குத்தகை விவசாயிகளையும் (tenant farmers) சேர்த்துக் கொள்ள மாநிலங்கள் முன்வர வேண்டும்.
மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த ஆவணம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-Kisan)) திட்டத்தின் 17-வது தவணையை வழங்க அங்கீகாரம் அளித்தது. இந்த தவணை 9.26 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், சுமார் ரூ .20,000 கோடி பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
திட்டம் பயனுள்ளதாக இருக்க, தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் மேம்பாடு அவசியம். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் துல்லியமானத் தரவு (PM-Kisan) வலைத்தளத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இன்று வரை, 17 தவணைகள் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ.3.24 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்துவது சவாலாக உள்ளது. 2015-ஆம் ஆண்டு விவசாய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 14.5 கோடி விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் 85 சதவீதம் (12.5 கோடி) இரண்டு ஹெக்டேருக்கும் குறைவானவை. அனைத்து 14.5 கோடி விவசாய குடும்பங்களும் ஆண்டுக்கு ₹ 6,000 பெற வேண்டும் என்று அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதற்கு ₹ 87,000 கோடி நிதி தேவைப்படுகிறது. 12.5 கோடி சிறு மற்றும் குறு நிலங்களுக்கு ரூ.75,000 கோடி தேவைப்படுகிறது.
பல ஆண்டுகளாக, பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் (PM-Kisan) திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரண்டும் குறைந்துள்ளன. 6 மற்றும் 11-வது தவணைகளுக்கு இடையில் 10.45 கோடி பயனாளிகளை எட்டியபிறகு, 12-வது தவணையில் இந்த எண்ணிக்கை எட்டு கோடியாகக் குறைந்தது. இந்த குறைவு போதிய கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக பல தகுதியான விவசாயிகள் நன்மைகளைப் பெறாமல் போகலாம். 2019-20-ல் பட்ஜெட் ஒதுக்கீடு ₹75,000 கோடியிலிருந்து 2022-23-ல் ₹58,254 கோடியாகக் குறைக்கப்பட்டது.
பயனாளிகளின் வீழ்ச்சி மற்றும் குறைக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகள் விவசாயிகளை ஆதரிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. இன்றுவரை, PM-Kisan திட்டத்தின் உண்மையான பயனாளிகள் இரண்டு ஹெக்டேர் வரை வைத்திருக்கும் 12.5 கோடி விவசாயிகளில் 60 சதவீதத்தை தாண்டவில்லை. திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய "விவசாயிகள்" என்பதற்கான துல்லியமான வரையறையின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தகுதியை தெளிவாக வரையறுத்து அதற்கேற்ப திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
விவசாயிகளுக்கு உயிர்நாடி
விவசாயத்தில் உள்ள இடுபொருள் மானியங்கள் மண் சிதைவு மற்றும் நீர் மாசு போன்றவை சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நிலைத்தன்மையை மேம்படுத்த, விலை அடிப்படையிலான கொள்கைகளில் இருந்து நேரடி வருமான ஆதரவுக்கு மாறுவது முக்கியம்.
வருமான ஆதரவுக் கொள்கைகள் குடும்பங்கள் லாபகரமான கால்நடை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வழிவகுப்பதாக வெளிநாடுகளில் உள்ள ஆய்வுகள் காட்டுகின்றன. அவை பெறுநரின் நிதி நிலைத்தன்மை, கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் உற்பத்தித் தொடர்பான முடிவுகளை மேம்படுத்துகின்றன.
இந்தியாவில், உழவர்கள் PM-Kisan நன்மைகளை சரியான விவசாய பருவத்தில் பெறும்போது, அவர்கள் விவசாயத்தில் அதிக முதலீடு செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, விவசாய பணிசெய்யத காலத்தில் கொடுப்பனவுகள் பெரும்பாலும் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே செலவு செய்யும் செயல்முறைகளும் கணிசமாக வேறுபடுகிறது. PM-Kisan-ன் தாக்கத்தை மேம்படுத்த, விவசாயிகளின் பருவகாலத் தேவைகளின் அடிப்படையில் பணம் செலுத்தும் நேரத்தை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். மேலும், பல மாநிலங்கள் விரிவான நிலப் பதிவு தரவுத்தளங்களை பராமரிப்பதில் சிரமப்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற செயல்பாடுகளைத் தடுக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க, குத்தகை விவசாயிகளையும் சேர்த்து, PM-Kisan திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும். மாநிலங்கள் நிலப் பதிவேடுகளுக்கான பிரத்யேக இணையதளங்களை உருவாக்கி, திட்டத்திற்கு நிதிப் பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்த முழுமையான அணுகுமுறை, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயனடைவதை உறுதிசெய்து, விவசாய நிலைத்தன்மை மற்றும் விவசாயிகளின் நலனை ஆதரிக்கும்.
கட்டுரையாளர் உதவிப் பேராசிரியர், என்ஐடிடிஇ ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூர்.