இந்தியா ஒரு பராமரிப்பு சூழல் அமைப்பை (care ecosystem) உருவாக்க வேண்டும் -ராமா பாரு, பல்லவி குப்தா

 இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது   தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.


2022-ல் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கான உலகளாவிய சராசரி (female labour force participation rate (FLFPR)) 47.8% ஆக இருந்தது. 2022-23-ல் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37% ஆக இருந்தது என்று பொருளாதார ஆய்வு 2023-24 காட்டுகிறது. 2017-18ல் 23.3% ஆக இருந்தது. இருப்பினும், இந்த அதிகரிப்பில் கணக்கிடப்பட்ட பெண்களில் 37.5% பேர் "வீட்டு வணிகங்ளில் ஊதியம் பெறாத உதவியாளர்கள்". இதன் பொருள் அவர்கள் குடும்ப வணிகங்களில் ஊதியம் பெறாமல் வேலை செய்கிறார்கள். இது வழக்கமான வீட்டு வேலைகளிலிருந்து வேறுபட்டது.


பாலின சமத்துவமின்மையைக் (gender inequality) குறைக்க பொருளாதாரத்தில் பெண்களின் ஈடுபாடு முக்கியமானது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் குடும்பங்களில் பெரும்பாலான பொறுப்புகளைச் சுமப்பதுதான். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரைக் கவனித்துக்கொள்வதும் இதில் அடங்கும். இதை தவிர,  பல்வேறு வீட்டு வேலைகளையும் பெண்கள் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில், 15-64 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு நாளும் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஆண்களை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.


குழந்தைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல் (Responding to childcare needs)


தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, குழந்தை பராமரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சில மாநில அரசுகள் அங்கன்வாடி இணையதளத்தை பயன்படுத்தி ஆதரவு சேவைகளை உருவாக்குகின்றன. 2024-25 பட்ஜெட், குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் சக்சம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.0 (Poshan 2.0 program) திட்டத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவியை 3% அதிகரித்துள்ளது. சிறந்த குழந்தை பராமரிப்புக்கான கொள்கைகளை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.


சில மாநிலங்களில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு வகையான சமூகம் சார்ந்த குழந்தைகள் காப்பகங்கள் (குழந்தை பராமரிப்பு மையங்கள்) இயங்கி வருகின்றன. இந்த மையங்களை விரிவுபடுத்த முடியுமா மற்றும் தேவையான நிதி வழங்க முடியுமா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமான பெண்கள் பணிபுரிய உதவும் வகையில் அதிக குழந்தை பராமரிப்பு மையங்கள் தேவை.


குழந்தை பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது வரம்புக்குட்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்கிறார்கள். எனவே, அவர்களுக்கு வேலை செய்ய உதவ, அவர்களின் பராமரிப்பு பணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளிப்புற பராமரிப்பாளர்களுக்கான (outside caregivers) தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு நிலையான விதிகள் எதுவும் இல்லை. வீட்டுப் பணியாளர்கள் பெரும்பாலும் பயிற்சி பெறாத பராமரிப்பாளர்களாக மாறுகிறார்கள். பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வேலைவாய்ப்பு தரநிலைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை.


பொறுப்புகளை பகிர்தல் (Offloading responsibilities)


பெண்களின் பராமரிப்பு கடமைகளை குறைக்க, வீட்டு பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தேவை. இந்த அமைப்பு, நியாயமான ஊதியம் மற்றும் மரியாதையைப் பெறும் நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களால் பாதுகாப்பான, தரமான, மலிவு விலையில் பராமரிப்பை வழங்க வேண்டும்.


முதலில், வயது, வருமானம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் என்ன வகையான பராமரிப்பு சேவைகள் தேவை என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். அடுத்து, பொது, தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகள் உட்பட, பராமரிப்பு வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் நாம் அடையாளம் காண வேண்டும்.


அதிக உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக பராமரிப்பின் தேவை அதிகரித்து வருவதால், பராமரிப்புப் பணியாளர்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியவை முக்கிய கவலையாக மாறியுள்ளது. குடும்பங்கள் நேரடியாக மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பராமரிப்புப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. சில ஒழுங்கமைக்கப்பட்ட சேவைகள் தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிக்கின்றன மற்றும் வீட்டுச் செவிலியர் மற்றும் வாழ்க்கையின் இறுதிப் பராமரிப்பு உட்பட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும், தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் இல்லாமல், சேவையின் தரம் இடத்திற்கு இடம் மாறுபடும்.


தேவையான கொள்கைகளை உருவாக்குதல் (Need for policy intervention)


பராமரிப்புப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உள்ள இடைவெளியை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். வீட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு வழங்குவோர் துறை திறன் குழு, சுகாதாரத் துறை திறன் குழு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இந்தப் பயிற்சி மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கும் முக்கிய நிறுவனங்களாகும். கடின உழைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமாக தேவைப்படும் பராமரிப்பு துறைக்கு உரிய மரியாதை மற்றும் நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க அரசு புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். 


உலகப் பொருளாதார மன்றத்தின் “பராமரிப்பு பொருளாதாரத்தின் எதிர்காலம்” (‘Future of Care Economy’)  என்ற அறிக்கை மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது: பராமரிப்பு பொருளாதாரத்தால் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும். வணிகங்கள் பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்யலாம் அல்லது வேலை வாய்ப்புகளை வழங்கலாம். மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது கவனம் செலுத்துவது.

 

வாழ்க்கைப் பாதையில் பராமரிப்பு தேவைகளை உள்ளடக்கிய விரிவான கொள்கை நமக்குத் தேவை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும்.


ராமா ​​வி. பாரு, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவம் மற்றும் சமூக நலப் பேராசிரியர்; பல்லவி குப்தா  புது டெல்லி சுகாதார அமைப்பில் சிறப்பு நிபுணராக உள்ளார்



Original article:

Share: