புனே விபத்தில், மாதிரி குளறுபடி செய்யப்பட்டிருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் இரத்தத்தில் மது அளவை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? -அனோனா தத்

 ஒரு மாதிரியில் காணப்படும் இரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹால் அளவின் அடிப்படையில், சம்பவத்தின் போதான அளவைத் தீர்மானிப்பது மிகவும் எளிதானது.


புனே கட்டுமான உரிமையாளர் ஒருவரின் 17-வயது மகன் மதுவருந்தி  விட்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலியாகினர். ஆல்கஹால் சோதனைக்காக சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகள் தடயவியல் குழுவால் மாற்றப்பட்டவை என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த தடயவியல் நிபுணர் ஒருவர், இதுபோன்ற சம்பவங்கள் நடந்த உடனேயே இரத்த மாதிரிகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும், அவ்வாறு செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளையும் விளக்குகிறார்.


இரத்த மாதிரி எப்போது சேகரிக்கப்பட வேண்டும்?


சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் இரத்த மாதிரி சேகரிக்கப்பட வேண்டும். ஆல்கஹால் பொதுவாக ஒருமணி நேரத்திற்கு 100 மில்லி இரத்தத்திற்கு 10-15 மி.கி என்ற விகிதத்தில் வளர்சிதை மாற்றம் அடைகிறது. இருப்பினும் வயது மற்றும் பாலினம் போன்ற காரணிகளைப் பொறுத்து இந்த வேகம் மாறுபடும். 10-15 மி.கி / எம்.எல் / மணிநேர விகிதம் சராசரியாக உள்ளது.


ஒரு மாதிரியில் காணப்படும் இரத்த ஆல்கஹால் அளவின் அடிப்படையில், சம்பவத்தின் போது அளவைத் தீர்மானிக்க முடியும். 10 மணி நேரத்திற்குப் பிறகும், இரத்தத்தில் காணப்படும் சுவடு அளவுகளின் அடிப்படையில் இரத்த ஆல்கஹால் அளவைக் கணக்கிட முடியும், ஆனால் இது சிறந்ததல்ல.


ஆல்கஹால் வளர்சிதை மாற்றமடைந்தால் என்ன செய்வது?


இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு பூஜ்ஜியமாக இருந்தாலும், அந்த நபர் மது அருந்திவில்லை என்று அர்த்தமில்லை. தடயவியல் மருத்துவர்கள், ஆய்வக அறிக்கைகள் மட்டுமல்ல, நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு ஆதாரங்களை நம்பியிருக்கிறார்கள். பார் ரசீதுகள், ஊழியர்களின் அறிக்கைகள் மற்றும் CCTV காட்சிகளைப் பயன்படுத்தி ஒருவர் எவ்வளவு மது அருந்தினார் என்ற தகவலை சேகரிக்க முடியும். புனே வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஆல்கஹால் அளவை மதிப்பிடுவதற்கு இந்த முறையைப் பயன்படுத்தலாம். இது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதேபோல், 1999-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு மோதிவிட்டு தப்பியோடிய வழக்கில், ஆறு பேர் இறந்த நிலையில், மாதிரிகள் தாமதமாக சேகரிக்கப்பட்டன. ஆனால் மற்ற ஆதாரங்களுடன், ஆல்கஹால் அளவை இன்னும் துல்லியமாகக் கணக்கிட முடியும். ஆயினும்கூட, கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தி நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது.


இரத்த மாதிரிகள் சேதமடைவதைத் தடுத்தல்


சேதத்தைத் தடுக்க மாதிரிகள் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன, ஆனால் போக்குவரத்தின் போது இது இன்னும் நிகழலாம். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) இப்போது இரத்த ஆல்கஹால் அளவைக் கணக்கிட ஒரு பரிசோதிக்கும் இயந்திரம் உள்ளது. எனவே மாதிரிகள் சோதனைக்கு, வெளியில்  அனுப்ப தேவையில்லை.


அனோனா தத், இந்தியன் எக்ஸ்பிரஸின் முதன்மை நிருபர், முதன்மையாக உடல்நலம் குறித்து எழுதுகிறார். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் முதல் பரவலானத் தொற்று நோய்கள் வரையிலான தலைப்புகள் குறித்து பேசிவருகிறார்.




Original article:

Share: