NIRF பல்வேறு நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான ஒரு கோணல் கட்டமைப்பு -எஸ். ராஜா சேது துரை, ஆர். சீனிவாசன்

 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை (Higher Educational Institutions (HEI)) தரவரிசைப்படுத்துவதே இதன் குறிக்கோளாகும். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கான நம்பகமான தகவல் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் மற்றும் தாங்கள் சேர விரும்பும் நிறுவனங்களுக்கு இடையே உள்ள தகவல் இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு கருவியாக மக்கள் இதைப் பார்க்கிறார்கள்.


தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2020-ல் 3,771-இலிருந்து 2024-ல் 6,517 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. இது அதன் வளர்ந்து வரும் பிரபலத்தைக் காட்டுகிறது. தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மைக்காக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) நிறுவனங்களின் தரவரிசையை நம்பியுள்ளன. அவர்கள் இந்த தரவரிசைகளை தங்கள் கல்வித் தரத்திற்கான சான்றாகப் பயன்படுத்துகின்றனர். பல கல்வி நிறுவனங்கள் NIRF தரவரிசையை ஒரு முக்கிய சந்தைப்படுத்துதலுக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றன.


இருப்பினும், தரவரிசை கட்டமைப்பானது வெளிப்படையானதாக இல்லை. இது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நன்கு நிறுவப்பட்ட அரசு நிறுவனங்களின் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. இந்த முரண்பாடானது தரவரிசையின் உண்மையான நோக்கம் பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறது. தரவரிசை கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களை பலர் விமர்சிக்கிறார்கள். விமர்சனத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், சில அளவுகோல்கள் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சார்புடையவையாக உள்ளன. இந்த நிறுவனங்கள் அந்தந்த அரசாங்கங்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றுகின்றன.


உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த வேண்டியதன் அவசியம், வருங்கால மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் செயல்திறன் பற்றிய தகவல் இடைவெளியைக் குறைப்பதாகும். NIRF இந்தத் தகவல் இடைவெளியைக் குறைக்கிறதா அல்லது அதை அதிகரிக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் சில குறைபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம். மேலும் கட்டமைப்பின் வலிமையை மேம்படுத்துவதற்கு அதை மறுசீரமைப்பதற்கான சாத்தியமான மாற்றுகளை வழங்குகிறோம்.


ஒரு தகவல் கருவியாக தரவரிசைப்படுத்துதல்


தரவரிசை முறையானது நிறுவனங்களை சமமான அடிப்படையில் ஒப்பிடும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். நிறுவன அமைப்பு, நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்ட அமைப்புகளுடன், மிகவும் வேறுபட்ட நிறுவனங்களின் செயல்திறன், பல்கலைக்கழகங்கள் போன்ற ஒரு பரந்த வகையின் கீழ் ஒப்பிடும்போது குழப்பத்தை உருவாக்குகிறது.


இந்தியாவில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் மத்திய நிதியுதவி பெறும் நிறுவனங்கள், மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்கள் மற்றும் நிறுவன அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் ஒரே மாதிரியானவை. பின்வரும் காரணங்களுக்காக ஒரே தரத்தைப் பயன்படுத்தி இந்த பல்வேறு நிறுவனங்களை ஒப்பிடுவது நியாயமற்றது.


பல தனியார் பல்கலைக்கழகங்கள் முக்கியமாக மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளன. இதற்கு மாறாக, பல அரசுப் பல்கலைக்கழகங்கள் கலை, மனிதநேயம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை வழங்குகின்றன. தனியார் நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அரசு நிறுவனங்கள், மறுபுறம், அறிவை உருவாக்குவதற்கும் ஆராய்ச்சி நடத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.


செயல்பாடுகளின் அடிப்படையில், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பெரிதும் வேறுபடுகின்றன. கட்டணங்கள், சம்பளக் கட்டமைப்புகள், ஆட்சேர்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற பல துறைகளில் தனியார் நிறுவனங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள், நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் அமைக்கப்பட்ட கடுமையான விதிகளைக் கொண்டுள்ளன. கூடுதலாக, தனியார் நிறுவனங்களில் நடக்கும் பெரும்பாலான விஷயங்கள், கல்வி அல்லது நிதி நிறுவனங்களாக இருந்தாலும், பொது ஆய்வுக்கு கிடைக்கவில்லை. 



அளவுகோல்களில் உள்ள ஆபத்துகள் 


தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) ஐந்து பரந்த அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கம் மற்றும் புலனுணர்வு ஆகியவை அடங்கும். புலனுணர்வு அளவுகோல் மதிப்பெண்ணில் 10 சதவிகிதம் ஆகும். கல்வித்துறை சார்ந்தவர்கள் மற்றும் முதலாளிகள் நிறுவனத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது பற்றிய கருத்துக்கணிப்பில் இருந்து இது முக்கியமாக வருகிறது. இந்த அளவுகோலில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது அகநிலை மற்றும் ஒரு சிறிய கணக்கெடுப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த அகநிலை அளவுகோல் (subjective criterion) அளவு செயல்திறன் மதிப்பீட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும்.


கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் ஆகியவை நிறுவனங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பார்க்கும் துணை அளவுகோலை உள்ளடக்கியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு சராசரி மூலதனம் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை அளவிடுகிறது. இருப்பினும், இந்த அளவுகோல் வருவாய் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாது. இதன் விளைவாக, அரசு நிறுவனங்களின் கட்டணக் கட்டமைப்பை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது.


தரவரிசைக் கட்டமைப்பில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அது வெவ்வேறு நிறுவனங்களில் கல்விக்கான செலவைக் கணக்கிடுவதில்லை. கல்வியின் நிதி அம்சத்தை சிறப்பாக மதிப்பீடு செய்ய, மாணவர்களுக்கான தனியார் மற்றும் சமூக செலவுகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். நிதி ஆதாரங்கள் நிறுவனங்களின் கட்டமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பாதிக்கலாம்.


ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ பயிற்சி (Research and Professional Practice) முக்கியமாக நிறுவனத்தில் இருந்து ஆராய்ச்சி வெளியீடுகளின் மேற்கோள் குறியீட்டில் கவனம் செலுத்துகிறது. மேற்கோள் குறியீட்டில் (citation index) நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. இவை ஆராய்ச்சிப் பகுதி மற்றும் பாடத்தின்  எவ்வளவு பிரபலம் என்பதைப் பொறுத்தது. இந்த மேற்கோள்களின் தரம் மற்றும் பிரபலத்தை உடைக்க இயலாது என்றாலும், அதை பாடத்தின் அடிப்படையில் தரப்படுத்தலாம். இது அனைத்து நிறுவனங்களையும் ஒப்பிட அனுமதிக்கிறது.


பட்டப்படிப்பின் நிறைவு ஒரு நிறுவனத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சதவீதத்தை அளவிடுகிறது. இருப்பினும், இது இளங்கலை மற்றும் முதுகலை நிறைவுகளுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது. முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில், மாணவர்கள் தகுந்த வேலையைக் கண்டுபிடித்த பிறகு படிப்பை விட்டு வெளியேறலாம். இது விளைவுகளை ஒப்பிடுவதை கடினமாக்குகிறது. அளவுகோலை மதிப்பிடும்போது இந்த விளைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கூடுதலாக, இந்த நடவடிக்கை தர பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில், நிறுவனங்கள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தரங்களை உயர்த்தலாம்.


பிராந்திய மற்றும் பாலின பன்முகத்தன்மையை நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கிய அளவுகோல்கள் மதிப்பிடுகின்றன. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உடல் ரீதியான சவால்கள் உள்ளவர்களை நிறுவனங்கள் எவ்வாறு உள்ளடக்குகின்றன என்பதையும் அவை அளவிடுகின்றன. இந்த அளவுகோலில் உள்ள சிக்கல் என்னவென்றால், மாநில அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் பிற மாநிலங்களில் இருந்து மாணவர்களை அனுமதிக்கும் வாய்ப்புகள் குறைவு. இந்த வரம்பு பொதுவாக அவர்களின் மதிப்பெண்களைக் குறைக்கிறது. மாறாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களிடையே பிராந்திய பன்முகத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.


கூடுதலாக, ஒரு தனியார் நிறுவனம் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு குறுக்கு மானியம் மூலம் முழுக் கட்டண தள்ளுபடியை வழங்க முடியும். ஏனெனில், அவர்களின் கட்டண அமைப்பு பொருளாதார நிலையால் மாணவர்களை வேறுபடுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கு மானியம் அளிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விகிதாச்சாரம் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 


ஒட்டுமொத்த கட்டமைப்பில், சில புதிய அளவுகோல்கள் மதிப்பீட்டில் சேர்க்கப்பட வேண்டும். முதலில், கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெரிய, பசுமையான வளாகங்களைக் கொண்ட நிறுவனங்கள், மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும்.


அதிக தகவலறிந்த தேர்வுகளை நோக்கி 


கல்வி என்பது அனுபவப்பூர்வமானது. இதன் பொருள் அதன் மதிப்பு தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. தரவரிசையில் இருந்து பகுதியளவு தகவல் மட்டுமே, மாணவர்கள் மோசமாக தேர்வு செய்யலாம்.


தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பானது (NIRF) ஒரே மாதிரியான குழுக்களில் உள்ள நிறுவனங்களை தரவரிசைப்படுத்த மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனித்துவமானது என்பதைக் காட்டும், துல்லியமான தகவலை வழங்க வேண்டும். தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) தகவல்களை தெளிவாகவும் நியாயமாகவும் வழங்க வேண்டும். இந்த வழியில், வருங்கால மாணவர்கள் தகவலறிந்த தேர்வுகளை தேர்வு செய்யலாம்.


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (All India Council for Technical Education (AICTE)) போன்ற ஒழுங்குமுறை முகமைகள் மற்றும் பிற தொழில்முறை அமைப்புகள் அங்கீகாரம் அல்லது தரவரிசை அமைப்புகளால் தகவல் இடைவெளியை சரிசெய்ய முடியாது. இந்த அமைப்புகள் தகவல் சமச்சீரற்ற தன்மையைக் குறைக்கவும், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் சந்தையை சரிசெய்யவும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஒழுங்குமுறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை தேவை. கல்வி நிறுவனங்கள் தானாக முன்வந்து பொது மதிப்பாய்வுக்காக தங்கள் செயல்பாடுகளை வெளியிட வேண்டும். இது தகவல் இடைவெளிகளைக் குறைக்கவும், மாணவர்கள் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ளவும் உதவும்.


எஸ்.ராஜா சேது துரை, துபாய், பிட்ஸ்-பிலானியில் பேராசிரியராக உள்ளார். ஆர். சீனிவாசன், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share: