சிறைச்சாலைகளில் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல் -ஆர்.கே.விஜ், ஷிவானி விஜ்

 சிறைச்சாலைகளில் சாதி பாகுபாட்டை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், மாதிரி சிறை கையேடு (Model Prison Manual) 2016-ல் திருத்தம் செய்வதன் மூலம் சிறைகளில் அடிப்படை வசதிகளை இணைப்பதன் மூலம் சிறைகளுக்குள் குறைந்தபட்சம் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வழிவகுக்கும். 


அக்டோபர் 3, 2024-ம் ஆண்டு அன்று, ”சுகன்யா சாந்தா vs இந்திய ஒன்றியம்” (Sukanya Shantha vs. Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாவது, இந்தியச் சிறைச்சாலைகளில் பாகுபாடு அனுமதிக்கப்படாது என்ற கொள்கையை வலுப்படுத்தியது. மேலும், இந்த வழக்கு சிறைச்சாலை விதிகளை அடிப்படையாக வைத்து, சாதியின் அடிப்படையில் சிறைக்கைதிகளை பிரிக்கிறது. 


இதன்மூலம், சாதிப் பாகுபாட்டை ஆதரித்ததாலும், கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாலும் இந்த விதிகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த காலங்களில், கைதிகளை குழுக்களாக பிரித்து சமத்துவமற்ற முறையில் நடத்தும் சிறை விதிகளையும் நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. இந்த வகைப்பாடுகள் நியாயமற்ற, தன்னிச்சையான அல்லது தடைசெய்யப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அவை அரசியலமைப்பின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் உள்ள சமத்துவத்தின் தரநிலைகளைச் சந்திக்கத் தவறிவிட்டன.


தன்னிச்சையான பிரிவினை இல்லை 


1980-ம் ஆண்டில், பிரேம் சங்கர் சுக்லா vs டெல்லி நிர்வாகம் (Prem Shankar Shukla vs Delhi Administration) என்ற வழக்கில் கைதிகளிடையே சமூக அந்தஸ்து அடிப்படையில் பாகுபாடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது. பஞ்சாப் காவல்துறை விதிகள் விசாரணைக் கைதிகளை 'உயர் வகுப்பினர்' (better class) மற்றும் 'சாதாரணமானவர்கள்' (ordinary) என்று வேறுபடுத்துகின்றன. 'உயர் வகுப்பினர்' (better class) மட்டுமே கைவிலங்கு அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். 


வசதி படைத்த கைதியைவிட ஏழைக் கைதி சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று அரசு கருதுவது முற்றிலும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்று நீதிமன்றம் நியாயப்படுத்தியது. கைவிலங்கிடும் நோக்கங்களுக்காக கைதிகளை வகைப்படுத்துவதற்கு சமூக மற்றும் பொருளாதார நிலை தீர்மானிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. இதன் விளைவாக, இந்த விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானதாக உள்ளன என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 


1988-ம் ஆண்டு ”இனாசியோ மானுவல் மிராண்டா எதிர். அரசு” (Inacio Manuel Miranda vs State) வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம், சிறையில் உள்ள கைதிகளுக்கு எழுதும் உரிமையைப் பாதிக்கும் வகையிலான பிரிவினையைக் கையாண்டது. இதில், கோவா, டாமன் மற்றும் டையூ பிராந்தியங்களின் கைதிகள் விதிகளின்படி, பொதுநலக் கடிதங்கள் எழுதும் போது கைதிகள் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டனர். "வகுப்பு-I" கைதிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு கடிதங்களை எழுத அனுமதிக்கப்பட்டனர். 


அதே நேரத்தில், "வகுப்பு-II" உள்ள கைதிகள் இரண்டை மட்டுமே எழுத முடியும். இந்த விதி நியாயமற்றது மற்றும் பாரபட்சமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும், கைதிகள் தங்களை வெளிப்படுத்துவதில் சமமாக நடத்தப்படும் உரிமையை இது பாதித்தது. ”மதுகர் பகவான் ஜம்பலே எதிர். மகாராஷ்டிரா மாநிலம்” (Madhukar Bhagwan Jambhale vs State of Maharashtra) 1984-ம் ஆண்டு வழக்கில், முந்தைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில், கைதிகள் மற்ற கைதிகளுக்கு கடிதம் எழுதுவதற்கு மகாராஷ்டிர சிறை விதிகள் தடை விதித்தன. ஆனால், இந்த தடை நியாயமற்ற முறையில் கைதிகளின் அரசியலமைப்பு உரிமைகளை கட்டுப்படுத்துகிறது என்றும் அது கண்டறிந்தது.


கைதிகளுக்கு உள்ள உரிமைகளை சிறைச்சாலைகள் பறிக்க முடியாது என்ற கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த உரிமைகளில் ஒன்று பாகுபாடு இல்லாதது. சுகன்யா சாந்தா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மிகச் சமீபத்திய தீர்ப்பு, சிறைப் பிரிவினையின் மிக மோசமான உதாரணத்தை எடுத்துக்காட்டுகிறது. சிறைகளில், கைதிகளுக்கு எந்த வகையான வேலை வழங்கப்பட வேண்டும் என்பதை சாதிப் படிநிலை நிர்ணயித்தது. 


சில "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின்" கைதிகளுக்கு சுத்தம் மற்றும் துப்புரவு வேலைகள் வழங்கப்பட்டன. மற்ற கைதிகளுக்கு சமையல் போன்ற பணிகள் வழங்கப்பட்டன. இந்த குறிப்பிட்ட சாதியினர் "இத்தகைய கடமைகளைச் செய்யப் பழகியவர்கள்" (accustomed to performing such duties) என்று மாநில சிறைச்சாலை விதிகள் குறிப்பிடுகின்றன. இந்த பிரிவினை வகைப்பாடு கைதியின் தனிப்பட்ட திறமை அல்லது தகுதிகளின் அடிப்படையில் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. 


மேலும், சீர்திருத்தத்திற்காக எந்த விதத்திலும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அது சாதி அடையாளத்தை நிலைநிறுத்தி, சீர்திருத்தத்திற்கான சம வாய்ப்புகளைத் தடுத்தது. எனவே, மாநில சிறை விதிகள் மற்றும் அதுபோன்ற நிர்வாக முடிவுகள் 14 மற்றும் 15 வது பிரிவுகளின் கீழ் பாரபட்சமானவை என்று ஒதுக்கி வைக்கப்பட்டு, திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. 


முன்னோக்கி செல்லும் வழி 


மற்றொரு வழக்கில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இந்த மனுக்கள் ஆகஸ்ட் 2012-ம் ஆண்டில், கவுர் நாராயண் சக்ரவர்த்தி மற்றும் பலர் என்று இந்த வழக்கு என அறியப்படுகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் மாவோயிஸ்டுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (Unlawful Activities (Prevention) Act) மற்றும் பிற சிறப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக நடத்த முடியுமா? என்பதே நீதிமன்றத்தின் முக்கிய கேள்வியாக இருந்தது. இது மேற்கு வங்க திருத்த சேவைகள் சட்டம், 1992 (West Bengal Correctional Services (WBCS) Act) ஐப் பின்பற்றி, மாவோயிஸ்டுகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வாதிட்டது. அவர்களின் நடவடிக்கைகள் பொது நலனுக்காக அல்ல என்றும், ஆனால் வன்முறைப் புரட்சியை இலக்காகக் கொண்டவை என்று நீதிமன்றம் நம்பியது.


எவ்வாறாயினும், உயர் நீதிமன்றம், அரசியல் குற்றங்கள் குறித்த உள்ளூர் மற்றும் சர்வதேச கண்ணோட்டங்களை விவாதித்த பின்னர், கைதிகளை வகைப்படுத்துவது தொடர்பான மேற்கு வங்க திருத்த சேவைகள் சட்டத்தை (WBCS) விளக்கிய பின்னர், "எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் ஆதரிப்பவர்கள் அரசியல் கைதிகளாக கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க முடியாது என்று கூற முடியாது" என்ற முடிவுக்கு வந்தது. 


இந்த தீர்ப்பின் அடிப்படையில், சிறப்பு விடுப்புக்கான மனுவை (special leave petition) தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, கைதிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது.


அரசியல் கைதியாக வகைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு சில வகையான வசதிகளுக்கு உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில், நாற்காலி, மேஜை, விளக்கு, இரும்புக் கட்டில், மெத்தை, தலையணை, போர்வை, கண்ணாடி போன்ற வசதிகள் உள்ளன. மேலும், அவர்கள் சமையல் வசதிகள், முடிதிருத்தும் சேவைகள், எழுதும் பொருட்கள் மற்றும் செய்தித்தாள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் உரிமையுடையவர்கள் ஆவர். 


அரசியல் கைதிகள் தங்கள் உறவினர்களிடமிருந்து புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் பெறலாம். இந்த வசதிகள் ஒவ்வொரு கைதிக்கும் இருக்க வேண்டிய அடிப்படை மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்த வசதிகள் அரசியல் கைதிகளுக்கு மட்டும் பொருந்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அரசு மதிப்பாய்வு செய்து அனைவருக்கும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், கைதிகளின் வாழ்க்கைக்கான நிலைமைகளை மேம்படுத்துவது, மேற்கு வங்க திருத்த சேவைகள் சட்டத்தால் (WBCS) அங்கீகரிக்கப்பட்ட வகைப்பாடுகளின் தேவையை குறைக்கும்.


உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு சிறைகளுக்குள் சாதிப் பாகுபாட்டை அகற்றிய அதே வேளையில், மாதிரி சிறை கையேடு 2016-ல் பொருத்தமான திருத்தம் செய்வதன் மூலம் சிறைகளில் அடிப்படை வசதிகளை இணைப்பது மற்ற பாகுபாடுகளைக் குறைக்க மட்டுமல்லாமல், சிறைகளுக்குள் குறைந்தபட்ச கண்ணியமான வாழ்க்கையையும் உறுதி செய்யும். 


ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரி ஆவார். ஷிவானி விஜ் ஒரு வழக்கறிஞர். டெல்லியில் பயிற்சி செய்து வருகிறார்.




Original article:

Share: