தென்னிந்தியாவின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவின் விவசாய நிலங்களில் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். விவசாய தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவசாயத்தில் இருப்பது தொழிற்சங்கங்கள் அல்லது உள்ளூர் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை மற்றும் பிற துறைகளைப் போல விவசாயத் துறையில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை.
இளைய தலைமுறையினர் விவசாயத்திலிருந்து விலகிச் செல்வதால், டெல்டாவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
"பயிர்களைப் பராமரிக்க தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் கடினமாகி வருகிறது", என்று மயிலாடுதுறை மாவட்டம் பரசநல்லூரைச் சேர்ந்த விவசாயி ஆர்.ஆனந்தன் கூறுகிறார்.
இந்த இடைவெளியை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சில இடங்களில் நிரப்பி வருகின்றனர். இவர்கள் விவசாயக் காலங்களில் மாநிலம் முழுவதும் குழுக்களாக செல்கின்றனர். இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் டெல்டா பகுதியில் நெல் நடவு அல்லது அறுவடைக்கு பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். இவர்கள், நெல் நடவு மற்றும் பிற விவசாய நடவடிக்கைகளில் திறமையானவர்கள். உள்ளுர் ஆட்களை விட குறைந்த செலவில் விரைவான வேலை கிடைப்பதால் விவசாயிகள் அவர்களை நாடுகிறார்கள்.
"கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகிறோம்", என்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட வங்காளத் தொழிலாளி தேவா மொண்டல் கூறுகிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளி தேவா என்பவர் கூறுகையில், நாங்கள் குழுக்களாக காலை முதல் மாலை வரை வேலை செய்கிறோம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து ஏக்கரில் நெல் நாற்றுகளை நடவு செய்கிறோம். "13 தொழிலாளர்கள் கொண்ட குழுவாக ஒரு ஏக்கர் நடவு செய்ய நாங்கள் ₹4,500 ரூபாய் முதல் ₹5,000 ரூபாய் வரை வருமானம் பெறுகிறோம். அதே நேரத்தில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதே வேலைக்கு ஒரு நாளைக்கு ₹600 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளில் அதிக பரப்பளவில் நாங்கள் வேலை செய்வதன் மூலம், நாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.
“உள்ளூரில் கூலி ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் எங்களைக் கூலிக்கு அமர்த்தும் விவசாயிகள் கூறுகின்றனர். இருப்பினும், டெல்டாவில் இது இன்னும் பரவலான நிகழ்வு அல்ல,”என்று அவர் மேலும் கூறினார்.
தொழிலாளர் சங்கங்களும் இதனை ஒப்புக்கொள்கின்றன. "டெல்டா மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்துவது தமிழகத்தின் வட மாவட்டங்களைப் போல ஆபத்தானது அல்ல. பல விவசாயிகள் அரசு ஆதரவு பெற்ற பண்ணை இயந்திரமயமாக்கலை தேர்வு செய்கிறார்கள். மேலும், உள்ளூர் இளைஞர்கள் நிலையான வருமானம் உள்ள வேலைகளைத் தேர்வு செய்கின்றனர். இந்த காரணிகள் விவசாய வயல்களில் உள்ளூர் தொழிலாளர்களின் வீழ்ச்சிக்கு பங்களிக்கின்றன" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவருமான வி.ஜீவகுமார் குறிப்பிடுகிறார்.
டெல்டாவின் சில பகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இந்த பகுதிகள் பருவக்காலம் இல்லாத காலங்களிலும் கணிசமான வாய்ப்புகளை வழங்குகின்றன என்று கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தாராசுரத்தில் கணிசமான நிலம் வைத்திருக்கும் முற்போக்கு விவசாயி ஜி.சேதுராமன் கூறுகிறார்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.பாஸ்கர் கூறுகையில், "பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொதுவாக கணிசமான தொழிலாளர் மக்கள் தொகை உள்ள பகுதிகளைத் தவிர்த்து, தொழிலாளர் பற்றாக்குறை உள்ள நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களில் கவனம் செலுத்துகிறார்கள். பிற மாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்களிடையே இதுவரை எந்த மோதலும் இல்லை என்றாலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமான ஊதியத்தை உறுதி செய்வதன் மூலம் எழும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.
சமூக-பொருளாதார மாற்றங்கள் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பங்களிக்கின்றன. "முன்பு, 8 அல்லது 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விவசாய வேலைகளை மேற்கொண்டனர், ஆனால் இப்போது அவர்கள் நகரங்களில் வேலை செய்ய விரும்புகிறார்கள். நடுத்தர வயது மற்றும் வயதானவர்கள் முக்கியமாக மாநிலத்தின் பல பகுதிகளில் பண்ணை தொழிலாளர்களாக (farm workforce) உள்ளனர். வெளியில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாதது" என்கிறார் திருச்சி தமிழ்நாடு வாழ்வுரிமைகள் சங்க மாவட்டச் செயலாளர் அயலை சிவசூரியன்.
தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சில விவசாயிகள் குற்றம் சாட்டினாலும், அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. "கடந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 100 நாட்களுக்கு பதிலாக, பெரும்பாலான பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் 40 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. இந்த வீழ்ச்சி பல ஆண்டுகளாக சீராக உள்ளது" என்று திரு சிவசூரியன் கூறுகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சாகுபடி அல்லாத பருவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்று திரு சேதுராமன் வாதிடுகிறார். டெல்டா பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் நீண்ட காலமாக உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணியமர்த்தலில் முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்துள்ளன. விவசாயிகள், தங்கள் நில உடைமைகளின் அளவைப் பொருட்படுத்தாமல், மண்ணை காற்றோட்டமாக்குவது முதல் அறுவடை செய்வது வரை அனைத்து சாகுபடி நடவடிக்கைகளுக்கும் உள்ளூர் தொழிலாளர்களை நம்பியிருந்தனர். இயந்திரமயமாக்கல் மற்றும் வெளியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விவசாயத் தொழிலாளர் சங்கங்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு இருந்தது. "நிலைமையைக் கட்டுப்படுத்திய உள்ளூர் தொழிலாளர்களை விவசாயிகள் விரட்ட வேண்டியிருந்தது", என்று மன்னார்குடிக்கு அருகிலுள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த எல்.என்.ரெங்கநாதன் கூறுகிறார்.
ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) வருகை இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நிலைமையை மாற்றியது. பண்ணை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் நன்மைகளை அனுபவித்தனர், இது உள்ளூர் விவசாய நடவடிக்கைகளில் தொழிலாளர் சங்கங்களின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தியது. இது, விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாட்டை படிப்படியாக அதிகரிக்க அனுமதித்தது என்கிறார் அவர்.
டெல்டாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தொடர்ந்து போராடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பரசநல்லூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த 68 வயதான இந்திரா ஜீவானந்தம் போன்ற பலரும் வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். சம்பா நெல் சாகுபடி பருவத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு காலத்தில் 750 பேராக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 75 ஆக குறைந்துவிட்டது, அவர்களில் பெரும்பாலோர் வயதான பெண்கள்.
விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு சாதிய அமைப்புடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பொதுவாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சில நேரங்களில் மோதலுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், தமிழ்நாட்டின் மொத்த கல்வி சேர்க்கை விகிதம் 47% என்பது நாட்டிலேயே மிக உயர்ந்தது. இந்நிலை, கிட்டத்தட்ட பாதி மக்கள் உயர் கல்வியைத் தொடர்வதையும், விவசாயத் தொழில்களுக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதையும் காட்டுகிறது.