நிகர கடன் உச்சவரம்புகள் (Net Borrowing Ceiling (NBC)) குறித்த ஒன்றிய அரசின் முடிவு கேரளா அரசை நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழிவகுத்துள்ளது. அரசியலமைப்பின், 293-வது பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டில் கேரளாவிற்கு நிகர கடன் வாங்கும் உச்சவரம்பை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த உச்சவரம்பு கேரளாவின் 2023-24-ஆம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 3% வரை கடன் வாங்குவதை கட்டுப்படுத்துகிறது. உச்சவரம்பு அனைத்து கடன் வகைகளையும் உள்ளடக்கியது. திறந்த சந்தைக் கடன்கள், நிதி நிறுவனக் கடன்கள் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இப்போது உச்சவரம்பில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களும் அடங்கும்.
இந்த உச்சவரம்பு கேரளாவிற்கு பெரும் நிதி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு தனது செலவுகளை சமாளிக்க போராடுகிறது. இந்த நடவடிக்கை மாநில அரசை வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களில் முதலீடு செய்வதை தடுத்துள்ளது. இது கேரளாவுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கேரளா அரசு இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அரசியலமைப்பின் 293-வது பிரிவை ஒன்றிய அரசு மீறியதாக கேரளா அரசு தெரிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு மாநிலங்களுக்கு அவர்களின் ஒருங்கிணைந்த நிதியைப் (guarantee of the Consolidated Fund) பாதுகாப்பாகப் பயன்படுத்தி கடன் வாங்கும் அதிகாரத்தை வழங்குகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கிய நிதி சுதந்திரத்தை (fiscal autonomy) ஒன்றிய அரசு சட்டவிரோதமாக குறைப்பதாக கேரளா கூறுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 293-வது பிரிவை பற்றி உச்ச நீதிமன்றம் முதல் முறையாக விளக்கியுள்ளது.
கடன் வாங்குவதற்கான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள்
அரசியலமைப்பின் பகுதி XII, அத்தியாயம் II கடன் வாங்கும் அதிகாரங்களை பற்றி பேசுகிறது. சட்டப்பிரிவு 292, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியைப் (Consolidated Fund of India) பாதுகாப்பாகப் பயன்படுத்தி மத்திய அரசு கடன் வாங்க அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 293 மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் கடன் வாங்க அனுமதிக்கிறது. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சட்டங்கள் மூலம் கடன் வரம்புகளை நிர்ணயிக்கலாம். அரசியலமைப்பின் பிரிவு 293(2)-ன் கீழ், இந்திய அரசு எந்த மாநிலத்திற்கும் கடன் கொடுக்கலாம். 292-வது பிரிவின் கீழ் இந்தக் கடன்களுக்கான நிபந்தனைகளையும் வரம்புகளையும் நாடாளுமன்றம் உருவாக்கலாம்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியைப் பயன்படுத்தி மாநிலங்கள் எடுக்கும் கடனுக்கு ஒன்றிய அரசு உத்தரவாதம் அளிக்க முடியும். பிரிவு 293(3) மாநிலங்களுக்கு இந்தியாவிடமிருந்து கடன்கள் அல்லது உத்தரவாதங்கள் நிலுவையில் இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் புதிய கடன்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதியை மாநிலங்கள் பெற வேண்டும். இந்த அனுமதிக்கு ஒன்றிய அரசு எந்த நிபந்தனைகளையும் விதிக்கலாம்.
சட்டப்பிரிவு 293, இந்திய அரசு சட்டம், 1935–ன் பிரிவு 163-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆகஸ்ட் 10, 1949 அன்று, சட்டப்பிரிவு 293 மீதான அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் கடன் வாங்குவது குறித்து கூடுதல் ஆய்வு தேவை என்றார். இந்த கடன்கள் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்று தனது கவலைகளை வெளிப்படுத்தினர். நிதி ஆயோக் போன்ற ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அனந்தசயனம் அய்யங்கார் பரிந்துரைத்தார்.
1935 சட்டத்தின் பிரிவு 163(4) “ஒப்புதல்” (‘consent’) பற்றிய தெளிவான விதிகளைக் கொண்டிருந்தது. கூட்டமைப்பு நியாயமான காரணமின்றி கடன்களை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியாது என்று கூறுகிறது. மாகாணங்கள் சரியான காரணத்தைக் காட்டினால், கூட்டமைப்பு நியாயமற்ற நிபந்தனைகளையும் விதிக்க முடியாது. இருப்பினும் சர்ச்சை எழுந்தால், அது மாகாண ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் மாகாண ஆளுநரின் முடிவே இறுதியானது.
இந்த விதி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் இருந்தது. இந்தியர்கள் அல்லாத வெளிநாட்டு நிறுவனம் நிர்வாகத்தை கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இந்த விதிமுறை சேர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சட்டம் இனி தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில அரசுகள் மாகாணங்களை மாற்றி, தேசிய அரசாங்கம் ஒன்றியத்தில் அமைந்தது.
வருவாய் பற்றாக்குறையை நீக்குதல்
2003-ஆம் ஆண்டு, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM) Act) சட்டம் 292-வது பிரிவின் படி நிதிக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க உருவாக்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறையை நீக்குவது மற்றும் நிதி பற்றாக்குறையை குறைப்பது போன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதைச் செய்ய, ஒன்றிய அரசு தனது ஆண்டு நிதிப் பற்றாக்குறை விகிதத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% இலக்கை நிர்ணயித்துள்ளது. ஒன்றிய அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி மாநிலங்களும் தங்கள் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த தங்கள் சொந்தச் சட்டங்களை இயற்றின.
2018-ஆம் ஆண்டு, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை திருத்தச் சட்டம் புதிய வரம்புகளை நிர்ணயித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% குறைவாகவும் மற்றும் 2025-26-க்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையை 4.5%-க்குக் கீழ் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, மாநிலங்களுக்கான கடன் வரம்புகளுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், மாநில சுயாட்சியில் தலையிடுவதாகவே பார்க்கப்படுகிறது. இது அவர்களின் வரவு செலவுத் திட்டங்களை திறம்பட சமநிலைப்படுத்தும் திறனைக் குறைக்கின்றன.
சட்டப்பிரிவு 293-ன் கீழ் மாநிலங்கள் கடன் வாங்கும் அதிகாரம் குறித்த கேரளாவின் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதை அரசியல் சாசன அமர்வு பரிசீலனை செய்யும். இந்த வழக்கில் நிதிப் பரவலாக்கம் (fiscal decentralisation) மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை அடங்கும். நிதி ஒருங்கிணைப்பு மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசின் விதிகள் பாதித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் நிதி நிலைமை மாறிவிட்டது. கட்டுரை 293-ஐ மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. 1935 சட்டத்தின் பிரிவு 163(4) தேவையற்ற தாமதம் அல்லது ஒன்றிய அரசு கடன்களை மறுப்பது குறித்து எச்சரித்தது. கடன் வாங்குவது தொடர்பான சிக்கல்களை கையாள அரசியலமைப்பில் இந்த விதியை சேர்த்திருக்கலாம்.
இந்த சட்டத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
பிரிவு 293 வலுப்படுத்தப்பட வேண்டும். அய்யங்கார் கூறியது போல், நிதி ஆணையம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கடன் பிரச்சினைகளை முடிவு செய்யும் போது மாநில நிதி மற்றும் ஒன்றிய அரசின் பற்றாக்குறை இலக்குகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரிவு 293(4) அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசிற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை. இது ஒன்றிய-மாநில நிதிகளை சமநிலைப்படுத்த உதவும் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தும். வழிகாட்டுதல்கள் இல்லாமல், முடிவுகள் தன்னிச்சையாக இருக்கலாம். இது அதிகப்படியான கடன் அல்லது பல கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
பிரிவு 293(4)-க்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: அரசு கடன்களை ஏற்கும் அல்லது நிராகரிப்பதற்கான விதிகள் தெளிவாகவும், பொதுமக்களுக்கு திறந்ததாகவும் இருப்பதை மையம் உறுதி செய்ய வேண்டும். கடன் வாங்கும் விதிகளை அமைக்கும் முன் மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. கடன் வாங்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் நிதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டும் மற்றும் மாநிலங்கள் தங்கள் நிதியை திறம்பட நிர்வகிப்பதில் இருந்து தடுக்கக்கூடாது.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் பிரிவு 293(4)-ன் கீழ் உள்ள ஒன்றிய அரசின் அதிகாரங்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இது சமநிலையான நிதி நிர்வாகத்தை பராமரிக்கவும் கூட்டுறவு கூட்டாட்சியை உறுதிப்படுத்தவும் உதவும்.
வித்யா வி. தேவன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரித்துறை நிறுவனத்தில் சட்டப் பேராசிரியராக உள்ளார். மீனு மோகன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரித்துறை நிறுவனத்தில் சட்டத்துறையில் உதவி பேராசிரியராக உள்ளார்.