ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை ஏழு வெப்ப அலைகளுடன் கூடிய, இரவு வெப்பநிலை அதிகரிப்பது ஒரு புதிய கவலையாக மாறியுள்ளது.
செவ்வாயன்று, டெல்லியில் 1969-க்குப் பிறகு அதன் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இது 35.2 டிகிரி செல்சியஸை எட்டியது. ஜூன் மாதத்தின் வெப்பமான நாட்களில், டெல்லியில் ஏற்கனவே ஏழு வெப்ப அலைகள் பதிவாகியுள்ளன. இப்போது, இரவு வெப்பநிலை அதிகரிப்பது ஒரு புதிய கவலையாக உள்ளது.
இந்த மாதம், டெல்லியில் தொடர்ந்து ஆறு வெப்பமான இரவுகள் பதிவாகின. மே 12-ஆம் தேதிக்குப் பிறகு இரவில் 40 டிகிரி செல்சியஸுக்குக் குறையாமல் பகல் நேரத்தை போல அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
1969 முதல் 2024 வரையிலான அதிகபட்ச குறைந்தபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இது மே-23, 1972-ல் பதிவானது. 1969-க்கு முந்தைய பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. எனவே செவ்வாய்க்கிழமை வெப்பநிலை டெல்லியின் அதிகபட்ச வெப்பநிலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரியானாவில் உள்ள ஃபதேஹாபாத் மற்றும் மகேந்திரகர் ஆகிய இரண்டு நிலையங்களில், டெல்லியை விட காலை நேர வெப்பம் அதிகமாக இருந்தது. முறையே 35.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
‘வெப்பமான இரவு’ என்றால் என்ன?
இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின்படி, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது வெப்பமான இரவு ஆகும். இயல்பை விட 6.4 டிகிரிக்கு மேல் இருந்தால் கடுமையான வெப்பமான இரவு ஆகும். இரண்டுக்கும் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
புதன்கிழமை, டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 8 டிகிரி அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக 43.6 டிகிரி செல்சியஸ், இது இயல்பைவிட 5 டிகிரி அதிகமாகும்.
இது ஏன் கவலைக்குரியது?
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய IMD அதிகாரியின் கூற்றுப்படி, 24 மணி நேர சுழற்சியில் மிகக் குறைந்த வெப்பநிலை பொதுவாக அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அதிகாலையில் ஏற்படும்.
இந்த நேரத்தில் மட்டுமே வெப்பத்திலிருந்து நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மற்றும் வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் மழைப்பற்றாக்குறை 90% உள்ளது. மேலும் பகல்நேர வெப்பநிலை தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், மே மாதத்தின் பிற்பகுதியில் உச்ச வெப்பநிலை ஏற்பட்ட போதிலும், அதிக இரவு வெப்பநிலை காரணமாக அதிக வெப்ப பக்கவாத நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று விளக்கினார்.
"மேலும், வீடுகள் இரவில் வெளியில் இருப்பதைவிட வெப்பமாக இருக்கும். எனவே வெளியில் பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது மக்கள் திறந்த வெளியிலும், வெப்பநிலை அதிகமாக இல்லாதபோது வீட்டிற்குள்ளும் இருப்பார்கள்" என்று மருத்துவர் விளக்கினார்.
ஜூன் மாதத்தில் வெப்பநிலை உச்சநிலை குறித்து IMD இன்னும் விரிவான ஆய்வு நடத்தவில்லை. இருப்பினும், ஜூன்-1 முதல் ஜூன்-19 வரையிலான 12 நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருப்பது 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று டெல்லியில் ஜூன் மாதத்திற்கான கிடைக்கக்கூடிய தரவு காட்டுகிறது. 2018-ல், வழக்கத்திற்கு மாறாக சூடான ஜூன் இருந்தது. பத்து நாட்கள் இந்த நிலை தொடர்ந்தது. இந்த ஆண்டின் சாதாரண குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஆகும்.
பல ஆய்வுகள் நகர வெப்பநிலை அதிகரிப்பதற்கு 'நகர்ப்புற வெப்பத் தீவு (‘urban heat island’) விளைவு காரணம் என்று கூறுகின்றன. அடர்த்தியான கட்டுமானம் மற்றும் குறைந்த பசுமையான இடங்களைக் கொண்ட அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் இந்த விளைவு ஏற்படுகிறது. அங்கு அதிக திறந்த மற்றும் பசுமையான பகுதிகளுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
டெல்லியில், பல ஆண்டுகளாக, ரிட்ஜ் (Ridge) மற்றும் பசுமையான லுட்யன்ஸ் (greener Lutyens) டெல்லிக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிகளைவிட குறைவான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக கான்கிரீட் செறிவு இருப்பதால், வெப்பம் சிக்கி, சில கிலோ மீட்டர்களுக்குள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment (CSE)) சமீபத்திய ஆய்வில், 2001 மற்றும் 2010-க்கு இடையில் இருந்ததைவிட இப்போது நகரங்கள் மெதுவான விகிதத்தில் குளிர்ந்து வருகின்றன. இது ஒட்டுமொத்த வெப்பமான இரவுகளுக்கு வழிவகுக்கிறது. ‘இந்திய நகரங்களில் உள்ள நகர்ப்புற வெப்ப அழுத்தத்தை குறிவிலக்கம் (Decoding) செய்தல்’ என்ற தலைப்பில், ஜனவரி 2001 முதல் ஏப்ரல் 2024 வரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து தரவுகளை ஆய்வு செய்தது.