மருத்துவ மாணவர்களின் மனநலம் குறித்து ஆய்வு செய்ய ஒரு பணிக்குழுவை உருவாக்குவது சிறந்த முடிவாகும். எவ்வாறாயினும், மருத்துவ மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 122 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால், மருத்துவ மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்காக தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது. ஆணையத்தின் இணைய வழி கணக்கெடுப்பில் 27.8% இளங்கலை மாணவர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், முதுகலை மாணவர்களில் 31.3% பேருக்கு தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது விரிவான மனநலக் கொள்கையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
2015-16 தேசிய மனநலக் கணக்கெடுப்பு (National Mental Health Survey) 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 10.6% பேருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாகக் காட்டுகிறது. இதில் 30-49 வயதுடைய 16% பேர் உள்ளனர். 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1% பேர் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருப்பதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் 80% தீவிர சிகிச்சை இடைவெளி உள்ளது, மனநலப் பாதுகாப்புக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
கொள்கை வகுப்பாளர்களுக்கு மனநலம் குறைந்த முன்னுரிமையாக உள்ளது. 93,000 கோடிக்கு மேல் தேவைப்பட்ட போதிலும், ஒன்றிய அரசு 2019-ல் ரூ. 600 கோடி மட்டுமே ஒதுக்கியது. மேலும், சமீபத்திய பட்ஜெட்டில் ரூ. 1,000 கோடி, இது சுகாதார பட்ஜெட்டில் 1%-க்கும் குறைவாக உள்ளது. இதில், 93% பெரிய நிறுவனங்களுக்கு, சமூகத் திட்டங்களுக்கு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2.91 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
மன ஆரோக்கியத்தில் குறைவாக கவனம் செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பெரிய பிரச்சினை எப்படி, எப்போது தலையிடுவது என்பது பற்றிய அறிவு இடைவெளி உள்ளது. 2014-ஆம் ஆண்டின் தேசிய மனநலக் கொள்கை (National Mental Health Policy) மற்றும் 2017 ஆம் ஆண்டின் மனநலச் சட்டம் (Mental Health Act) ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதையும், கண்ணியமான சிகிச்சையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தக் கொள்கைகளை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பது குறித்து இன்னும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவின் கொள்கை உருவாக்கம் பெரும்பாலும் என்ன செய்ய வேண்டும் மற்றும் சாத்தியமானது ஆகியவற்றுக்கு இடையே போராடுகிறது. சவால்களைப் புரிந்துகொள்வது மற்றும் அனைவரையும் ஒன்றிணைப்பது அவசியம். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (National Aids Control Organisation (NACO)) 20 தொழில்நுட்ப வளக் குழுக்களையும் 250 பிரதிநிதிகளையும் பயன்படுத்தி (HIV-AIDS)-க்கான உத்திகளை உருவாக்கி செயல்படுத்தியது. இந்த அணுகுமுறையின் படிப்பினைகளில் கண்காணிப்பில் இருந்து ஆதாரங்களைப் பயன்படுத்துதல், வெவ்வேறு விருப்பங்களை மாதிரியாக்குதல், களங்கத்தை அகற்றுதல் மற்றும் சமூகத் தலைவர்களை ஈடுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.
மன ஆரோக்கியத்திற்கும் இதே போன்ற அணுகுமுறை தேவை. பல்வேறு துறைகளில் இருந்து அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் பெரும்பாலும் வறுமை, சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு போன்ற சமூகப் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன. அவை மருத்துவ சிகிச்சைகளால் மட்டுமே முழுமையாக தீர்க்கப்பட முடியாது.
மனநலப் பாதுகாப்பு குறித்த உயர்தர ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் தமிழ்நாட்டின் பனியன் தனியார் தொண்டு நிறுவனம், கோவாவில் உள்ள சங்கத் தனியார் தொண்டு நிறுவனம், புனேவில் உள்ள மனநல சட்டம் மற்றும் கொள்கைக்கான மையம் போன்ற குழுக்களிடமிருந்து தரவுகள் பெறப்படுகின்றன. அவர்கள் குறுகிய தங்குமிடங்கள், அவசரகால பராமரிப்பு மையங்கள் மற்றும் பியர் தலைமையிலான திட்டங்கள் (peer leader-led interventions) போன்ற உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள ’பனியன்’ (Banyan) தனியார் தொண்டு நிறுவனம் தனது ’மீண்டும் வீடு’ (Home Again) என்ற திட்டத்தின் மூலம் மனநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 6 கோடி வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவுகிறது. இந்தத் திட்டம், விழிப்புணர்வு, மீட்பு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் குடும்பத்துடன் மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகிய ஐந்து நிலைகளை உள்ளடக்கியது. முக்கியமாக சிகிச்சையில் கவனம் செலுத்தும் பொதுக் கொள்கைகளைப் போல் இல்லாமல், சிகிச்சைக்குப் பிறகு சமூகம் மற்றும் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு சமூக திறன்களை வளர்க்கவும் மக்களுக்கு உதவுகிறது.
அரசாங்கம் மனநலத்திற்கு பாதுகாப்பை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் குறைந்த விலையில், சமூகம் சார்ந்த தீர்வுகளை உருவாக்க வேண்டும். மனநலக் கொள்கை நியாயமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (National Aids Control Organisation (NACO)) போன்ற ஒரு சுயாதீன நிறுவனம், நிதி மற்றும் வளங்களைச் சேகரிக்கவும், நிறுவன மற்றும் சமூகப் பராமரிப்பை இணைக்கவும், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை விரிவுபடுத்தவும் உதவும். மருத்துவ மாணவர்களின் மனநலம் குறித்து ஆய்வு செய்ய ஒரு பணிக்குழுவை உருவாக்குவது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைவருக்குமான மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க அதிகமான விழ்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்.