அரசு ஊழியர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) செயல்பாடுகள் : அதிகாரப்பூர்வ விதிகள் என்ன சொல்கின்றன? -ஷ்யாம்லால் யாதவ்

 சமீபத்தில், ஒன்றிய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)), அரசுப் பணியாளர்கள்  நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல்,  ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்  என்ற உத்தரவை வெளியிட்டது.


அதிகாரிகள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்ற தடையை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் RSS அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. 


ஜூலை 9 அன்று, ஒன்றிய அரசின் மனித வளத்தை நிர்வகிக்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), 1966, 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளின் விதிகளை ஆய்வு  செய்த பின்னர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) பற்றிய குறிப்பை நீக்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு  அறிவித்தது. நவம்பர் 30, 1966, ஜூலை 25, 1970 மற்றும் அக்டோபர் 28, 1980-ல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ குறிப்புகள் நீக்கப்பட உள்ளன.  


நவம்பர் 30, 1966-அன்று, உள்துறை அமைச்சகம் (இது 1998 வரை DoPT-ன் ஒரு பகுதியாக இருந்தது) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது: "அரசு ஊழியர்கள் உறுப்பினர்கர்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்கலாமா என்பது பற்றி கேள்வி எழுந்தது.  இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணிக்கிறது. அவற்றில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் ஒன்றிய அரசு  குடிமை  சேவைகள் (நடத்தை) விதிகள், 1964 (Central Civil Services (Conduct) Rules, 1964) -ன் விதி 5(1) ஐ மீறுவார்கள். 


இந்த அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கும் எந்த ஒரு அரசு ஊழியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1964 விதிகளின் 5-வது விதி அரசியல் மற்றும் தேர்தல்களில் பங்கேற்பதைக் குறிக்கிறது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினராகவோ ​​அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிக்கவோ முடியாது. அரசு ஊழியர் எந்த வகையிலும் அரசியல் இயக்கங்களில் பங்கேற்க முடியாது என்று விதி 5(1) குறிப்பிடுகிறது. 


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளுக்குப் பொருந்தும் அகில இந்திய சேவைகள் (நடத்தை) விதிகள், 1968 (All India Services (Conduct) Rules, 1968), விதி 5(1) போன்ற ஒரு விதி உள்ளது.  ஜூலை-25, 1970-ல், உள்துறை அமைச்சகம் நவம்பர் 30, 1966 முதல் அறிவுறுத்தல்களை மீறும் அரசாங்க ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. அவசரநிலையின் போது (1975-77), உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.(RSS), ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami), ஆனந்த மார்க்(Ananda Marg), சி.பி.ஐ-எம்.எல்.(CPI-ML), ஆகியவற்றின் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன. 


அக்டோபர் 28, 1980-அன்று, இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் போது, ​​அரசு ஊழியர்கள் மதச்சார்பற்ற நபர்களாக இருப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டது. அவர்களிடையே உள்ள வகுப்புவாத உணர்வுகள் மற்றும் சார்புகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.   இந்த சுற்றறிக்கை 1966 மற்றும் 1970-ல் இருந்து வந்த உத்தரவுகளை வலுப்படுத்தியது: அரசு மற்றும் அதன் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் வகுப்புவாத அடிப்படையில் மனுக்கள் அல்லது பிரதிநிதித்துவங்களை ஏற்கக்கூடாது. அவர்கள் எந்த வகுப்புவாத அமைப்பையும் ஆதரிக்கக் கூடாது. இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பது கடுமையான தவறான செயலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

  

1966-க்கு முன்பு இருந்த நிலை என்ன? 


ஒன்றிய குடிமை பணிகள் (நடத்தை) விதிகள், 1964 (Central Civil Services (Conduct) Rules, 1964) மற்றும் அகில இந்திய சேவைகள் (நடத்தை) விதிகள், 1968 (All India Services (Conduct) Rules, 1968)-க்கு முன்பு, சர்தார் வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது 1949-ல் நிறுவப்பட்ட அரசு ஊழியர் நடத்தை விதிகள் இருந்தன. 1949-ஆம் ஆண்டின் 23-ஆம் விதி 1964 மற்றும் 1968 ஆம் ஆண்டின் 5-ஆம் விதியைப் போலவே இருந்தது. இது அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடை செய்கிறது. காலப்போக்கில் கோரிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின்  பண்புகள் அவ்வப்போது தெளிவுபடுத்தப்பட்டன. 


இந்த விதிகளை மீறினால் என்ன நடக்கும்?


"ஒரு கட்சி ஒரு அரசியல் கட்சியா அல்லது எந்த அமைப்பு அரசியலில் பங்கேற்கிறதா என்பது பற்றி ஏதேனும் கேள்வி இருந்தால், இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் முடிவே இறுதியானது." என்று 1964 விதிகளின் விதி 5(3) கூறுகிறது.


"ஒரு இயக்கம் அல்லது செயல்பாடு இந்த விதியின் கீழ் வருமா என்பது குறித்து ஏதேனும் கேள்வி இருந்தால், அது முடிவெடுப்பதற்காக அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும்." என்று அகில இந்திய சேவைகள் (நடத்தை) விதிகள், 1968-ன் விதி 5(3) கூறுகிறது. 


சில சந்தர்ப்பங்களில், ஒரு அதிகாரி விதியை மீறியிருந்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். இருப்பினும், RSS அமைப்பில் வெளிப்படையான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் அந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவரை கண்டறிவது சவாலானது.  


அப்படியானால் ஜூலை 9 சுற்றறிக்கையின் அர்த்தம் என்ன?


RSS இப்போது அரசியல் சார்பற்ற அமைப்பாகக் கருதப்பட்டு, நடத்தை விதிகளின் விதி 5(1)ன் கீழ் எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு  ஆளாகாமல்  ஒன்றிய அரசு ஊழியர்கள் அதன் செயல்பாடுகளில் பங்கேற்க அனுமதிக்கிறது. 


எவ்வாறாயினும், 1966, 1970 மற்றும் 1980 சுற்றறிக்கைகள் ஜமாத்-இ-இஸ்லாமியை அரசியல் தன்மையுடைய (“political” nature) இயக்கம் என்று முத்திரை குத்தினாலும், ஜூலை-9 சுற்றறிக்கை RSS-இல் இருந்து இந்த முத்திரையை மட்டுமே நீக்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஜமாத்தே இஸ்லாமி இன்னும் ஒரு அரசியல் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. 


இதற்கு முன் எந்த அரசாவது ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் முத்திரையை அகற்றியிருக்கிறதா?


மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சுற்றறிக்கைகளும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் வெளியிடப்பட்டவை. இருப்பினும், அடுத்தடுத்து வந்த அரசுகள் RSS இன் மீது அதே நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகின்றன. 


1980-கள் மற்றும் 1990-கள் முழுவதும், ராஜீவ் காந்தி, பி வி நரசிம்ம ராவ் மற்றும் தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய முன்னணி அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில், 1966, 1970 மற்றும் 1980 சுற்றறிக்கைகள் நடைமுறையில் இருந்தன. 1998 முதல் 2004 வரை RSS உடன் தொடர்புடைய அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்திலும் இந்தக் கொள்கை தொடர்ந்தது.  பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் 2014 முதல் 2024 ஜூலை 9 வரை இந்தக் கொள்கை மாறாமல் இருந்தது. 


இந்த விதிகள் மீதான RSS அமைப்பின் அணுகுமுறை என்ன?


அரசியல் சார்பற்ற மற்றும் கலாச்சார அமைப்பாக தன்னை கூறிக்கொள்ளும் RSS அமைப்பு, இந்த விதிகளால் தனது செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது.


டிசம்பர் 1, 2014-அன்று, அரசு ஊழியர்கள் மீதான இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு மோடி அரசைக் கோருவீர்களா என்று கேட்டதற்கு, "நாங்கள் அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் வேலைக்கு அத்தகைய கட்டுப்பாடுகளால் தடை இல்லை."  என்று சர்சங்கசாலக் மோகன் பகவத் பதிலளித்தார்.


ஜூலை 9 சுற்றறிக்கை மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா?


இந்த சுற்றறிக்கை  ஒன்றிய  அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கான சொந்த நடத்தை விதிகள் மற்றும் தேவைக்கேற்ப அறிவுறுத்தல்களை வழங்குகின்றன. சில மாநில அரசுகளின் நிலைப்பாடு ஆட்சியில் இருக்கும் கட்சியைப் பொறுத்து மாறுபடும்.


உதாரணமாக, ஹிமாச்சலப் பிரதேசத்தில் பி கே துமாலின் பிஜேபி அரசாங்கம் ஜனவரி 24, 2008 அன்று அதன் ஊழியர்கள் RSS அமைப்பின்  நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது.  மத்தியப் பிரதேசத்தில், திக்விஜய சிங்கின் காங்கிரஸ் அரசாங்கம் 2003-ல் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக அரசாங்கம் ஆகஸ்ட் 21, 2006 அன்று, இந்தக் கட்டுப்பாடுகள் RSS நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியது. பிப்ரவரி 2015-ல், சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, அரசு ஊழியர்கள் RSS அமைப்பின்  நடவடிக்கைகளில் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை என்று சுற்றறிக்கை வெளியிட்டது.



Original article:

Share: