இந்தியாவின் கார்பன் வரவுத் திட்டத்தை வடிவமைத்தல் -சஷாங்க் பாண்டே

 இந்தியாவின் கார்பன் வரவு அமைப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழலுக்கு ஏற்ப  வடிவமைக்கப்பட வேண்டும். 


CoP29 மாநாடு, நவம்பர் 11 முதல் 22, 2024 வரை, அஜர்பைஜானின் உள்ள பாகுவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் காலநிலை நிதி குறித்து மீண்டும் விவாதிக்கப்படவுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான கார்பன் வரவு  கட்டமைப்பு மற்றும் கருத்து வேறுபாடுகள் இந்த விவாதத்தின் முக்கிய அங்கமாக இருக்கும். 


இந்தியா தனது காலநிலை ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு கார்பன் சந்தை அமைப்பை மேம்படுத்தியது மற்றும் 2023-ல் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) புதுப்பித்தது. 2022-ஆம் ஆண்டின் எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் கார்பன் வரவு வர்த்தக திட்டத்திற்கு (Carbon Credit Trading Scheme (CCTS)) சட்டப்பூர்வ ஆணையை வழங்கியது. இதன் மூலம், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தனது காலநிலை பொறுப்புகளை பொருளாதார இலக்குகளுடன் சீரமைப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், சந்தை நம்பகமானதாகவும், திறமையாகவும், நியாயமாகவும் இருப்பதை உறுதி செய்ய அது கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும். இந்தியா தனது கார்பன் சந்தையை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக இருக்க உலக அனுபவங்களிலிருந்து இரண்டு முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

கார்பன் வரவுகளின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல் 


எந்தவொரு கார்பன் சந்தைக்கும் கார்பன் வரவுகளின் ஒருமைப்பாடு முக்கியமானது. உலகளவில், வரவு  உருவாக்கத்தில் மோசமான செயல்பாடு பசுமை சலவைக்கு (greenwashing) வழிவகுத்தது. இந்த பிரச்சனை தன்னார்வ கார்பன் சந்தையில் (voluntary carbon market (VCM)) பொதுவானது. சில திட்டங்கள், குறிப்பாக வனவியல் துறையில், அவற்றின் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன. பசுமை வரவு  திட்டத்தின் (Green Credit Programme (GCP)) கீழ் செயல்படும் இந்தியாவின் தன்னார்வ கார்பன் சந்தையிலும் இது போன்ற ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. 


GCP-ன் கீழ் அரசாங்கத்தின் மரம் வளர்ப்பு வழிகாட்டுதல்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் அறிவியல் அல்லாத மரம் நடும் முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் பசுமை சலவையை ஊக்குவிக்கின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கார்பன் வரவு வர்த்தக (Carbon Credit Trading Scheme (CCTS)) திட்டத்தின் கீழ், கூடுதலான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் போகலாம் என்ற கவலையும் உள்ளது. கூடுதல் திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், வழக்கமான வணிக-வழக்கமான சூழ்நிலையில் (business-as-usual scenario) ஏற்படுவதைவிட உமிழ்வு குறைப்பு அதிகமாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

 

இந்த சவால்களை சமாளிக்க, கார்பன் வரவுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இந்தியா கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும். ஒரு முன்மொழியப்பட்ட தேசிய பதிவேடு (national registry) கார்பன் வரவுகளை கண்காணிக்க ஒரு வலுவான அமைப்பாக இருக்கும். இரட்டை எண்ணும் சிக்கல்களைத் தீர்க்கவும் இது உதவும். சுயாதீன மூன்றாம் தரப்பு சரிபார்ப்பாளர்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும். அவர்கள் கார்பன் குறைப்பு திட்டங்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவார்கள். 


சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தியா நம்பகமான கார்பன் சந்தையை உருவாக்க முடியும். சர்வதேச உமிழ்வு வர்த்தக சங்கம் (International Emissions Trading Association (IETA)) மற்றும் கோல்ட் ஸ்டாண்டர்ட் போன்ற நிறுவனங்கள் கார்பன் வரவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா அவர்களின் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், உயர்ந்த ஒருமைப்பாட்டுடன் ஒரு சந்தையை உருவாக்க முடியும். இது உள்நாட்டு மற்றும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும்.


உலகளாவிய தரங்களுடன் சீரமைப்பு 


இந்தியாவின் கார்பன் சந்தையானது சர்வதேச கார்பன் வர்த்தக அமைப்புகளுடன், குறிப்பாக பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 உடன் ஒத்துப்போக வேண்டும். சர்வதேச அளவில் மாற்றப்பட்ட தணிப்பு விளைவுகளை (Internationally Transferred Mitigation Outcomes (ITMOs)) பயன்படுத்தி நாடுகள் தங்களின் காலநிலை இலக்குகளை அடைய கட்டுரை 6.2 உதவுகிறது. கார்பன் வர்த்தகத்தில் பங்கேற்கும் நாடுகளுக்கு இந்த விதிகளுக்கு ஏற்றவாறு செயல்படுவது முக்கியம். கிளாஸ்கோவில் நடந்த கட்சிகளின் 26-வது மாநாடு உச்சிமாநாட்டில் இறுதி செய்யப்பட்ட பிரிவு 6 விதிப்புத்தகம், சுற்றுச்சூழலின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்கும் போது நாடுகள் எவ்வாறு கார்பன் வரவுகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறது. 


சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் அதே நேரத்தில் நாடுகள் கார்பன் வர்த்தகத்தில் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, வரவுகளை இருமுறை எண்ணுவதைத் தடுக்க அமைப்புகளைச் சேர்க்க வேண்டும். உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை நம்பகமானதாக வைத்திருக்க இந்த நடவடிக்கை முக்கியமானது. இந்தியா தனது கார்பன் சந்தையை உள்நாட்டு மற்றும் சர்வதேச தரங்களுடன் சீரமைக்க முடியும். 


இதைச் செய்ய, உமிழ்வு குறைப்பு மற்றும் கார்பன் வரவு பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான வெளிப்படையான அமைப்புகளை இந்தியா ஒருங்கிணைக்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், இந்தியா தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் உலகளாவிய உமிழ்வைக் குறைக்க உதவும்.


ஒரு முக்கியமான அம்சம் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகும், குறிப்பாக, பிரிவு 6.2-ன் கீழ். சர்வதேச கார்பன் சந்தைகள் மூலம் பருவநிலை தணிப்பு முயற்சிகளில் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பை இந்தக் கட்டுரை உருவாக்குகிறது. உலக வங்கியின் அறிக்கை, "கட்டுரை 6 வழிமுறைகளின் கீழ் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை உறுதி செய்தல்" ஆகும். கார்பன் சந்தைகளில் வலுவான சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது. பாரிஸ் உடன்படிக்கையின் பிரிவு 6 கட்டமைப்பின் கீழ் இது மிகவும் முக்கியமானது. 


வலுவான பாதுகாப்புகள் இல்லாமல் கார்பன் சந்தைகள் இரட்டை எண்ணும் உமிழ்வைக் குறைக்கும் அபாயம் உள்ளது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது காலநிலை உறுதிப்பாடுகளின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தலாம். நிர்வாகம், சரிபார்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் உயர் தரநிலைகளின் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது. "குறைந்த தரமான" கார்பன் வரவுகள் சந்தையில் நுழைவதைத் தடுக்க இந்த தரநிலைகள் தேவைப்படுகிறது.

 

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் 


வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். இந்தியாவின் கார்பன் வரவு அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும், திட்ட விவரங்களை முழுமையாக வெளிப்படுத்துவது முக்கியம். இந்த விவரங்களில் கார்பன் குறைப்பு முறைகள், வரையறைகள் மற்றும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு அறிக்கைகள் இருக்க வேண்டும். இந்தத் தகவல்கள் அனைத்தும் எளிதில் அணுகக்கூடிய வலைத்தளத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். 


கூடுதல் திட்டங்களுக்கு கடுமையான விதிகளை பின்பற்றுவதை உறுதிசெய்வது, வரவுகள் உண்மையான உமிழ்வு குறைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் நிலையானவை என்பதை உறுதிப்படுத்த வழக்கமான தணிக்கைகள் தேவை. இந்தியாவில் எரிசக்தி திறன் பணியகத்தால் (Bureau of Energy Efficiency (BEE)) அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன தணிக்கையாளர்கள் செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும். வரவு பரிவர்த்தனைகளின் நிகழ்நேர கண்காணிப்பு பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது. இந்த நடவடிக்கை திட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய தகவல்களை வழங்கும்.

 

தன்னார்வ கார்பன் சந்தைகள் ஒருமைப்பாடு முயற்சி (Voluntary Carbon Markets Integrity Initiative (VCMI)) கட்டமைப்பானது கார்பன் வரவு  உரிமைகோரல்களை மதிப்பிடுவதற்கு நிறுவனங்களுக்கு ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இது சந்தை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கார்பன் ஆஃப்செட் (carbon offset) உரிமைகோரல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதாகும். 


கார்பன் ஆஃப்செட் (carbon offset) என்றால் என்ன?

கார்பன் ஆஃப்செட் என்பது  கார்பன் டை ஆக்சைடு மற்றும் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் முறை அல்லது அவற்றை ஈடு செய்யும் முறை ஆகும். இது, ஒரு நபர் அல்லது நிறுவனம் அதன் கார்பன் தடத்தை குறைக்க எடுக்கும் முயற்சி  ஆகும். 


இருப்பினும், வெளிப்படைத்தன்மை சிக்கல்கள் மற்றும் கண்காணிப்பு அறிக்கையிடல் மற்றும் சரிபார்ப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான அதிக செலவுகள் காரணமாக சவால்களை எதிர்கொள்கின்றன. இந்த செலவுகள் சிறிய திட்டங்களைத் தொடங்குவதற்கு குடினமான சூழலை உருவாக்கலாம்.


இந்தியாவின் கார்பன் வரவு அமைப்பு புதியதாக இருந்தாலும், கடுமையான செயலாக்கம் சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழலுக்கு ஏற்ப  வடிவமைக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா மிகவும் முதிர்ந்த கார்பன் சந்தையை உருவாக்க வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் காலநிலை நிதி இலக்குகளை ஊக்குவிக்கவும், நடைமுறை, நிலையான வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும்.


சஷாங்க் பாண்டே விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசியில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.




Original article:

Share: