சீனாவுடனான பாதுகாப்பு திறன்களில் உள்ள பெரிய இடைவெளியை நிவர்த்தி செய்யவும், அதன் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை மாற்றுவதற்கான சர்வதேச வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியா இதுவரை இருந்ததைவிட சீர்திருத்தங்களில் விரைந்து செயல்பட வேண்டும்.
லாவோஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணத்தின்போது முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தங்கள், ஒருமித்த கருத்துக் கொண்ட ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான பல பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை இந்த ஒப்பந்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ திறன்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்துறை தளத்தை நவீனமயமாக்குவதற்கான அவசரத் தேவை காரணமாக, ஆசிய நட்பு நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு வலையமைப்புகளை (strong defense networks) உருவாக்குவது இந்தியாவுக்கு அவசரத் தேவையாகும்.
ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தம், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவ விமானங்கள் ஒன்றையொன்று வானில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கிறது. இது இரு விமானப்படைகளின் செயல்பாட்டு வரம்பையும், திறம்பட இணைந்து வேலை செய்யும் திறனையும் இது அதிகரிக்கிறது. ஜப்பான் பிரதமருடனான ஆலோசனையில், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து டோக்கியோவுடனான சமீபத்திய உரையாடல்களைத் தொடர்ந்தார். சிலநாட்களுக்கு முன்பு, டெல்லியும் டோக்கியோவும் இந்திய போர்க்கப்பல்களுக்கான இரகசியமாக உபகரணங்களை (stealth equipment) கூட்டாக உற்பத்தி செய்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding (MoU)) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்கள் வரம்பிற்குட்பட்டவையாக இருந்தாலும், இந்தியாவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பிராந்திய பாதுகாப்பை பராமரிப்பதில் அவற்றின் பொதுவான நலன்களை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன.
பிராந்தியத்தில் நிலவும் மோதல்களில் சீனாவின் நிலைப்பாடு ஒரு முக்கிய கவலையாகும். இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடனான சர்ச்சைக்குரிய எல்லைகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர "ஓநாய்-போர்வீரன்" (wolf-warrior) இராஜதந்திரத்திற்குப் பிறகு பெய்ஜிங் இந்த நாட்களில் அதன் தீவிரமாக இராஜதந்திரத்தை இயக்குகிறது என்பது உறுதியாகும். சீனாவின் மனநிலை எந்த நேரத்திலும் வேறு வழியில் எளிதில் மாறக்கூடும் என்பதை சந்தேகம் கொண்டவர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.
பெய்ஜிங்கின் தற்போதைய சாதகமான இராஜதந்திர நிலைப்பாட்டைவிட முக்கியமானது என்னவென்றால், சீன இராணுவ பலம் ஆகும். தற்போதைய சீனாவின் நோக்கங்கள் எப்போதும் அதன் இராணுவ வலிமையின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட அதன் அண்டை நாடுகளின் ஒருங்கிணைந்த செலவினங்களைவிட அதன் பாதுகாப்புச் செலவு மிக அதிகம்.
சீனாவின் விரிவான தொழில்துறை உள்கட்டமைப்பு, கடந்த முப்பதாண்டுகளாக ஈர்க்கக்கூடிய இராணுவ நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரிய முதலீடுகள் ஆகியவற்றால் பெய்ஜிங்கின் பாதுகாப்பு உற்பத்தி வலிமையான விகிதத்தை எட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா 1995 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடையில் 70 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட மூன்று என்ற கணக்கில் இயக்கியது. இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ உற்பத்தி காணப்படவில்லை.
இந்தியா போன்ற பெரிய வல்லரசுகள் நாடுகள் உட்பட எந்தவொரு சீன அண்டை நாடும் அவற்றின் பாதுகாப்பு திறன்களுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே வேகமாக விரிவடைந்து வரும் இடைவெளியை தனியாக நிர்வகிக்க முடியாது. இதனால்தான், சீனாவின் ஆசிய அண்டை நாடுகள் கடந்த காலத்தில் அமெரிக்காவுடன் கூடுதலான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு ஏன் திறந்த மனதுடன் உள்ளன என்பதை இது விளக்குகிறது. இந்தியா உட்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆசிய அதிகார சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்காவின் இருப்பு தேவை என்பது தெளிவாகிறது.
இந்த பிராந்தியம் முழுவதும் "ஆசியா ஆசியர்களுக்கே" (Asia for Asians) என்று நம்பிய ஒரு காலம் இருந்தது. மேலும், "வெளிப்புற சக்திகள்" (external powers) தங்கள் இராணுவ இருப்பை அப்பகுதியில் பராமரிக்க எந்த காரணமும் இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர். ஆசிய அண்டை நாடுகளுடனான அதன் மோதல்களில் "வெளிநாட்டினர்" தலையிடக்கூடாது என்று வாதிடும் சீனா இன்றும் இந்த நிபந்தனையைப் பயன்படுத்துகிறது. இன்று ஆசியாவில் வெகு சிலரே இந்த "ஆசியா ஆசியர்களுக்கே" என்ற முழக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெய்ஜிங்கை கவலையடையச்செய்யுமோ என்ற அச்சத்தில் அனைவரும் இதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதில்லை. "ஆசியா ஆசியர்களுக்கே" என்ற முழக்கம் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
உண்மையில், சீனாவின் உறுதிப்பாடு ஆசியாவில் அமெரிக்கப் படைகளுக்கு வலுவான பிராந்திய ஆதரவிற்கு வழிவகுத்தது. பெய்ஜிங் ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக அதை மாற்றக்கூடும் என்றும் வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது. இந்த கவலையானது அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்த தூண்டுகிறது.
இந்தப் பிரச்சினை ஆசியாவில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பின் அரசியல் நியாயத்தன்மை பற்றியது அல்ல. மாறாக, அது அந்த இருப்பின் தீவிரம் மற்றும் நிலைத்தன்மை பற்றியது. கடந்த காலத்தில், கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா இராணுவ மேலாதிக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (People’s Liberation Army (PLA)) அந்த ஆதிக்கத்தை படிப்படியாக பலவீனப்படுத்தி வருகிறது. அமெரிக்கப் படைகள் மற்றும் ஆயுதங்கள் இன்னும் தரத்தில் உயர்ந்தவையாக இருந்தாலும், PLA-ன் வளர்ந்து வரும் எண்ணிக்கையானது பிராந்தியத்தில் அதிகார சமநிலையை மாற்றத் தொடங்கியுள்ளது.
மற்றொரு சவால், பல பிராந்தியங்களில் அமெரிக்காவின் ஈடுபாடாகும். சீனா தனது இராணுவ வளங்களை அதன் அருகிலுள்ள ஆசிய பிராந்தியத்தில் கவனம் செலுத்த முடியும். இருப்பினும், அமெரிக்கா தனது படைகளை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் பரப்ப வேண்டும். மேலும், ஆசியாவில் கவனம் செலுத்துவதற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கடமைகளை குறைக்கும் நம்பிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவின் நேட்டோ (NATO) அமைப்பின் உறுதிப்பாடுகள் வலுவாக உள்ளன. ஏனென்றால், பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறைந்து வருகின்றன. 2022-ம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் இதற்கு பங்களித்துள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஈடுபாடும் நிலையானதாக உள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் டெல் அவிவ், காசா மற்றும் லெபனான் இடையே நடந்து வரும் போர் ஆகியவை அமெரிக்காவை மீண்டும் பிராந்தியத்திற்குள் கொண்டு வந்துள்ளன. வாஷிங்டனில் உள்ள சிலர் அமெரிக்கா மூன்று முனைகளிலும் போராடமுடியும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், இந்த பகுதிகளில் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிப்பதில் அதிகரித்து வரும் சவால்களை சந்தேகம் கொண்டவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களுக்கான ஆயுத தேவைகளான வெடிமருந்துகள், ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள் போன்றவை பூர்த்தி செய்ய முடியாதது என்பது ஒரு பெரிய அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. நன்கு அறியப்பட்ட அமெரிக்க இராணுவ-தொழில்துறை வளாகம் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான ஆயுதங்களை உற்பத்தி செய்யமுடியாது. ஆசியாவில் சீனாவுடன் சாத்தியமான மோதலுக்கு தயாராகவும் இது போராடுகிறது.
பல அமெரிக்க இராணுவ உற்பத்தி வசதிகள் காலாவதியானவை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தொழில்துறையில் திறமையான பணியாளர்கள் இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்கா தனது பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஆதரவிற்காக கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிடம் திரும்புகிறது. உதாரணமாக, சீனாவிற்கு எதிரான அதன் கடல்சார் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஜப்பானிய மற்றும் கொரிய கப்பல் கட்டும் தளங்களுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இருப்பினும், டோக்கியோ மற்றும் சியோலில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மக்கள்தொகை குறைதல் மற்றும் வயதான பணியாளர்கள் போன்ற தங்கள் சொந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
வளர்ந்து வரும் இராணுவ சவால்கள் காரணமாக உலகளாவிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைப்பது அவசரத் தேவையாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, உக்ரேனின் போருக்கான உபகரணங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருகிறது. இந்த புதிய சர்வதேச சூழ்நிலை, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி முறையின் நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்தியா அமெரிக்கா மற்றும் பிரான்ஸுடன் பாதுகாப்பு தொழில்துறை வரைபடங்களில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் அது இத்தாலியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் இந்திய தனியார் துறைக்கு அதிக பங்களிப்பை வழங்குவது குறித்து இந்தியா விவாதித்துள்ளது. ஆயுத ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் நாடு கவனம் செலுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை மறுசீரமைக்க உயர்மட்ட அரசாங்கக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியா தனது இராணுவ இராஜதந்திரத்தை பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்துள்ளது.
இந்தியா இதுவரை சீர்திருத்தங்களை கொண்டு வருவதைவிட வேகமாக முன்னேற வேண்டும். சீனாவுடனான பாதுகாப்பு திறன்களில் உள்ள பெரிய இடைவெளியை நிவர்த்தி செய்ய இது அவசியம். இந்தியா தனது பாதுகாப்பு தொழில்துறை தளத்தை மாற்றுவதற்கான சர்வதேச வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் முக்கியம்.