இந்தியா அதன் மக்கள்தொகை ஈவுத்தொகையிலிருந்து (demographic dividend) பயனடைய உற்பத்தி வேலைகளை உருவாக்க வேண்டும்.
பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை கவனம் பெற்றது. இந்தியா தனது சோசலிச பொருளாதார மாதிரியிலிருந்து விலகியபோது இது நடந்தது. மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic dividend) ஒரு நாட்டின் பொருளாதார நன்மைகளை குறிக்கிறது. பெரும்பாலான மக்கள் வேலை செய்யும் வயதில் இருக்கும்போது இந்த நன்மைகள் கிடைக்கும். உழைக்கும் மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். இன்று, மக்கள்தொகை ஈவுத்தொகை தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியின் தெளிவற்ற வாக்குறுதியாகக் காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஏதோ ஒன்று என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நம்பப்படும்போது, மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்கிறார்கள். கல்வி, வேலை மற்றும் வீட்டு வசதிக்காக போட்டியிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதுவே மனக்கசப்பாக இருக்கலாம்.
நடுத்தர வருமானப் பொறி
ஒரு உண்மை சோதனை தேவை. இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு 15 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்தாலும், மக்கள்தொகை ஈவுத்தொகை நினைத்தது போல் சக்தி வாய்ந்ததாகவோ முடிவற்றதாகவோ இல்லை. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்ற குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், உழைக்கும் வயதினரின் விகிதம் குறையத் தொடங்கும் என்று கணிப்புகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மாநிலங்களில் இப்போது ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று நிலைக்குக் கீழே கருவுறுதல் விகிதம் (fertility rate) உள்ளது. இது நிலையான மக்கள்தொகையை பராமரிக்க தேவைப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், 1.75-க்கும் குறைவான கருவுறுதல் விகிதங்களுடன், முன்னணியில் உள்ளன. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களும் இதே போன்ற சரிவைக் காண்கின்றன. இந்த போக்கு நாடு முழுவதும் நடந்து வருவதை இது காட்டுகிறது.
மொத்த கருவுறுதல் விகிதத்தில் (total fertility rate (TFR)) ஏற்பட்ட சரிவு, குறைந்த பிறப்பு விகிதம் சிறந்த கல்வி மற்றும் வருமானத்துடன் நடக்கும் என்ற வழக்கமான கருத்தை சவால் செய்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் சற்று மேம்பட்டிருந்தாலும், இந்திய இன்னும் குறைந்த நடுத்தர வருமானம் (lower-middle-income countries) கொண்ட நாடாகவே கருதப்படுகிறது. 2010-ல் 2.6-ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் இன்று 1.99-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறிவரும் நிலையில், இந்த சரிவு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதுமை அடையும் முன் வளம் பெற முடியுமா என்பது கேள்வி மட்டும் அல்ல. இது ஒரு தீவிர கவலையாக மாறியுள்ளது.
இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாய வேலைகளில் சிக்கித் தவிப்பதாலும் அல்லது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது மாணவர்கள் வேலையில்லாமல் இருப்பதாலும் நமது ஈவுத்தொகை வீணாகி வருகிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்தில் இந்தியா தனது தொழிலாளர்களின் விகிதத்தை வெறும் 17 சதவீத புள்ளிகளால் 63%-லிருந்து 46%-ஆகக் குறைத்துள்ளது.
சீனாவில் தாராளமயமாக்கல் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயத்தில் நாட்டின் தொழிலாளர்களின் பங்கு 32 புள்ளிகள், 70%-ல் இருந்து 38%-ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், நகர்ப்புறங்களில் இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (LFPR)) 50%-கீழ் மோசமாக உள்ளது. இந்தப் பாதையில் தொடர்ந்தால், ஒரு சில நாடுகள் மட்டுமே தப்பித்த நடுத்தர வருமான வலையில் விழும் அபாயம் உள்ளது. சீனாவும் கூட, பல ஆண்டுகளாக வேகமான வளர்ச்சிக்குப்பிறகு, வளர்ச்சி குறைந்து வருகிறது. மக்கள்தொகை வேகமாக குறைவதால், இந்தியா சிறப்பாக செயல்படும் என்று கருதக்கூடாது.
உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள்
எனவே, மக்கள்தொகை ஈவுத்தொகை மிகவும் தாமதமாக வருவதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்? வரலாறு முழுவதும், பொருளாதார வளர்ச்சிக்கான நிரூபிக்கப்பட்ட பாதை விவசாயம் போன்ற குறைந்த உற்பத்தித் துறைகளில் இருந்து உற்பத்தி மற்றும் சேவைகளில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளுக்கு தொழிலாளர்களை நகர்த்துவதாகும். சேவைத் துறை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி தேக்கமடைந்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டும். ஏனெனில் உற்பத்தி, குறிப்பாக உழைப்பு மிகுந்த தொழில்களில், சேவைகளைவிட அதிக வேலைகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, $150 பில்லியன் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் 45 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் $250 பில்லியன் IT-BPM துறையில் 5.5 மில்லியன் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஜவுளித் தொழிற்சாலைகள் 60-70% பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன. தற்போது, பணிபுரியும் வயதுடைய இந்தியப் பெண்களில் 10 பேரில் மூன்று பேர் மட்டுமே தொழிலாளர் தொகுப்பில் உள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தியாளர்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். சமீபத்திய உலக வங்கி ஆய்வுகளின்படி, இந்தியாவில் உள்ள ஆறில் ஒரு உற்பத்தியாளர் வணிக உரிமம் மற்றும் அனுமதி பெற போராடுகிறார். அதே நேரத்தில் வியட்நாமில் உற்பத்தியாளர்களில் 3% க்கும் குறைவானவர்கள் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
நிலத்திற்கான தேவை மற்றும் சிக்கலான மற்றும் வர்த்தக விதிகள் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகும். இந்தியாவில், 17% உற்பத்தியாளர்கள் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வியட்நாமில் வெறும் 3% மட்டுமே இந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த தடைகள் உற்பத்தியின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, இந்தியா தனது வர்த்தக சூழலை மேம்படுத்த வேண்டும்.
இந்திய உற்பத்தியாளர்களுக்கு மலிவாகவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பது இந்திய தயாரிப்புகளுக்கான சந்தை தேவைகளை விரிவுபடுத்த மற்றொரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். மாநில அரசாங்கங்கள் தொழிலாளர் சீர்திருத்தங்களில் அதிக முனைப்புடன் இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நெகிழ்வான பணி ஏற்பாடுகளை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளுக்கான நிலம் மற்றும் கட்டிட விதிகளையும் அவர்கள் மறுஆய்வு செய்ய வேண்டும். ப்ரோஸ்பெரிட்டியின் (Prosperiti) சமீபத்திய அறிக்கையின்படி, கட்டுப்பாடான கட்டிடத் தரங்களால் பல தொழிற்சாலைகள் தங்கள் நிலத்தில் பாதியை மட்டுமே பயன்படுத்த முடியும், இது உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது. கூடுதலாக, தொழில்துறை பகுதிகளில்தொழிலாளர் குடியிருப்புகளை உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகள் பணியமர்த்தல் செலவுகளை அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதும் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.
நமது மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 1980-களில், சீனா இந்தியாவைப் போன்ற தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தது மற்றும் கோடிகணக்கான மக்களை விவசாயத்திலிருந்து உற்பத்திக்கு மாற்றியது. இந்தியா தனது குறுகியகால "மக்கள்தொகை ஈவுத்தொகையை" (‘demographic dividend’) கொண்டாடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. மாறாக, அதை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஹர்ஷித் ரகேஜா, பொருளாதார வளர்ச்சிக்கான அறக்கட்டளையின் தகவல் தொடர்பு மேலாளர்; யுவராஜ் கேதன், பொருளாதார மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் திட்ட மேலாளர்