பொருத்தமான சட்டத்தை இயற்றுவதன் மூலம் இந்த மாற்றத்தைத் தொடங்கலாம், இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறைகளை மாதிரி நடத்தை விதிகளில் இணைக்கலாம்.
காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், மனித செயல்பாட்டின் ஒவ்வொரு துறையிலும் நிலையான நடைமுறைகளுக்கு மாறுவது தவிர்க்க முடியாதது மற்றும் அவசரமானது. ஆகஸ்ட் 2023இல், ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல்களில் மக்காத பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) கவலை தெரிவித்தது. 1999ஆம் ஆண்டு முதல் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பிளாஸ்டிக் அல்லது பாலிதீன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கட்சிகளையும் வேட்பாளர்களையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலும் கார்பன் தடத்தை விட்டுச் செல்வதால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் நமக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல்கள் தேவை. இலங்கையும், எஸ்தோனியாவும் ஏற்கனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல்களை நடத்தியுள்ளன. இப்போது, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருவதால், சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிப்பதும், "பசுமைத் தேர்தல்களை" (green elections) நோக்கமாகக் கொள்வதும் முக்கியம்.
ஏன் ஒரு முன்னுதாரண மாற்றம் தேவை?
தேர்தல்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தை கருத்தில் கொள்வதில்லை. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒரு வேட்பாளரின் பிரச்சார விமானங்கள் மட்டுமே ஒரு வருடத்தில் 500 அமெரிக்கர்களுக்கு சமமான கார்பனை வெளியேற்றின. பேரணிகள், பதாகைகள் (PVC flex banners) ஒலி பெருக்கிகள் காகித அடிப்படையிலான பொருட்கள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துவது போன்ற பாரம்பரிய தேர்தல் முறைகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மில்லியன் கணக்கான வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் பெரிய தேர்தல்கள் மற்றும் பெரிய பேரணிகள் இந்த தாக்கத்தை இன்னும் பெரிதாக்குகின்றன. "பசுமை தேர்தல்கள்" (green elections) என்பது பிரச்சார பொருட்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை அனைத்திலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பயன்படுத்துவதாகும்.
2023 ஆம் ஆண்டில் எஸ்டோனியாவைச் சேர்ந்த வில்லெம்சன் மற்றும் கிரிப்ஸ் நடத்திய ஆய்வில், தேர்தல்களின் போது பெரும்பாலான கார்பன் உமிழ்வுகள் வாக்காளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்வதால் தான் என்று கண்டறியப்பட்டது. இரண்டாவது பெரிய ஆதாரம் வாக்குச் சாவடிகள் இயங்குவது. டிஜிட்டல் வாக்களிப்புக்கு மாறுவதன் மூலம் கார்பன் உமிழ்வு 40% குறைக்கப்படலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல்களை நடத்துவது கடினமாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு புதிய தொழில்நுட்பம், நிதி மற்றும் நடத்தை சார்ந்த மாற்றங்கள் தேவை. டிஜிட்டல் வாக்களிப்புக்கு தடையற்ற இணையம் வலுவான உள்கட்டமைப்பு ஹேக்கிங் மற்றும் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை தேவை. குறிப்பாக, கிராமப்புறங்களில், அனைத்து வாக்காளர்களும் புதிய தொழில்நுட்பங்களை நியாயமான முறையில் அணுகுவதை உறுதி செய்வதும், அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும் மற்றொரு தடையாக உள்ளது. சுற்றுச்சூழலிற்க்கு உகந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு நிறைய பணம் செலவாகும். இது குறைந்த பணம் கொண்ட அரசாங்கங்களுக்கு சிக்கலாக இருக்கலாம். வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நேரில் இருப்பது முக்கியம் என்று நினைத்து, வாக்களிக்கும் முறையை மாற்றுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பாக இருப்பதைப் பற்றியும் சிலர் கவலைப்படலாம். எனவே, மாற்றங்களைப் பற்றி வெளிப்படைத்தன்மை மற்றும் திறம்பட தணிக்கை செய்வது மிகவும் அவசியம்.
வெற்றிகரமான சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல் முயற்சிகளின் எடுத்துக்காட்டுகள் நமக்கு முக்கியமான நிகழ்வுகளை கற்பிக்கின்றன. கேரளாவில் 2019 பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அப்போது, பிளக்ஸ் பேனர் போன்ற மக்காத பொருட்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு பதிலாக, அவர்கள் சுவர் விளம்பரம் (Wall graffiti) மற்றும் காகித சுவரொட்டிகளைப் பயன்படுத்தினர். திருவனந்தபுரத்தில், பசுமை தேர்தலை நடத்த அரசாங்க குழுக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றின. அவர்கள் கிராமங்களில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். 2022ஆம் ஆண்டில், கோவாவில் சட்டமன்றத் தேர்தலுக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாக்குச் சாவடிகள் இருந்தன. அவர்கள் உள்ளூர் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட மக்கும் பொருட்களைப் தேர்தலில் பயன்படுத்தினர்.
2019 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (Sri Lanka Podujana Peramuna (SLPP)) உலகின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியது. பிரச்சார வாகனங்கள் மற்றும் மின்சார பயன்பாட்டிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை அளவிட்டு, அவற்றை ஈடுசெய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்களை நட்டனர். இது பிரச்சாரத்தின் கார்பன் தடம் குறைக்க உதவியது மற்றும் காடுகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
இதேபோல், எஸ்டோனியா (Estonia) டிஜிட்டல் வாக்களிப்பை ஆன்லைன் விருப்பமாகத் தொடங்கியது. இதனால் மக்கள் வாக்களிப்பது எளிதாகியது. வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய டிஜிட்டல் வாக்களிப்பு சுற்றுச்சூழலுக்கு நல்லது மற்றும் அதிகமான மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கிறது என்பதை எஸ்டோனியாவின் டிஜிட்டல் தேர்தல் வெற்றி காட்டுகிறது.
ஒரு திட்டம்
இந்த பசுமை மாற்றமானது, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையங்கள், அரசாங்கங்கள், வாக்காளர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் போன்ற அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பசுமை மாற்றத்தை வளர்ப்பதற்கு அடிமட்ட முன்முயற்சிகளுடன் உயர்மட்ட வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதன் வெற்றி இன்றியமையாதது.
அரசியல் கட்சிகள் வழிநடத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல் முறைகள் நடைபெறுவதற்க்கு தேவைப்படும் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் இதைத் தொடங்கலாம். மேலும், தேர்தல் ஆணையம் இந்த விதிகளை தங்கள் வழிகாட்டுதல்களில் சேர்க்க வேண்டும். இதன் பொருள், பெரிய பேரணிகளை நடத்துவதற்கு பதிலாக டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது அல்லது வீடு வீடாகச் செல்வது. தேர்தல் பணிகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இயற்கை துணிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் மற்றும் மட்கக்கூடிய பிளாஸ்டிக் போன்ற நிலையான பொருட்களைப் பயன்படுத்துவது வாக்குச் சாவடிகளுக்கு கழிவுகளை நிர்வகிக்கவும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கவும் இது உதவும்.
இதற்கு அதிகாரிகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு தேவைப்பட்டாலும், டிஜிட்டல் வாக்களிப்பை இந்திய தேர்தல் ஆனையம் வலியுறுத்த முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாக்காளர்களுக்கு அரசாங்கம் கற்பித்து உதவ வேண்டும். இதனால் அனைவரும் தேர்தலில் பங்கேற்க முடியும். இது தேர்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கிறது. சிவில் சமூகம் மாற்றத்தை ஊக்குவிக்க முடியும். பாரம்பரிய தேர்தல் முறைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன என்பதைக் காண்பிப்பதன் மூலமும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும் ஊடகங்களும் உதவ முடியும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல்களில் இந்தியா முன்னிலை வகித்தால், அது மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.
அமர் பட்நாயக் ஒடிசாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்.