட்டனின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சர்வதேச நிலைமை உள்ளிட்ட சூழ்நிலைகள், இந்தியாவில் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆயுத நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை.


எனவே, சுதந்திரத்தை அடைவதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை திரு ரவி பாராட்டியது சரியானதுடன், இது கிட்டத்தட்ட உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர இயக்கத் தலைவர்களிடையே சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், இவர்களில் யாரும் நேதாஜியையோ அல்லது இந்தியத் தேசிய இராணுவத்தையோ (INA) ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை. பூலாபாய் தேசாய், தேஜ் பகதூர் சாப்ரூ, ஜவஹர்லால் நேரு மற்றும் கைலாஸ் நாத் கட்ஜு உட்பட பல வழக்கறிஞர்கள் 1945-46 இல் செங்கோட்டையில் மூன்று இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளுக்காக வாதாட ஒன்று சேர்ந்தனர் என்ற உண்மை இந்த நிகழ்வின் மூலம் நிரூபிக்கிறது. கட்ஜுவின் பேரன் என்ற முறையிலும், சப்ருவின் கொள்ளுப் பேரன் என்ற முறையிலும் நேதாஜி இவர்களிடம் ஏற்படுத்திய அபரிமிதமான அபிமானத்தை எழுத்தாளர் தனிப்பட்ட முறையில் அறிவார்.


கட்ஜுவின் வெளியிடப்படாத வாழ்க்கை வரலாற்றை மேற்கோள் காட்டி, இந்தியத் தேசிய இராணுவம் (INA) விசாரணையின் தாக்கம் கவனிக்கத்தக்கது. கட்ஜுவின் கூற்றுப்படி, வழக்கு விசாரணையின் போது நாட்டில் ஏற்பட்ட பரபரப்பு தீவிரமானது மற்றும் விவரிக்க முடியாதது. 1919இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தேசியப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததைப் போலவே, 1947 ஆகஸ்டில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி திரும்பப் பெறுவதற்கு இந்திய தேசிய ராணுவ விசாரணைகளே திட்டவட்டமான காரணம் என்றும்,  அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்ததாகவும் உறுதியாக நம்புகிறார்.  


கடைசி வார்த்தை

நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி ஆற்றிய பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திரு ரவி வெளிப்படையாக வாதிடுகிறார். ஒருவேளை ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது வாரிசுகள் உட்பட காங்கிரஸ் கட்சி காரணமாக அமைந்திருக்கலாம்.  இந்த குறைபாடு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக கருதுவதாகத் தெரிகிறது. இவ்வாறு உணர திரு.ரவி அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும், ஆளுநர் என்ற முறையில், இந்த கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவது பொருத்தமானதல்ல. தேசிய இயக்கத்தில் வெவ்வேறு தலைவர்களின் தாக்கம் குறித்து மறைமுகமாகக் கூட ஒப்பீடு செய்வதை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர்களிடமிருந்து தேவைப்படுவது நாவடக்கம். முன்னாள் அரசு ஊழியர் என்ற பின்னணியில் திரு ரவி அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும்.  


விவேக் கட்ஜு ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார்




Original article:

Share: