முதல் முறை குற்றவாளிகளுக்கு தளர்த்தப்பட்ட ஜாமீன் தரங்களை வழங்கும் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) பிரிவு 479 என்ன கூறுகிறது? இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன கூறியுள்ளது? இந்தியாவில் விசாரணைக் கைதிகளின் நிலை என்ன?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாயன்று, குற்றம் சாட்டப்பட்ட குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கழித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறினார். நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினத்திற்கு முன்னதாக இது நடக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் படி, முதல் முறையாக குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவது பற்றிய புதிய தளர்வு விதிகளை எடுத்துரைத்தார். "அரசியலமைப்பு தினத்திற்கு முன்பு, தண்டனையின் மூன்றில் ஒரு பகுதியை சிறையில் கழித்த மற்றும் இன்னும் நீதி கிடைக்காத ஒரு கைதி கூட இந்தியாவின் சிறைகளில் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
முதல் முறை குற்றவாளிகளுக்கு தளர்த்தப்பட்ட பிணை தரங்களை வழங்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 479 என்ன கூறுகிறது? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது? இந்தியாவில் விசாரணைக் கைதிகளின் நிலை என்ன?
"ஒரு விசாரணைக் கைதியை காவலில் வைக்கக்கூடிய அதிகபட்ச காலத்தை“ பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 479 கூறுகிறது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 479, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் கூடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்படாத கைதி பிணையில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது. அந்தச் சட்டத்தின் கீழ் குற்றத்திற்காகக் அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தின் பாதி வரை கைதி தடுத்து சிறையில் வைக்கப்பட்டிருந்தால் இது நடக்கும்.இந்த தரநிலை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure, 1973 (CrPC)) முந்தைய பிரிவு 436Aயிலும் வழங்கப்பட்டது.
ஆனால், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் படி "முதல் முறை குற்றவாளிகள்" தொடர்பான வழக்குகளில் தரத்தை மேலும் தளர்த்தியுள்ளது, அத்தகைய குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிறையில் அதிகபட்ச தண்டனையில் மூன்றில் ஒரு பங்கைக் கழித்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள்.
"அத்தகைய நபர் முதல் முறை குற்றவாளியாக இருந்தால் (கடந்த காலத்தில் எந்தவொரு குற்றத்திற்கும் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை) எனில் அவர் அந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனை காலத்தின் மூன்றில் ஒரு பங்கு வரை நீட்டிக்கும் காலத்திற்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்" என்று பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களில் விசாரணை அல்லது விசாரணைகள் நடந்து கொண்டிருந்தால் அல்லது ஒரே நபர் தொடர்பான "பல வழக்குகளில்" குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு "நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட மாட்டார்" என்பதை இந்த விதி தெளிவுபடுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தின் விளக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் 1382 சிறைகளில் உள்ள மனிதாபிமானமற்ற நிலைமைகள் (Inhuman conditions in 1382 prisons) தொடர்பான வழக்கில் விசாரணைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தினர்.
சிறைச்சாலைகளில் நெரிசல், கைதிகளின் இயற்கைக்கு மாறான மரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற சிறை ஊழியர்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை எடுத்துக்காட்டி இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர் சி லஹோட்டி நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பிய பின்னர் இந்த வழக்கு ஒரு பொதுநல மனுவாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைச்சாலைகள் தொடர்பான வழக்குகளை கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்திற்கு உதவ அமர்வு நியமித்த 'நீதிமன்றத்தின் நண்பர்' (amicus curiae) கௌரவ் அகர்வால் ஆகஸ்ட் 13 அன்று பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 479வது பிரிவு "விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இது சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலுக்கு தீர்வு காண உதவும்” என்று விளக்கினார்.
ஆகஸ்ட் 23 அன்று, புதிய விதி அதிக நன்மை அளிக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. ஜூலை 1, 2024 முதல் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன், முதல் முறை குற்றவாளிகளுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுக்குப் பிரிவு 479 "பின்னோக்கிப்" பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் அரசு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாடி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு இந்த முடிவுக்கு ஒன்றிய அரசின் விருப்பத்தை தெரிவித்தார்.
அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 479-ன் பலன்களை நீட்டிக்க தகுதியுள்ள விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை, அவர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் தேதிக்குள் விடுவிக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை" ஆகியவற்றை விவரிக்கும் பிரமாணப் பத்திரங்களை இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தரவுகளுடன் அறிக்கைகளை அனுப்புமாறு சிறை கண்காணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் இறுதி பிரமாண பத்திரங்களுக்கு தேவையான தகவல்களை சேகரிக்க உதவும்.
குறிப்பிடத்தக்க வகையில், பிரிவு 479 ஏற்கனவே இந்த பிரிவின் கீழ் ஒரு நபரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்ப சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடமையை விதிக்கிறது. அதிகபட்ச தண்டனையில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்கு முடிந்தவுடன் பிரிவு 479 பொருந்தும்.
இருப்பினும், அக்டோபர் 22 அன்று, நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 மாநிலங்கள் மட்டுமே பதில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டது. இந்த பதில்கள் நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விரிவாகக் கூறுகின்றன.
நவம்பர் 19 அன்று, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 479-ன் கீழ் ஜாமீன் பெற தகுதியுள்ள அனைத்து விசாரணைக் கைதிகளையும், குறிப்பாக பெண்களையும் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி (National Crime Records Bureau’s report) சிறை புள்ளிவிவரம் இந்தியா 2022, டிசம்பர் 2023-ல் வெளியிடப்பட்டது. இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5,73,220 பேரில், 4,34,302 பேர் விசாரணைக் கைதிகள், அவர்களுக்கு எதிரான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இது இந்தியாவில் உள்ள மொத்த கைதிகளில் 75.8% ஆகும். சிறைகளில் உள்ள 23,772 பெண்களில், 18,146 (76.33%) பேர் விசாரணைக் கைதிகள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
விசாரணைக் கைதிகளில் எத்தனை பேர் முதல் முறை குற்றவாளிகள் என்று அறிக்கை பதிவு செய்யவில்லை. டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, விசாரணைக் கைதிகளில் 8.6% பேர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர்.