பிரிக்ஸ் பயணம் : மாற்றத்தின்போது வலிமை பெறுதல் -ராஜீவ் பாட்டியா

 அதிக உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது இந்த குழுவின் செல்வாக்கை உயர்த்தும். அனைவரும் தற்போது இந்த கருத்தை ஏற்கத் தொடங்கியுள்ளனர்.

 

ஒரு வருடத்தில் நிறைய மாறிவிட்டது. 2023-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இணையதள காணொளி காட்சி வழியாக கூட்டத்தில் கலந்து கொண்டார். உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  (International Criminal Court (ICC)) கைது உத்தரவு காரணமாக புடினுக்கு தூதரக விலக்கு அளிக்க தென்னாப்பிரிக்கா முடிவு செய்தது. இந்த ஆண்டு, உச்சிமாநாட்டின் தொகுப்பாளராகவும், தலைவராகவும், புடின் முன்னிலை வகித்தார். மூன்று நாள் உச்சிமாநாடு உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களில் இருந்து கவனத்தைத் திருப்பியது.


உயிர்வாழ்தல் மற்றும் புத்துணர்ச்சி


அக்டோபர் 22-24, 2024 வரை ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற உச்சிமாநாடு, 2009-ல் இந்த உச்சி மாநாடுகள் தொடங்கியதிலிருந்து இது 16-வது உச்சி மாநாடாகும். முதல் இரண்டு உச்சிமாநாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே இருந்தன. தென்னாப்பிரிக்கா 2011-ல் மூன்றாவது உச்சிமாநாட்டில் இணைந்து, அதன் பின்னர் பிரிக்ஸ் என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் பத்தாண்டுகளில் பிரிக்ஸ் பல வெற்றிகளைக் கண்டது. ஆனால் இரண்டாவது பத்தாண்டு சவால்களுடன் தொடங்கியது. 


முதலாவதாக, COVID-19 சீனாவிற்கு சிக்கலை உருவாக்கியது. ஜூன் 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய வீரர்கள் மோதிக்கொண்டனர். இது இந்த இரண்டு பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவை மிகவும் மோசமாக்கியது. இதற்குப் பிறகு, பிப்ரவரி 2022-ல், ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. இது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே சண்டைக்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வுகள் பிரிக்ஸ் குழுவை பலவீனப்படுத்தியது.


சவால்கள் தொடர்ந்த போதிலும், குழு வலுவாக இருந்து மீண்டும் வளர தொடங்கியது. 15-வது உச்சி மாநாட்டில், ஐந்து புதிய நாடுகளைச் சேர்க்க முடிவு செய்தனர். புதிய உறுப்பினர்களாக  சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும், 34 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விரும்புகின்றன என்று புதின் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். இது பிரிக்ஸ் வலுவடைவதைக் காட்டுகிறது. உச்சிமாநாட்டிற்குப் பிறகு, பிரிக்ஸ் "உலகளாவிய பெரும்பான்மையை" (‘Global Majority) பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ரஷ்யா கூறியது.


கசான் உச்சிமாநாட்டின் முடிவுகள் மற்றும் அதன் உலகளாவிய தாக்கத்தை மதிப்பிடும்போது இந்த மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பிரிக்ஸ் புதிய அமைப்பை உருவாக்க விரும்பவில்லை. அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தற்போதுள்ளதை சீர்திருத்தம் செய்ய பிரிக்ஸ் முயற்சிக்கிறது. பரஸ்பர மரியாதை, புரிதல், இறையாண்மை சமத்துவம், ஒற்றுமை, ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்து ஆகிய எட்டு முக்கிய மதிப்புகளை உள்ளடக்கிய "பிரிக்ஸ் உணர்வு" (‘BRICS spirit’) மூலம் குழு வழி நடத்தப்படுகிறது. அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான ஒத்துழைப்பு ஆகிய மூன்று துறைகளில் அதன் உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.


வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் குழுவாக பிரிக்ஸ் தொடங்கப்பட்டது. இப்போது இது முக்கியமாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கான (Emerging Markets and Developing Countries (EMDCs)) முக்கிய தளமாக உள்ளது. பிரிக்ஸ் என்பது உலகளாவிய வடக்கிற்கு மாறாக கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகளின் குழுவாகும். பிரிக்ஸ்க்குள் சில மேற்கத்திய எதிர்ப்புக் கருத்துக்கள் இருந்தாலும், அதன் நடுநிலையான உறுப்பினர்கள் குழுவை மேற்கத்திய நாடுகள் இல்லதாக குழுவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.


ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் குழு ஐக்கிய நாடுகள் சபையின் விரிவான சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைகளுக்கு குழு தனது ஆதரவை கவனமாகக் கூறியது. இதில் பிரிக்ஸ் உறுப்பினர்களான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஐ.நா.வில், குறிப்பாக அதன் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு பெரிய பங்கை மேற்கொள்வதற்கான ஆதரவையும் உள்ளடக்கியது. ககசான் உச்சிமாநாட்டிலும் இந்த நிலை அப்படியே தொடர்ந்தது. பெரிய பங்கை விரும்பும் மூன்று நாடுகளுக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சீனா இந்த விதியை மாற்ற விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த காரணத்தினால், சீனாவின் நிலைப்பாடு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.


மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை நீக்குவதற்கான குழுவின் அழைப்பு. இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் என்று விவரித்தது. இந்த தடைகள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்றும் மனித உரிமைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.


குழுவின் கவனம்


அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற முதல் தலைப்பில், மேற்கு ஆசியாவில் மோதல்கள் குறித்து உச்சிமாநாடு கவனம் செலுத்தியது. பிரகடனத்தில் உள்ள பல பத்திகள் இந்த பிரச்சினையை விவாதித்தன. பத்தி 30 இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது. ஆனால், அக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை குறிப்பிடவில்லை. உடனடியாக முழுமையான போர்நிறுத்தம், பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் மற்றும் சுதந்திரமான "பாலஸ்தீன மாநிலம்" (‘State of Palestine’) உருவாக்கப்பட வேண்டும் என்று குழு அழைப்பு விடுத்தது. இப்பகுதியில் இன்னும் இராணுவ ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரேல் மகிழ்ச்சியடையவில்லை. இதற்கு பதிலடியாக பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் நேரடி வான்வழி தாக்குதலை நடத்தியது.


ரஷ்யா இந்த குழுவை வழிநடத்தும் நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போரைப் பற்றி குழு மிகக் குறைவாகவே பேசியது. உறுப்பினர்கள் முக்கியமாக தங்கள் தேசிய நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கூறினர். உரையாடல் மற்றும் இராஜதந்திரம் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்தனர். மோதல்களின் "மூல காரணங்களை" நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.


பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பு என்ற இரண்டாவது தலைப்பில், பொதுவான நாணயத்தின் தலைப்பு அதிக கவனத்தைப் பெற்றது. எதிர்பார்த்த திட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கும் அவற்றின் வர்த்தக நட்புநாடுகளுக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதை பிரிக்ஸ் எளிதாக்கும். இருப்பினும், ஆழமான நிதி மற்றும் வங்கி ஒத்துழைப்பு பிரச்சினை உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சகங்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்.


சவூதி அரேபியா இன்னும் பிரிக்ஸ்-ல் முழுமையாக இணைவது குறித்து உறுதியாகத் தெரியாத நிலையில், புதிய வளர்ச்சி வங்கிக்கு எதிர்பார்க்கப்படும் பெரிய மூலதன ஊக்குவிப்பு நடக்கவில்லை. இதன் விளைவாக, தலைவர்கள் வங்கியின் செயல்பாடுகளுக்கு மேம்பாடுகளை பரிந்துரைப்பதில் கவனம் செலுத்தினர் மற்றும் அதை "21-ஆம் நூற்றாண்டிற்கான ஒரு புதிய வகை பல்தரப்பு மேம்பாட்டு வங்கியாக (multilateral development bank (MDB)) உருவாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.


மூன்றாவது பகுதி சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மக்களிடையே பரிமாற்றத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு, கலாச்சாரம், பாராளுமன்றம், சிவில் சமூகம், வணிகம் மற்றும் சிந்தனைக் குழுக்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பது நீண்ட கால பலன்களைக் கொண்டிருக்கலாம்.


குழு விரிவாக்கம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கடைசி நாளில், 34 நாடுகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் அங்கீகரிக்கப்பட்டு, “நட்பு நாடு” என்ற புதிய வகையை உருவாக்கியது. நட்பு நாடுகளாக சேர 13 நாடுகள் அழைக்கப்பட்டன. 


அவை : லத்தீன் அமெரிக்கா: கியூபா மற்றும் பொலிவியா ; யூரேசியா: பெலாரஸ் மற்றும் டர்கியே ; ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, நைஜீரியா மற்றும் உகாண்டா ; தென்கிழக்கு ஆசியா: இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ; மத்திய ஆசியா: கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்


இந்த மூன்றாவது விரிவாக்கம் உலக மக்கள் தொகை, சர்வதேச வர்த்தகம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிக்ஸ் குழுவின் பங்கை அதிகரிக்கும். 2025-ல் பிரேசிலில் அடுத்த உச்சிமாநாட்டில், இந்த நாடுகளில் பல பங்குதாரர்களாக இருக்கலாம். ஆனால், அவை விரைவில் முழு உறுப்பினர்களாக மாறக்கூடும். எனவே, மாற்றம் முழுமையாக செயல்படுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.


இந்தியாவின் பார்வை 


இந்தியாவின் கண்ணோட்டத்தில், பிரிக்ஸ் இன்று முதல் ஆறு பன்முகக் குழுக்களில் ஒன்றாகும். இதில் ஜி-20, குவாட், பிரிக்ஸ், பிம்ஸ்டெக் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி, ஜி-7 (இந்தியாவுக்கு நிரந்தர விருந்தினர் அந்தஸ்து உள்ளது) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) ஆகியவை அடங்கும். 


இது பலமுனை உலகத்தை மேம்படுத்தவும், அதன் மூலோபாய சுதந்திரத்தை பராமரிக்கவும், ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்தவும், உலகளாவிய தெற்கின் நலன்களுக்காக வாதிடவும் பிரிக்ஸ் இந்தியாவுக்கு உதவுகிறது.


சமீபத்திய உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சுமார் ஐந்து ஆண்டுகளில் முதல் சந்திப்புக்கான முக்கிய தளத்தை வழங்கியது. இவர்களது பேச்சு வார்த்தையில் எல்லை ரோந்து மற்றும் பணி நீக்கம் குறித்து உடன்பாடு ஏற்பட்டது. 


உச்சிமாநாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேம்பட்ட உறவுகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சீனா-இந்தியா உறவுகள் மேம்படுவதால், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த அதிக வாய்ப்புகளை பெறலாம். 


சர்வதேச ஒத்துழைப்புக்கான முக்கிய கருவியாக பிரிக்ஸ் அமைப்பை இந்தியா பார்க்கிறது. நாடு ஏற்கனவே மதிப்புமிக்க பங்களிப்புகளை செய்துள்ளது மற்றும் அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறது. விரிவாக்கம் குறித்து ஆரம்பத்தில் எச்சரிக்கையாக இருந்த நிலையில், இந்தியா இப்போது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது, நன்கு நிர்வகிக்கப்பட்டால், குழுவின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறது. 

மிக முக்கியமாக,  பிரிக்ஸ் இந்தியாவை மேற்கு மற்றும் கிழக்கு மற்றும் வடக்கு மற்றும் தெற்கு இடையே ஒரு பாலமாக செயல்பட அனுமதிக்கிறது. இது புது இந்தியாவை உலகளாவிய புவிசார் அரசியலில் முக்கிய நாடாக  மாற்றுகிறது.


ராஜீவ் பாட்டியா கேட்வே ஹவுஸில் ஒரு புகழ்பெற்ற ஆய்வாளர். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உயர் ஆணையர். வெளியுறவுக் கொள்கை பற்றிய மூன்று புத்தகங்களை எழுதியவர்.




Original article:

Share: