இந்திய அரசியலமைப்பு, அதன் உரைக்கு அப்பாற்பட்டது -ராஜேஷ் ரஞ்சன்

 'அதிகாரம்' என்ற மையமயமாக்கல் அகற்றப்பட்டு, இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டால் அரசியலமைப்பின் நோக்கம் நிறைவேறும். 

 

“Founding Mothers of the Indian Republic: Gender Politics of the Framing of the Constitution” என்ற புத்தகத்தில், அச்யுத் சேத்தன் ஒரு கதையைப் பகிர்ந்துள்ளார். அதில், அரசியலமைப்புச் சட்டமே அனைத்தும் என்றும், எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டி எதுவும் இல்லை என்றும் நம்பிய ஒரு கலாச்சார கோட்பாட்டாளருடனான உரையாடலை அவர் குறிப்பிடுகிறார். எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டி அரசியலமைப்பை நாம் எப்படி கற்பனை செய்ய முடியும்?


அரசியலமைப்பு அதன் உரைக்கு வெளியே என்ன மதிப்பைக் கொண்டுள்ளது?


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்தக் கேள்விகள் அதன் பரந்த முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. 

 

நம்பிக்கையான மற்றும் லட்சிய குடியுரிமைக்கான சான்று


அரசியலமைப்பு உரை மிகவும் முக்கியமானது. இது கொள்கை முடிவுகளை விளக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் நிறுவனங்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது. அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டும் அல்ல. அது எழுதப்பட்ட வார்த்தைகளை தாண்டிய ஒரு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை கட்டமைப்பாகும். இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் கனவுகளை அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. இது நமது அரசாங்கத்தின் அடித்தளம் மற்றும் குடிமக்களின் லட்சியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், அரசியலமைப்பை மதிப்பிடும்போது குடிமக்கள் எங்கு பொருந்துகிறார்கள்?

 

குடியுரிமை என்பது பெரும்பாலும் சட்டங்கள் அல்லது அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய வரலாற்றில், எழுதப்பட்ட உரையைத் தாண்டி குடியுரிமை பற்றிய கருத்தை வடிவமைப்பதிலும் மாற்றியதிலும் மக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். பல்வேறு இயக்கங்கள் மூலம், அவர்கள் சமத்துவமின்மைகளுக்கு எதிராக போராடுவதற்கும், சாதி, வர்க்க உயரடுக்கினரால் கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை பெறுவதற்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

உதாரணமாக, தலித் இயக்கம் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் கோருவதற்கு அரசியலமைப்பைப் பயன்படுத்தியது. அரசியலமைப்பு சுதந்திரம் மற்றும் நியாயமற்ற சமூக விதிமுறைகளை சவால் செய்வதற்கான ஒரு கருவியாக மாறியது. தீண்டாமையை ஒழிக்கும் (abolishes untouchability) அரசியலமைப்பின் 17வது பிரிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராகப் போராடுவதற்கு விளிம்புநிலை சமூகங்களுக்கு முக்கியப் புள்ளியாக மாறியது. இதேபோல், நிலச் சீர்திருத்தங்கள், கல்வி, தகவல் அறியும் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்கான இயக்கங்கள் நீதியை பெறுவதற்கு அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, அவர்கள் குடியுரிமை பற்றிய கருத்தை விரிவுபடுத்தியுள்ளனர். குடியுரிமை (citizenship) என்பது சட்டப்பூர்வ நிலை மட்டுமல்ல. இது அனைவருக்கும் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலின் உண்மையான அனுபவமாக மாறியுள்ளது.

 

பேராசிரியர் ரோஹித் டி ‘ஒரு மக்கள் அரசியலமைப்பு  (A People’s Constitution)’ என்ற தனது புத்தகத்தில், அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய மக்களின் கதைகளைப் பகிர்ந்துள்ளார். இந்த நபர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்பைப் பயன்படுத்தினர். அரசியலமைப்பு விவாதத்தின் மையத்தில் சாதாரண குடிமக்களை வைக்க அவர்கள் உதவினார்கள். அரசியல் சட்டத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில் சாதாரண குடிமக்களின் ஈடுபாடு இன்றும் தொடர்கிறது. இது இன்னும் வலுவாகவும் ராஜதந்திரமாகவும் மாறியுள்ளது. குடியரசில் தங்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கு இது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

 

அரசியலமைப்பு மற்றும் குடிமக்களுக்கு இடையிலான உரையாடல் 


அரசியலமைப்பின் கதையும் அதன் மக்களின் கதையாகும். சமூக ஆர்வலர் அருணா ராய், தனது சமீபத்திய நினைவுக் குறிப்பில் "தனிப்பட்ட அரசியல்" (The Personal is Political) ஜனநாயகத்தில், "மக்கள்" என்பது செல்வம் மற்றும் செல்வாக்கால் வரையறுக்கப்பட்ட சக்திவாய்ந்த உயரடுக்கினரைக் குறிக்கும் என்று வாதிடுகிறார். இந்த அதிகார கட்டமைப்பை நாம் உடைத்து பின்தங்கிய குழுக்களை நமது ஜனநாயகத்தின் அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறுகிறார். இது அரசியலமைப்பின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும் என்று அவர் நம்புகிறார்.

பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தில் பின்தங்கிய குழுக்களுக்கு அரசியலமைப்பு உருவாக்கம் ஒரு முக்கியமான கருவியாகும். இந்தக் குழுக்களுக்கு அரசியல் நிர்ணய சபையில் நேரடிப் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், அவர்களின் கவலைகள் கவனமாக விவாதிக்கப்பட்டன. இது அரசியலமைப்பு அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்த உதவியது.

 

இருப்பினும், இந்த முற்போக்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பில் குறைபாடுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் சில குழுக்களை தற்செயலாக விலக்கி வைத்த நேரங்களும் உண்டு.

 

ஒரு கூட்டுப் பொறுப்பு 


அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்த வேளையில், அதன் வாக்குறுதிகள் பொது நிறுவனங்களை தாண்டி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனிநபர்கள் தவறாகச் செயல்படும்போது அவர்களுக்கு சவால் விடுவதற்கான அதிகாரத்தை குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமின்றி, அதன் கொள்கைகளை உண்மையாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் அந்தஸ்து அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும் உண்மையான சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும்.

 

ராஜேஷ் ரஞ்சன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்.




Original article:

Share: