வரலாற்று ரீதியாக, பாலஸ்தீன பிரச்சினைக்கு இந்தியா உறுதியான ஆதரவாளராக இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு வளர்ந்திருந்தாலும், இஸ்ரேலுடனான தனது புதிய கூட்டாண்மைக்கும், பாலஸ்தீனத்துடனான அதன் பழைய உறுதிப்பாட்டையும் இந்தியா சமநிலைப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா இந்த சமநிலையான நிலைப்பாட்டில் இருந்து விலகி, இந்தியாவானது இஸ்ரேலுக்கு சாதகமாக இருக்கிறதா என்பது பற்றிய கவலைகள் உள்ளன. மேற்கு ஆசியாவில் நிலைமை மாறி வருவதால் இது நடக்கிறது. அரபு நாடுகள் கூட இஸ்ரேலுடன் நல்லுறவை அளித்து பாலஸ்தீன பிரச்சினையை புறக்கணித்து வருகின்றன.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில், பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவார்கள். இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி X வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றில் தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ’இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.
2017 இல், இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் திரு.மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேர்மறையான முறையில் நல்ல தனிப்பட்ட உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். திரு. மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் இஸ்ரேலின் உறுதியான பாதுகாப்பு அணுகுமுறையை வெளிப்படையாகப் பாராட்டுகிறார்கள். ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 26 அன்று, காசாவில் "உடனடியான, நீடித்த மற்றும் நிலையான மனிதாபிமான போர்நிறுத்தத்தை" வலியுறுத்தும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA) வாக்கெடுப்பில் இருந்து இந்தியாவானது விலகத் தீர்மானித்தது. இதனால், அக்டோபர் 7 "பயங்கரவாதத் தாக்குதலை" எதிர்த்து தீர்மானமானது வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்று இந்தியா தனது முடிவை விளக்கியது. பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கை மாறி வருவதையே இந்த நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
வளர்ந்து வரும் அணுகுமுறை
பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பல ஆண்டுகளாக மாறிவிட்டது. 1947 நவம்பரில், பாலஸ்தீனத்தை யூத நாடாகவும், அரபு நாடாகவும், சர்வதேச நகரமாகவும் (ஜெருசலேம்) பிரிக்கும் தீர்மானத்தின் மீது ஐக்கிய நாடு பொதுச் சபையில்; வாக்களித்தபோது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபுக் கூட்டமைப்புடன் இணைந்து அதற்கு எதிராக வாக்களித்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு பாலஸ்தீனத்தில் குடியேறிய சியோனிச மக்களை இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டார். பிரிவினையை அனுபவித்த இந்தியா, பாலஸ்தீனத்தைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கக் கூடாது என்று நேரு நம்பினார். இருப்பினும், மே 1948 இல் இஸ்ரேல் சுதந்திரத்தை அறிவித்த பிறகு, இந்தியாவின் அணுகுமுறை மாறியதுடன் அது, 1950 வாக்கில் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால் அப்போது அது முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவில்லை. பனிப்போரின் போது, மூன்றாம் உலக நாடுகளின் தன்னாட்சி உரிமையை வென்ற இந்தியா, பாலஸ்தீனிய காரணத்தை மிகவும் வெளிப்படையாக ஆதரிப்பவர்களில் ஒருவராக தனித்து நின்றது.
1992 ஆம் ஆண்டில், இந்தியா இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியது. அப்போதிருந்து, இந்தியாவுக்கும், டெல் அவிவ் (Tel Aviv) இடையேயான உறவு வலுவடைந்துள்ளது. இன்று, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இஸ்ரேல் உள்ளது. ஆனால், இந்தியா பகிரங்கமாக தனது ஆதரவைப் பேணியது, ஒரு இறையாண்மை, சுதந்திரமான, சாத்தியமான மற்றும் ஐக்கிய பாலஸ்தீனத்தின் விளைவாக, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் சமாதானமாக அருகருகே வாழ்கிறது. இந்த நிலைப்பாடு அரபு அமைதி முன்முயற்சி (Arab Peace Initiative), குவார்டெட் சாலை வரைபடம் (Quartet Road map) மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் ஒப்புதல்களுடன் ஒத்துப்போகிறது. முக்கியமாக, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, 1967-ன் எல்லைகளை ஒட்டி பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு இந்தியா ஆதரவளித்தது.
திரு. மோடி பிரதமரான பிறகு, இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிப்ரவரி 2018 இல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவுக்கு அவர் பயணம் செய்தபோது, நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஜெருசலேமின் நிலை அல்லது குறிப்பிட்ட எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததற்கு எதிராக இந்தியா வாக்களித்தது, முழு நகரத்தின் மீதான இஸ்ரேலின் உரிமையை ஆதரிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனால் தலைநகர் மற்றும் எல்லைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை இந்தியா இனி விவாதிக்காது. இருப்பினும், அது இஸ்ரேலின் கூட்டாளியாக இருந்து இரு நாடுகளின் தீர்வை ஆதரிக்கிறது. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கையின் தார்மீக அம்சங்களை விட உண்மையான அரசியலின் நடைமுறைக் கருத்தாய்வுகள் முன்னுரிமை பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகளவையில் இந்தியாவின் வாக்களிக்கும் முறையை முழுமையாக ஆராய்ந்து அக்டோபர் 7 முதல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் இந்த சசமநிலையைப் பேணுவதற்கான நிலைப்பாடு மாறாமல் இருப்பதைக் குறிக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவைப் போல இந்தியா ஒரு வலுவான தார்மீக விமர்சகராக இல்லை அல்லது அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற இஸ்ரேலின் அமைதியான பார்வையாளரோ அல்லது ஆதரவாளரோ அல்ல.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா இறையாண்மையுள்ள, சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை ஆதரிக்கிறது என்று கூறியது. ஆரம்பத்தில் வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, பின்னர் இஸ்ரேல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் குறைந்தது நான்கு முறை வாக்களித்தது.
நவம்பர் 12, 2023 அன்று, கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் (occupied Syrian Golan) உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் (occupied Palestinian territories) இஸ்ரேலிய குடியேற்றங்களைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேலின் தற்போதைய ஆக்கிரமிப்பு குறித்து கவலை தெரிவிக்கும் மற்றொரு தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது. டிசம்பர் 12 அன்று, உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. மேலும், டிசம்பர் 19 அன்று, பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை (Palestinian right to self-determination) இந்தியா ஆதரித்தது.
ஒவ்வொரு நாடும் எங்கு நிற்கிறது என்பதை வாக்களிப்பு பதிவு தெளிவாகக் காட்டுகிறது. பாலஸ்தீனிய பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுத்தாமல், இரண்டு நாடுகளின் தீர்வுக்கு சாத்தியமில்லை. பாலஸ்தீன இராணுவங்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலின் வலுவான இராணுவத்தை கருத்தில் கொண்டு, குறிப்பிடத்தக்க அதிகார சமநிலையின்மை காரணமாக ஒரு தீர்மானத்திற்கான பாதை இராஜதந்திரத்தில் உள்ளது, போரின் மூலம் அல்ல. எனவே, இரு நாட்டின் தீர்வை ஆதரிப்பதற்கு, வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது, பேச்சுவார்த்தைக்கான ஆதரவு, குடியேற்றங்களைக் கண்டிப்பது மற்றும் பாலஸ்தீனிய சுயநிர்ணயத்திற்கான ஆதரவு ஆகியவை இருக்க வேண்டும். இருநாடுகளின் தீர்வை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆனால் ஐக்கிய நாடு தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்து போர்நிறுத்த அழைப்புகளை நிராகரிக்கும் அமெரிக்காவைப் போலல்லாமல், இந்தியா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியாவின் நலன்கள்
பாலஸ்தீனத்தை ஆதரிப்பது தேசிய நலன்களில் சில அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகளால் காஸாவில் நிலைமை மோசமாக உள்ளது. 30,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதுடன், சுமார் 70,000 பேர் காயமடைந்துள்ளனர். காசாவின் 2.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 90% பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகும். இஸ்ரேல் அதன் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சர்வதேச சட்டங்களால் விளைவுகளை எதிர்கொள்ளவில்லை. இஸ்ரேலை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரிப்பதே இதற்குக் காரணம். இருப்பினும், அமெரிக்காவின் ஆதரவும், பாலஸ்தீனியர்களின் உயிர்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து இஸ்ரேலின் அக்கறையின்மையும் உலகளவில், குறிப்பாக உலகளாவிய தெற்கில் வலுவான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் எதிர்வினையாற்றுகின்றன. தென்னாப்பிரிக்கா இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்தத்துக்கு சீனா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் உட்பட பல்வேறு பாலஸ்தீன குழுக்களுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலகளாவிய தெற்கில் இந்தியா ஒரு தலைவராக இருக்க விரும்புகிறது. எனவே, இந்த சர்வதேச கவலைகளையும் எதிர்வினைகளையும் அது புறக்கணிக்க முடியாது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலை பகிரங்கமாக விமர்சித்தார். கடந்த மாதம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) காசாவில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த அறிக்கைதான் இதுவரை போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா நேரடியாக விமர்சித்த அறிக்கையாகும்.
அக்டோபர் 7 தாக்குதலும் இஸ்ரேலின் எதிர்வினையும் பிராந்தியத்தின் நிலைமையை மாற்றியுள்ளன. அக்டோபர் 7-க்கு முன்பு, அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராகி வந்தது. இது ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்குப் (Abraham Accord) பிறகு. இப்போது, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலைப் போலவே அமெரிக்காவின் நற்பெயரும் சேதமடைந்துள்ளது. சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது நடக்கவில்லை. இதன் காரணமாக, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார தாழ்வாரத்திற்கான (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) திட்டங்கள் தாமதமாகின்றன. இந்த நெருக்கடி நீடித்து, செங்கடலில் உள்ள கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்கினால், அது இந்தியாவை பொருளாதார ரீதியாக பாதிக்கும். காஸாவில் ஒரு நீண்ட போர் ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். இந்த மோதலில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கூட்டாளி நாடுகளாகும். இறுதியாக, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவது, மேற்கு ஆசியாவில் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டு வருவது மற்றும் பாலஸ்தீன பிரச்சினையைத் தீர்ப்பது ஆகியவை இந்தியாவுக்கு முக்கியம். இந்த இலக்குகள் இந்தியாவின் மேற்கு நோக்கிய கொள்கையின் மையமாக இருக்க வேண்டும்.