சூழலியல் குறித்து திரௌபதி முர்முவின் பார்வை: காடுகளைப் பாதுகாக்க, பழங்குடி சமூகங்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது முக்கியம் -திரெளபதி முர்மு

 பல ஆண்டுகளாக அவர்களால் பெற்ற அறிவு, சுற்றுச்சூழலுக்கு நிலையான, தார்மீக ரீதியாக சரியான மற்றும் அனைவருக்கும் நியாயமான பாதையை நோக்கி வழிநடத்த உதவும்.


இந்திய வனப் பணியின் 2022 தொகுதியின் அனைத்து பயிற்சி அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன். இந்தத் தொகுப்பில் 10 பெண் அதிகாரிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் சமுதாயத்தில் முன்னேற்றத்தின் அடையாளமாக இருப்பதால் உங்கள் அனைவருக்கும் நான் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்.


தேசிய வனப் பயிற்சி நிறுவனம் (National Forest Academy) சுற்றுச்சூழல் துறையில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த வாரம், உச்ச நீதிமன்றமானது சுற்றுச்சூழல் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தது. இதில் "காடுகளின் முக்கியத்துவத்தை அறியும் போது, மக்கள் அடிக்கடி மறதியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இங்கு, காடுகளின்ஆன்மாதான் பூமியை இயக்குகிறது" என்று கூறியது.


காடுகள் தான் உயிர் கொடுப்பவை என்பதையும், பூமியில் உயிர்களைக் காத்திருப்பதையும் மனிதர்கள் மறந்து விடுகிறார்கள். காடுகளின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் பொறுப்பு. மானுட யுகம் வளர்ச்சி கண்டுள்ளது ஆனால் அது பேரழிவுகளையும் கண்டுள்ளது. நாம் பூமியின் வளங்களின் உரிமையாளர்கள் அல்ல, அறங்காவலர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையை மையமாகக் கொண்டால் மட்டுமே நாம் உண்மையிலேயே மனிதனை மையமாகக் கொள்ள முடியும். காலநிலை மாற்றத்தின் கடுமையான சவால் காரணமாக, அதன் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ் ஒர் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

வளர்ச்சியின் நிலையில் இரண்டு வகைகள் உள்ளன: பாரம்பரியம் (tradition) மற்றும் நவீனம் (modernity) ஆகும். இன்று, சமூகம் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இதற்கு ஒரு பெரிய காரணம், நாம் இயற்கையை நவீன வாழ்க்கைக்காக அதிகம் பயன்படுத்துகிறோம், பாரம்பரிய அறிவைப் பற்றி சிந்திக்கவில்லை. பழங்குடியினர் தங்கள் வாழ்க்கையில் இயற்கையின் விதிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சமச்சீரற்ற நவீனத்துவத்தின் தூண்டுதலால் பழங்குடி சமூகம் மற்றும் அவர்களின் அறிவுத்தளம்/அணுகுமுறை மரபுவழி என்று சிலர் கருதுகின்றனர். காலநிலை மாற்றத்தில் பழங்குடி சமூகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் மற்றவர்களை விட அதன் விளைவுகளால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


பல நூற்றாண்டுகளாக திரட்டப்பட்ட அவர்களின் அறிவு ஞானம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நெறிமுறை நடைமுறைகள் மற்றும் சமூக நீதியை நோக்கி நம்மை வழிநடத்தும். எனவே, பழங்குடி சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையின் இலட்சியங்களை மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ச்சிப் பயணத்தில் பழங்குடி சமூகங்கள் சமமான பங்களிப்பை அனுபவிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.


பழங்குடியின மக்களுடன் நேரத்தை செலவிடுங்கள், அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள், அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் பொறுப்புகளின் உரிமையை எடுத்து முன்மாதிரியாக இருங்கள். அவர்களின் கல்வி, மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த பணியாற்றுங்கள். இந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை வனப்பணிகளில் சேரத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.


18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி மரம் மற்றும் இதர வனப் பொருட்களுக்கான தேவையை உருவாக்கியது. இதன் விளைவாக, புதிய விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் காடுகளைப் பயன்படுத்துவதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்திய வன சேவைக்கு முன் வந்த இம்பீரியல் வன சேவை (Imperial Forest Service), இந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய குறிக்கோள் பழங்குடி சமூகங்கள் அல்லது காடுகளைப் பாதுகாப்பது அல்ல, மாறாக இந்தியாவின் காடுகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசின் நலன்களுக்கு சேவை செய்வதாகும்.

இந்தியாவின் வன வளங்களை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்காக சுரண்டுவதே அதன் ஆணை. கடந்த காலத்தில், ஆயிரக்கணக்கான புலிகள், சிறுத்தைகள் மற்றும் ஓநாய்கள் வேட்டையாடப்பட்டன. இது மனித நாகரிகத்தின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இன்றைய இந்திய வன சேவை அதிகாரிகள் இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும், நவீனத்தை பாரம்பரியத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும் மற்றும் வன சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.


1875 முதல் 1925 வரையிலான 50 ஆண்டுகளில் 80,000க்கும் மேற்பட்ட புலிகளும், 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிறுத்தைகளும், 2 லட்சத்துக்கும் அதிகமான ஓநாய்களும் வேட்டையாடப்பட்டது வருத்தமளிக்கிறது. விலங்குகளின் தோல்கள் அல்லது துண்டிக்கப்பட்ட தலைகள் சுவர்களை அலங்கரிக்கும் அருங்காட்சியகங்களுக்குச் செல்லும்போது, ​​அந்தக் கண்காட்சிகள் மனித நாகரிகத்தின் வீழ்ச்சியைச் சொல்வதாக உணர்கிறேன்.


இன்றைய இந்திய வனத்துறையின் அனைத்து அதிகாரிகளும் காலனித்துவக் கண்ணோட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தின் மூலம் திரட்டப்பட்ட அறிவையும் மனிதகுலத்தின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். நவீனம் மற்றும் பாரம்பரியத்தை சமநிலைப்படுத்தி, இந்தக் காடுகள் உள்ள மக்களின் நலன்களையும் உரிமைகளையும் முன்னேற்றுவதன் மூலம் இந்தியாவின் வன வளத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் உண்மையிலேயே சுற்று சூழலுக்கு உகந்த (eco-friendly) மற்றும் உள்ளடக்கிய (inclusive) பங்களிப்பைச் செய்ய முடியும்.


நீங்கள் அனைவரும் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் திறமை பாராட்டுக்குரியது. ஆனால் உங்கள் உண்மையான சோதனை இப்போது தொடங்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போதெல்லாம், அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் இந்திய மக்களின் நலன்களை மனதில் வைத்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.


பூமியின் பல்லுயிர் மற்றும் இயற்கை அழகைப் பாதுகாப்பது அவசரப் பணியாகும். காடுகள் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதன் மூலம் மனித உயிர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும். எனவே, இந்திய வனத்துறை அதிகாரிகளின் பொறுப்பு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். உங்கள் சேவையில், பி.ஸ்ரீனிவாஸ், சஞ்சய் குமார் சிங், எஸ்.மணிகண்டன் போன்ற அதிகாரிகள் பணியின்போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். சுற்றுச்சூழலுக்காக ஒப்பற்ற பணிகளை ஆற்றிய இதுபோன்ற பல அதிகாரிகளை உங்கள் சேவை நாட்டுக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.


Miyawaki method- ஜப்பானைச் சேர்ந்த யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தாவரவியலாளார் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்த முறையாகும். இந்த முறை, இடைவெளி இல்லா அடார்காடு என்ற தத்துவப்படி, இந்த முறையில் ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு 'மியாவாக்கி' என்று பெயர்.

தற்போதுள்ள வன பயிற்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்களிடம், பருவநிலை மாற்றத்தின் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு பயிற்சியாளர்களின் பாடத்திட்டத்தில் தகுந்த திருத்தங்களைச் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உலகின் பல பகுதிகளில், வன வளங்களின் இழப்பு வேகமாக நிகழ்ந்து வருகிறது. காடுகளை அழிப்பது மனிதகுலத்தின் அழிவாகும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், சேதத்தை விரைவாக சரிசெய்ய முடியும். பல இடங்களில் பின்பற்றப்படும் மியாவாக்கி முறையைப் (Miyawaki method) போலவே, செயற்கை நுண்ணறிவு கருவிகள் காடு வளர்ப்புக்கு ஏற்ற பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மர இனங்களை அடையாளம் காண முடியும். அத்தகைய விருப்பங்களை மதிப்பீடு செய்து, இந்தியாவின் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.




Original article:

Share: