தனியார் துறை வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கும் கர்நாடக மசோதாவைப் போன்ற ஒரு சட்டம் கேரளாவில் செயல்படுத்த மிகவும் கடினமாக இருக்கும் மற்றும் மாநிலத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். கடும் எதிர்ப்பு காரணமாக கர்நாடக மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (manual labourers) கூட இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அவர்கள் தார்மீக மற்றும் சட்ட அடிப்படையில் அதை எதிர்க்கிறார்கள். "பிராந்தியவாதம் என்பது நாட்டில் எங்கும் வேலை செய்வதற்கான ஒவ்வொரு இந்தியரின் அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது. நல்ல வாய்ப்புகளுக்காக உலகம் முழுவதும் பயணம் செய்த மலையாளிகள் எப்படி புலம்பெயர்தலை எதிர்க்க முடியும்? புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் வேலைகளை எடுத்துக் கொள்ளவில்லை," என்கிறார் எர்ணாகுளத்தின் காக்காடில் தலைச்சுமை சுமை தூக்கும் தொழிலாளியும், தலைச்சுமை மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினருமான 57 வயதான எம்.ஏ.மோகனன்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துதல்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரோதத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ராஜேந்தர் நாயக், எர்ணாகுளத்தின் கிராமப்புறத்தின் பெரும்பாவூரில் உள்ள ஒட்டு பலகை (plywood industry) தொழிலில் பணிபுரிகிறார். உள்ளூர் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக வாதிடும் முற்போக்கு தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் மேத்யூ இதனை ஒப்புக்கொள்கிறார். "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளூர் சமூகத்தால் ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கமாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பு பெருநிறுவன இலாபங்களுக்கு இன்றியமையாதது என்பதால், அவர்களை வெளியேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படவில்லை” என்கிறார் அவர்.
கேரள மாநில திட்டமிடல் வாரியத்தின் சமூக சேவைப் பிரிவின் 2022-ஆம் ஆண்டின் பணிக்குழு அறிக்கையில், 2017-18 ஆம் ஆண்டில், கேரளாவில் 31 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 21 லட்சம் பேர் தற்காலிக தொழிலாளர்கள், மீதமுள்ளவர்கள் மாநிலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தனர். நீண்டகால புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 5% பேர் கேரளாவில் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜஜாதி கேசரி பரிதா மற்றும் கே.ரவி ராமன் ஆகியோரால் 2021-ஆம் ஆண்டு திட்டமிடல் வாரியம் வழங்கிய 'கேரளாவில் இடம்பெயர்வு, முறைசாரா வேலைவாய்ப்பு மற்றும் நகரமயமாக்கல்' (In-migration, Informal Employment and Urbanisation in Kerala’) என்ற ஆய்வில், கேரளாவின் மொத்த பணியாளர்களில் புலம்பெயர்ந்தோர் சுமார் 26.3% உள்ளனர் என்று கண்டறியப்பட்டது. இரண்டு மாவட்டங்கள் ஏற்கனவே எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவுசெய்து வரும் வயதான சமுதாயமாக கேரளா இருப்பதையும், மாநிலத்திலிருந்து இளைஞர்கள் பெரிய அளவில் இடம்பெயர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு, திறமையற்ற மற்றும் அரைகுறையான வேலைகளுக்கான ஆட்கள் கிடைப்பதில் பெரும் இடைவெளி உள்ளது.
இது ஒரு வித்தியாசமான விசித்திரமான சூழ்நிலை. வெளிநாட்டில் இருந்து திரும்பிய கேரளாக்காரர்கள் கூட, திறமையற்ற வேலைகளைச் தங்கள் மாநிலத்தில் அதைச் செய்யத் தயாராக இல்லை என்கிறார் சமூக விஞ்ஞானி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையில் நிபுணரான மார்ட்டின் பேட்ரிக்.
குறைந்தபட்ச ஊதியம்
கேரளாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இது அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் சம்பாதிப்பதை விட அதிகம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த கட்டணத்துடன் கூடிய விடுதி வசதிகளையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் ஒரு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஒன்பது குறைந்தபட்ச ஊதிய அறிவிப்புகள் உள்ளன என்று இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஆர்.சந்திரசேகரன் கூறுகிறார். ஏனென்றால், ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்த பல்வேறு நிர்வாகங்கள், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டன. "ஆலோசனைகளை ஆரம்பக் கட்டத்தில் ஒப்புதல் அளித்து, பின்னர் அதன் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தாமல் செய்த சம்பந்தப்பட்ட தரப்பினரின் இரட்டை நிலைப்பாடு குறித்து, மாநில சட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தை நம்ப வைக்கத் தவறிவிட்டனர்," என்று கூறுகிறார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கேரளாவை நம்பியிருப்பதை விட கேரளா புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ளது என்று இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் பினாய் பீட்டர் கூறுகிறார். "அவர்கள் வேறு இடத்திற்கு திரும்பினால், மாநிலம் ஒரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்," என்றும் அவர் கூறுகிறார். ஏற்கனவே, கட்டுமானம், கடல் மீன்பிடித்தல், ஒட்டு பலகை மற்றும் விருந்தோம்பல் (hospitality) போன்ற பாரம்பரிய மற்றும் பெரும்பாலும் முறைசாரா துறைகள் முற்றிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.
"உண்மையில், புலம்பெயர்ந்தோர் வருகை உள்ளூர் தொழிலாளர்களின் வேலைகளை அச்சுறுத்தும் சூழ்நிலையை கேரள அரசு எதிர்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, திறமையற்ற தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளது. மறுபுறம், தனியார் துறைகளில் வேலைகளை ஒதுக்குவது தொழில்கள் வெளியேறும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, "என்று கூறுகிறார்.
முன்னணி பிளைவுட் உற்பத்தியாளரான முஜீப் ரஹ்மான், பிளைவுட் தொழிற்சாலைகளில் சுமார் 95% தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறுகிறார். அவர்களுக்கு பதிலாக சரியான திறன்களைக் கொண்ட உள்ளூர் பணியாளர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று அவர் கூறுகிறார்.
கண்ணியமான சூழல்
தேசிய சுகாதார இயக்கத்தின் இணைப்புப் பணியாளராக உள்ள சுப்ரியா தேப்நாத் என்பவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சில உள்ளூர்வாசிகளின் அலட்சியத்தால் அவர்கள் தொந்தரவு செய்வதாக கூறுகிறார். "வேலை இல்லாமல் இருப்பது புலம்பெயர்ந்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும், குறிப்பாக செங்கல் சூளைகள் போன்ற பருவகால தொழில்களில். மழைக்காலத்தில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் முதலாளிகளிடமிருந்து எந்த ஆதரவையும் பெறவில்லை மற்றும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கண்ணியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை சூழலை அரசாங்கம் வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க தங்குமிடங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தேப்நாத் வலியுறுத்திகிறார்.