குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுகளத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த புதிய வசதி மூலம் ஆண்டுக்கு 20 முதல் 30 சிறிய செயற்கைக்கோள்களை ஏவ முடியும்.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28 அன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் கடலோர தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வசதி ரூ.986 கோடி செலவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இது முதன்மையாக வர்த்தரீதியான, தேவைக்கேற்ப மற்றும் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல்களைக் கையாளும்.
இந்தியாவுக்கு ஏன் ஒரு புதிய ஏவுதளம் தேவை?
ஒன்றிய அரசின் சமீபத்திய கொள்கை தனியார் நிறுவனங்களை விண்வெளித் துறையில் நுழைய அனுமதிக்கிறது. இது, வணிக ரீதியான ஏவுதல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இஸ்ரோவின் முதல் ஏவுதளமான, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் (Satish Dhawan Space Centre (SDSC -SHAR)), அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கையாள்வதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்காக, இந்திய விண்வெளி நிறுவனம் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ஷார் (SHAR) பெரிய மற்றும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களுக்கு (heavy-lift-off missions) மட்டுமே பயன்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சிறிய எடையுள்ள ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பயன்படுத்தப்படும். சந்திரன், வெள்ளி மற்றும் மனித-விமான பயணமான ககன்யான் ஆகியவற்றிற்கான குறிப்பிடத்தக்க பயணங்களுக்கும் ஷார் (SHAR)பயன்படுத்தப்படும்.
தனியார் நிறுவனங்கள், புதிய ஏவுதளத்தில் விண்வெளிக்கு தயாரான பாகங்களை உருவாக்கலாம். செயற்கைக்கோள்களை உருவாக்கலாம் மற்றும் வாகனங்களை ஏவலாம். கூடுதலாக, இது தேவைக்கேற்ப வணிக ரீதியான புத்தொழில்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பை வழங்கும்.
தமிழ் நாட்டில் புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது ஏன்?
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் இஸ்ரோவின் எதிர்கால சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (Small Satellite Launch Vehicle (SSLV)) திட்டங்களுக்கு புவியியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இயற்கை நன்மைகளை வழங்குகிறது.
இந்த வசதி, சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களை நேரடி தெற்கு நோக்கி செல்ல அனுமதிக்கிறது. இது குறுகியது மற்றும் குறைந்த எரிபொருள் தேவைப்படும் பயணப் பாதையாகும். குலசேகரப்பட்டின ஏவுதள வசதி, சுமைகளின் திறனை மேம்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிகளை அதிகரிக்கும்.
தற்போது, ஷாரிலிருந்து (SHAR) ஏவப்படும் ஏவுகணைகள் நீண்ட பாதையைப் பின்பற்றி, தெற்கு நோக்கிச் செல்வதற்கு முன்பு இலங்கையைச் சுற்றி கிழக்கு நோக்கிச் செல்கின்றன. இது அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறது. கொழும்புக்கு மேற்கே அமைந்துள்ள குலசேகரப்பட்டினம், நேராக தெற்கு நோக்கி பறக்க அனுமதிக்கிறது. இது சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகன பணிகளுக்கு எரிபொருளை மிச்சப்படுத்துகிறது.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தொகுக்கப்பட்ட ‘From Fishing Hamlet to Red Planet: India’s Space Journey’ என்ற புத்தகத்தின்படி, "பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஏவுதளத்திற்கு, பூமியின் சுழற்சியால் வழங்கப்படும் வேகத்தின் அளவு சுமார் 450 மீ/வி ஆகும். கொடுக்கப்பட்ட ஏவுகணை வாகனத்திற்கான பேலோடில் சுமைகளை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். புவிநிலை செயற்கைக்கோள்கள் பூமத்திய ரேகைத் தளத்தில் இருக்க வேண்டும். எனவே, அத்தகைய செயற்கைக்கோள்களுக்கு, ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருந்தால், அது சிறந்தது.
புதிய ஏவு தளத்தின் நிலை என்ன?
குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. இது இஸ்ரோவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கடந்த வாரம் கூறினார். இந்த புதிய வசதி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 சிறிய செயற்கைக்கோள் வாகன ஏவுதல்களை அனுமதிக்கும் என்று கூறினார்.
சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்கள் (Small Satellite Launch Vehicle (SSLV)) என்றால் என்ன, அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?
சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை (Small Satellite Launch Vehicle (SSLV)) இஸ்ரோ உருவாக்கியது. இது சுமார் 120 டன் எடையுள்ள மூன்று நிலை ராக்கெட் ஆகும். இது 34 மீட்டர் நீளமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டது. சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் திட மற்றும் திரவ உந்துவிசையின் கலவையைப் பயன்படுத்துகிறது.
சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் பொதுவாக 10 முதல் 500 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மினி, மைக்ரோ அல்லது நானோ செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை செலவு குறைந்தவை மற்றும் விரைவாக சுற்றுப்பாதையை அடையக்கூடியவை .
சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் வணிக மற்றும் தேவைக்கேற்ப ஏவுவதற்கு ஏற்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் விண்வெளி திட்டங்கள் பெரும்பாலும் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனப் பயணங்களை பயன்படுத்துகின்றன.
முதல் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகன (Small Satellite Launch Vehicle (SSLV)) திட்டம் - SSLV-D1 - ஆகஸ்ட் 2022 இல் EOS-02 மற்றும் ஆசாதிசாட் (AzaadiSat) உட்பட இரண்டு செயற்கைக்கோள்களைச் சுமந்துசென்று, தோல்வியடைந்தது. ஒரு குறைபாடற்ற ஏவுதல் மற்றும் அடுத்தடுத்த நிலைகளில் சீரான முன்னேற்றம் இருந்தபோதிலும், இரண்டு செயற்கைக்கோள்களும் பிரிக்கப்பட்ட பிறகு உத்தேசிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டன.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2023 இல் SSLV-D2 உடன் அதன் இரண்டாவது முயற்சியில், இஸ்ரோ (Indian Space Research Organisation ISRO)) வெற்றியை ருசித்தது. ராக்கெட் 15 நிமிட பயணத்தைத் தொடர்ந்து 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் மூன்று செயற்கைக்கோள்களை உள்நோக்கிச் செலுத்தியது.
ஷார் (SHAR) இன் அம்சங்கள் என்ன?
’SHAR’ ஆனது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. இது தற்போது அனைத்து இஸ்ரோ பணிகளுக்கும் ஏவுதல் உள்கட்டமைப்பை வழங்கி வருகிறது. இது திடமான உந்துசக்தி செயலாக்க அமைப்பு, நிலையான சோதனை மற்றும் ஏவுதல் வாகன ஒருங்கிணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு சேவைகள், கண்காணிப்பு மற்றும் ஏவுதலை மேற்பார்வையிட இணை சேவை மற்றும் ஒரு திட்ட கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
SHAR இரண்டு ஏவுகணை வளாகங்களைக் கொண்டுள்ளது, அவை துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)), ஜியோசின்க்ரோனஸ் ஸ்பேஸ் ஏவுதல் வாகனம் (Geosynchronous Space Launch Vehicles GSLV)) மற்றும் ஜியோசின்க்ரோனஸ் ஸ்பேஸ் ஏவுதல் வாகனம் Mk-III (geosynchronous Satellite Launch Vehicle (Mk-Ill)) - இப்போது LVM3 என மறுபெயரிடப்பட்டுள்ளது ஆகியவற்றை ஏவுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. முதல் ஏவுதளம், 1990 களின் முற்பகுதியில் கட்டப்பட்டது மற்றும் 1993 இல் செயல்படத் தொடங்கியது. இரண்டாவது ஏவுதளம் 2005 முதல் செயல்பட்டு வருகிறது.